2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்வித் தகைமையும் அரசியலும்

Johnsan Bastiampillai   / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

என்.கே. அஷோக்பரன்

 

 

 

அரசியலில் மாற்றம் வேண்டும் என்போர் பலரினதும் எண்ணப்பகிரல், ‘படிச்சவன் அரசியலுக்கு வரவேண்டும்’ என்பதாக இருக்கிறது.

‘படிச்சவன்’ என்ற சொற்பதத்தின் பயன்பாடு, கொஞ்சம் மேலோட்டமானது. ஆனால், பெரும்பாலும் இந்தச் சொல் ஏதோ ஒரு துறையில் கற்று, பட்டம் பெற்று, குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளமையைச் சுட்டியே, பொதுவில் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம்.

தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதி, படித்துப் பட்டம் பெற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்ற அவா, மக்களிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு ஒருவகையில், ஏலவே உள்ள அரசியல்வாதிகளின் நடத்தைகளும் நடவடிக்கைகளும், முக்கிய காரணமாக இருக்கிறது. இத்தகைய மோசமான அரசியல்வாதிகளை வெறுக்கும் மக்களிடையே, அவர்களின் மோசமான நடத்தைகளுக்குக் காரணம், அவர்கள் ‘படித்தவர்களாக இல்லை’ என்ற பொது மனப்பான்மை, ஏதோவொரு வகையில் உருவாகிவிடுகிறது. ஆகவே படித்தவர்கள், தொழில் நிபுணர்கள் அரசியலுக்கு வந்தால், அவர்கள் திறம்படச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை, மக்களிடையே ஏற்பட்டுள்ளதையும் காணலாம்.

இந்தப் ‘படித்தவர்களின் ஆட்சி’ என்பதை முன்னிறுத்தியே, சில கட்சிகள், அரசியல் குழுக்கள் அல்லது அழுத்தக் குழுக்கள், தமது அரசியலை முன்னெடுப்பதையும் நாம் காணலாம்.

இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூட, ‘வியத்மக’ என்ற ‘படித்த’ நிபுணர்களின் குழுவொன்றின் பலத்த ஆதரவுப் பின்புலத்திலிருந்து வந்தவர். அந்த நிபுணர்களின் ஆட்சியில், இலங்கையை மாற்றுவேன் என்ற சூளுரையோடு தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார்.

ஆனால், பாடசாலைக் கல்வியைத் தாண்டிப் படித்திராத, முன்னாள் கிராம சேகவரான மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சியை விட, மோசமான ஆட்சியாக இந்த ‘நிபுணர்’களின் ஆட்சி நடந்துகொண்டிருப்பதை, மக்கள் நித்தம் நித்தம் அனுபவம் மூலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டின் பெரும் சாபக் கேடான இனவெறித் தீக்கு, எண்ணெய் ஊற்றி, பெரும் தீப்பிளம்பாக மாற்றிய, தனிச்சிங்களச் சட்டத்தை அறிமுகப்படுத்திய எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
20ஆம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட பெரும் இனரீதியான புத்தக அழிப்பு யாழ்ப்பாண நூலக எரிப்பு ஆகும்.

20ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இன அழிப்பான 1983 கறுப்பு ஜூலை என்பன, சிலோன் பல்கலைக்கழகம், இலங்கை சட்டக் கல்லூரியில் ‘படித்த’ ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியில் நடந்தேறியிருந்தன.

“ஒரு மொழி, இருநாடு; இரு மொழி, ஒரு நாடு” என்று 1956இல் பேசிய கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வாவும் தனிச்சிங்களச் சட்டத்தை 1956இல் கடுமையாக விமர்சித்த கலாநிதி என்.எம்.பெரேராவும், சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக அறிவித்த, பௌத்த மதத்துக்கு முதலிடம் தந்த 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பை ஆதரித்திருந்தார்கள்.

சிலோன் பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பல்கலைக்கழகத்தல் ‘படித்த’ கொல்வின் ஆர் டீ சில்வா, கலாநிதி பட்டத்தை இலண்டன் பல்கலைக்கழகத்தின்  கிங்ஸ் கல்லூரியில் பெற்றிருந்தார். 

என்.எம். பெரேரா, இலண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்லூரியின் பேராசிரியர் ஹறல்ட் லாஸ்கியின் கீழ் கற்று, தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டதுடன், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞான முனைவர் பட்டத்தையும் பெற்று, இரட்டைக் கலாநிதிப் பட்டங்களைக் கொண்டிருந்தார்.
இந்த இருவரும் சிறிமாவோவின் அரசாங்கத்தில், அமைச்சர்களாகப் பதவி வகித்தது மட்டுமல்லாது, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பை ஆதரித்தும் இருந்தார்கள்.

தமிழர்களின் அரசியலைப் பொறுத்தவரையில், ‘தனிநாடு’ என்ற உணர்ச்சிவயப்பட்ட கோரிக்கையை, அதன் சாத்தியப்பாடுகள், அதன் குறுங்கால மற்றும் நீண்டகால விளைவுகள் என்பவற்றைப் பற்றிய எந்தச் சிந்தனையுமின்றி, எதுவித திட்டங்களுமின்றி அரசியல் பகட்டாரவாரமாக முன்வைத்தவர், ராஜா அப்புக்காத்துவான சா.ஜே.வே.செல்வநாயகம்.

செல்வநாயகத்தின் முன்வைப்பை, தனது அரசியலின் மூலதனமாக மாற்றியவர் ‘படித்த’ சட்டத்தரணியான அ.அமிர்தலிங்கம். இளைஞர்களைச் சரியான அரசியல் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமையைக் கொண்டிருந்தவர், இளைஞர்களை உணர்ச்சிவச அரசியலின் பாதையில் இட்டுச்சென்று, தமிழினத்தின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டார். அவர் இட்டதீ, அவரையே சுட்டது.

ஆகவே, ‘படித்த’ அரசியல்வாதிகளும் கூட, மிக மிக மோசமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்; மிக மோசமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்; மிக மிக மோசமான காரியங்கள் நிகழ்வதை அனுமதித்திருக்கிறார்கள்; தமது பதவியைக் காத்துக்கொள்ள, பிழையானவற்றை ஆதரித்திருக்கிறார்கள். அதனால், கல்வியறிவு அவசியமில்லை என்று ஆகிவிடாது. ஆனால், கல்வித்தகைமை மட்டும் ஓர் அரசியல்வாதியை சிறந்தவராக்கி விடாது.

முன்னர் குறிப்பிட்டதுபோல, இங்கு பொதுவாகக் கல்வித்தகைமையாக, அல்லது ஒருவரைப் படித்தவராகக் கருதுவதற்கு அடிப்படையாக அமைவது, அவர் முறையான கல்வியைப் பெற்று, பட்டம் பெற்றிருப்பதையே ஆகும். முறையான கல்வி என்பது, ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் முறையான கற்றல் வடிவமாகும். பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட தரத்தின் அடிப்படையிலான கல்வி இதுவாகும்.

பாலர் பாடசாலைக் கல்வி, பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி என முறையான கல்வி அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. முறையான கல்வி என்பது, ஆரம்பத்தில் வகுப்பறை அடிப்படையிலானது. அதாவது, ஒரு மாணவர் கற்றுக் கொள்ளும் அனைத்தும், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஒரே நோக்கத்துடன், புத்தகங்கள் மற்றும் பிற கல்விச் சாதனங்களூடு கல்வி புகட்டப்படுகிறது.

இங்கு, எவர் பாடத்திட்டத்தைத் தீர்மானிக்கிறாரோ, அவரே அந்தத் தலைமுறையின் ‘முறையான கல்வியறிவின்’ அளவையும் பெருமளவுக்குத்  தீர்மானிக்கிறார்.
பல்கலைக்கழகக் கல்வியில்தான் பெருமளவுக்கு ஆய்வு அடிப்படையிலான கல்வியை நோக்கி, முறையான கல்வி திரும்புகிறது. ஆனால், இது குறித்த நபர் தெரிவுசெய்த துறையிலுள்ள ஏதோ ஒரு விடயம் பற்றிய ஆழமான ஆய்வாகவே அமைகிறது.

ஆகவே, முறையான கல்வி என்பது, மனித அறிவை விருத்திசெய்யும் ஒரு வழியே அன்றி, முறையான கல்வி மட்டும்தான் மனித அறிவுக்கான அளவுகோல் என்பது ஏற்புடையதொன்றல்ல.

அரசியல் என்பது, மிகச் சிக்கலானதொரு கலை மட்டுமல்ல, ஆபத்தானதொரு கலையும் கூட. ஏனென்றால், அதிகாரத்தைக் கையாளும் கலை அது! அதற்குப் பரந்த அறிவு அவசியம். அறிவை விடவும் ஆற்றல் அவசியம்.

இவையெல்லாவற்றையும் விட, தரமான குணநலனும் நேர்மையும் நல்லெண்ணமும் அவசியம். அதிகாரம் என்பது, மிகப்பெரும் பலம் மட்டுமல்ல; மிகப்பெரும் பொறுப்பும் கூட!

ஜனநாயக உலகத்தில், அதிகாரம் என்பது மக்களுடையது; மக்களுக்கானது. அப்படியானால், அந்த மக்களின் நல்லெண்ணத்தை முன்னிறுத்துபவர் ஒருவரே, தன்னலமின்றி அதிகாரத்தை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தும் இயல்பினராவார். ஆனால், நல்லெண்ணம் மட்டும் போதாது.

அதிகாரத்தை எப்படி, மக்களின் நன்மைக்குப் பயன்படுத்துவது என்ற அறிவும் வேண்டும். அது, ஒரு துறைசார்ந்த அறிவாக இருக்க முடியாது. பரந்த அறிவும் அனுபவமும் அதற்குத் தேவை.

நல்லெண்ணமும் பரந்த அறிவும் மட்டும், காரியத்தைச் சாதிக்க உதவாது. அதற்கு எதையும் சாதிக்க வல்ல ஆற்றலும் இயலுமையும் அவசியம். இவையெல்லாம் ஒன்றிணையும்போதுதான் திறமையானதோர் அரசியல்வாதியாக அவர் துலங்குவார்.
ஆகவே, முறையான கல்விறிவு உடையவர்கள் அரசியலுக்கு வந்தால், அது நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்குமான சர்வரோக நிவாரணியாக அமையும் என்ற நம்பிக்கையில் அர்த்தமுமில்லை; உண்மையுமில்லை.

முறையான கல்விபெறாத காமராஜர், மக்களை நேசிக்கும் நேர்மையான, ஆற்றல் மிகு தலைவனாக இருந்தமையால், முறையான கல்வியைப் பெற்றுக்கொள்ள சாமானியர்களுக்குள்ள சவால்களை, தனது அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தமையால், மிகப் பரந்த சமூக, பொருளாதார, அரசியல் அறிவைக் கொண்டிருந்தமையால், அனைவரும் கல்வி பெறத்தக்க திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இப்படிப் பல உதாரணங்கள் உலகெங்கும் இருக்கிறது.

முறையான கல்வி பெற்றவர்களே, சிறந்த அரசியல்வாதிகளாவார்கள் என்று கருதுவதைவிட அபத்தமானது, ஆங்கிலம் நல்லாப் பேசுகிறான்; சிங்களம் நன்றாகப் பேசுகிறான்; தமிழ் நன்றாகப் பேசுகிறான்; இருமொழியாற்றல் உடையவன்; மும்மொழியாற்றல் உடையவன் என்பதால் மட்டும், ஒருவனை மிகச் சிறந்த அரசியல்வாதியாகக் கருதுவதாகும்.

மொழியாற்றலுக்கும் ஒருவனுடைய அறிவுக்கும் நல்லெண்ணத்துக்கும்  ஆற்றலுக்கும் எந்தச் சம்பந்தமும்மில்லை. இந்த அபத்தங்களைத் தாண்டி, மக்கள் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .