Janu / 2026 மார்ச் 04 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெருமளவில் அது தொடர்பாக கருத்துக்கள் பறிமாறப்பட்டுள்ள போதிலும் அவை எதுவும் நடுநிலையாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாக தெரியவில்லை. எல்லோரும் தத்தமது அரசியல் கண்ணோட்த்திலேயே பிரச்சினையை அணுகியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் இறுதியில் சட்ட நடவடிக்கையாகவே தீர்க்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் அதன் பின்னால் அரசியலும் இருப்பதாக தெரிவதால் பலர் அதனை அரசியல் கண்கொண்டு பார்ப்பதை குறைகூறவும் முடியாது. ஆனால் அதற்காக நடப்பவை எல்லாவற்றையும் அரசியல் கண்கொண்டு நியாயப்படுத்தவோ எதிர்க்கவோ முடியாது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆதரவாளர்களே இந்தக் கைதை கடுமையாக எதிர்க்கின்றனர். அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் சலே கோட்டாபயவின் நெருங்கிய நன்பராவார். அதேவேளை இந்த கைது கோட்டாவுக்கும் ஆபத்தானதாகுமென பலர் கருதுகின்றனர்.
புலிகளுக்கு எதிரான போரின் போது உளவுத்துறை அதிகாரியாக சலே பெரும் பணியாற்றியுள்ளார் என்றும் புலிகளின் பேச்சாளராக இருந்த தமிழ்செல்வனை விமானப் படையினர் சலேயின் வழிகாட்டலிலேயே கொன்றனர் என்றும் பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் அமைப்பின் தலைமையை ஏற்ற கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை 2009 ஆம் ஆண்டு ஓகஸ்;ட் மாதம் மலேசியாவில் வைத்து கைது செய்து இலங்கைக்கு அழைத்து வரும் திட்டத்தையும் சலேயே வகுத்தார் என்றும் எனவே அவரை கைது செய்தமை அநீதியாகும் என்றும் கோட்டாபயவின் சட்டத்தரணியும் அவரது அரசாங்கத்தின் அமைச்சருமான அலி சப்ரி கூறியிருந்தார்.
புலம் பெயர் தமிழர்களின் (தமிழ் டயஸ்போராவின்) தூண்டுதலிலேயே அரசாங்கம் சலேயை கைது செய்துள்ளதாக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற முன்னாள் ராஜபக்ஷ அதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்காக கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களை குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களும் இந்த கைதை குறை கூறி வந்தாலும் அவர்கள் அதற்காக வேறு வாதங்களையே முன்வைக்கின்றனர். நிலக்கரி இறக்குமதியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்துக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுக்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த கைது நாடகம் இடம்பெற்றுள்ளதாக ஐமச தலைவர்கள் கூறுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஏபரல் 21 ஆம் திகதியே இடம்பெற்றது. அதன் பின்னர் ஒவ்வொரு ஏப்ரல் 21 அம் திகதியும் தாக்குதலின் சூத்திரதாரியை அம்பலப்படுத்துமாறு கத்தோலிக்க திருச் சபையும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்தையும் வற்புறுத்தி வருகின்றனர். எனவே இவ்வருடம் ஏப்ரல் மாதம் நெருங்கி வரும் நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த கைதின் மூலம் கிறிஸ்தவ மக்களை ஏமாற்ற முயல்கிறது என்பது அவர்களின் மற்றொரு வாதமாகும். ராஜபக்ஷ அதரவாளர்களும் இந்த வாதங்களை முன்வைக்கின்றனர்.
கடந்த வருடமும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தாக்குலின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தவதாக அதற்கு அண்மித்த ஒரு நாளில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். உண்மையிலேNயு ஜனாதிபதி எங்கும் எப்போதும் சூத்திரதாரியை அம்பலப்படுத்தவுதாக கூறியதில்லை. ஆனால் ஏபரல் 21ஆம் திகதிக்கு முன்னர் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய புதிய தகவல்;களை அம்பலப்படுத்த முடியும் என நம்புவதாக அவர் கடந்த வருடம் மார்ச் 30 ஆம் திகதி மாத்தறை தெய்யந்தரவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறினார். அதைத் தான் எதிர்க் கட்சியினர் திரிபுபடுத்தி கூறுகின்றனர்.
இந்த வாதங்களில் சில ஒன்றோடு ஒன்று மோதுவதாகவம் தெரிகிறது. புலம் பெயர் தமிழர்களின் தூண்டதலைப் பற்றியும் நிலக்கரி ஊழலை மூடி மறைப்பதைப் பற்றியும் ஒரே நபர் கூறும் போது அது பொருத்தமற்றதாகவே தெரிகிறது. அதேவேளை புலம்பெயர் தமிழர்களின் தூண்டுதலிலா அரசாங்கம் கிறிஸ்தவ மக்களை ஏமாற்றப் போகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
போரின் இறுதி கட்டத்தில் இராணுவத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் இந்த வாதங்களை மறுத்துள்ளார். தமிழ்செல்வன் கொல்லப்பட்ட காலத்திலோ அல்லது கே.பி கைது செய்யப்பட்ட காலத்திலோ சலே இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளரராக இருக்கவில்லை என்றும் எனவே இந்த சம்பவங்களை பாவித்து சலேயை ஊதிப் பெருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை கே.பியை கைது செய்தமை பெரிய விடயமாக காட்;ட முயலும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் இலங்கைக்கு கொண்டவரப்பட்ட கேபிக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை குறிப்பிடுவதில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதிய சாட்சியங்கள் இல்லை என 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி அப்போதிருந்த தேசிய பாதுகாப்பு தொடர்டபான ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன ஹ_லுகல்ல கூறினார்.
கேபிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு 2015 ஆம் ஆண்டு அதாவது மைத்திரி-ரனில் அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்தார். ஆனால் அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்று சட்ட மா அதிபர் தெரிவித்ததை அடுத்து 2017 அம் ஆண்டு அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கேபியைப் பற்றிக் குறிப்பிட்டு சலேவுக்கு பெரும்பான்மை மக்களின் மத்தியில் பெருமை தேடிக்கொடுக்க முற்படும் பொதுஜன முன்னணி கேபியை எவ்வாறு நடத்தியது என்பது இதன் மூலம் தெரிகிறது.
அது எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விடயத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு நியாயம் வழங்குவதாக வாக்குறுதியளித்துவிட்டு பதவிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அந்தவிடயத்தில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டிய கட்டாத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தான் மேலே குறிப்பிடப்பட்டதைப் போல் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய தகவல்;களை அம்பலப்படுத்த முடியும் என ஜனாதிபதி அனுர குமார கடந்த வருடம் கூறியிருந்தார்.
பின்னர் கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை இரகசிய பொலிசார் கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் திகதி கைது செய்தனர்.
நேரடியாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலோடு சம்பந்தப்படாக விடயம் ஒன்றுக்காக அவர் கைது செய்யப்பட்ட போதிலும்; அத்தாக்குதலைப் பற்றி முன்னரே அவர் அறிந்திருந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வருடம் ஜூலை 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூறினார். ஒக்டொபர் மாதம் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் விஜேபால பிளளையானுக்கும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார்.
அமைச்சர் விஜேபாலவுக்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிள்ளையானின் முன்னாள் இணைப்புச் செயலாளர் ஹன்சீர் ஆசாத் மௌலானா இது போன்றதோர் தொடர்பைப் பற்றி பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கூறியிருந்தார். ஜோசப் பரரஜசிங்கம் கொலை தொடர்பாக பிள்ளையான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் சைனியும் 2017 ஆம் ஆண்டு வன்முறை சம்பவவம் ஒன்று தொடர்பாக அதே சிறையில் அடைக்கப்டடதாகவும் அப்போது பிள்ளையானுக்கும் சைனிக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதாகவும் மௌலானா அந்நிகழ்ச்சியல் கூறினார்.
இந்தத் தொடர்பை அடுத்து பிள்ளையானின் ஆலோசனைப் படி தாம் சலேக்கும் சஹ்ரானுக்கும் இடையில் சந்திப்பொன்றை 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புத்தளம் கரடிப்பூவலில் ஏற்பாடு செய்ததாகவும் அச்சந்திப்பை முடித்துக்கொண்ட சலே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கு நாட்டில் பதற்ற நிலைமை உருவாக வேண்டும் என்று தம்மிடம் கூறியதாகவும் அவர் அந்நகழ்ச்சியல் மேலும் கூறினார்.
மௌலானாவின் கூற்றுக்களைப் பற்றி விசாரிக்க 2023 ஆம் ஆண்டு ரனில் விக்ரமசிங்க நியமித்த இமாம் குழு அக்கூற்றுக்களை நிராகரித்தது. இந்தப் பின்னணியில் தான் அநுர குமார 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியானார். அவர் உடனடியாக அரம்பித்த விசாரணைகளின் படி அதே ஆண்டு பிள்ளையான் விசாரிக்கப்பட்டடார். பின்னர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார்.
அவர் பேராசிரயர் ரவீந்திரனாத் விவகாரத்துக்காக கைது செய்யப்பட்ட போதும் தெற்கில் சில அரசியல்வாதிகள் அப்போது பதற்றமடைந்தனர். ரனில் அவரோடு பேச அனுமதி கேட்;டார். கம்மன்பில தாமாகவே முன்வந்து அவரது சட்டத்தரணியானார்.
இவற்றையெல்லாம் பார்க்கும் மௌலானா கூறியதைப் போல் ஏதும் நடந்து இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது. நீதிமன்றம் முடிவெடுக்கட்டும்.
04.03.2026
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago