Editorial / 2026 ஏப்ரல் 24 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து சிற்சபேசன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, ஏப்ரல் 23-இல் பூர்த்தியடைந்துள்ளது. அதனால், ஒரு பெரும் புயல் கடந்துபோன உணர்வுடன் தமிழகம் சற்று ஆசுவாசமடைகின்றது; ஆனால், அரசியல்வாதிகளினதும் அவர்களுடைய தீவிரத் தொண்டர்களினதும் ‘திக் திக்’ கணம் தொடர்கின்றது. தேர்தல் முடிவு மே 4-இல் வெளியாகும் வரையிலான காத்திருப்பு இப்போது ஆரம்பமாகிவிட்டது.

எது எப்படியாகிலும், தேர்தல் திருவிழாக் காலங்களிலே சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை. ஒருபுறம் அரசியல்வாதிகளின் கூட்டு, உடைவு, கட்சித்தாவல் எனக் காட்சிகள் விரிகின்றன; மறுபுறத்தில், பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களும் ‘ரோட்ஷோ’க்களும் (Roadshows) கண்கவர் காட்சிகளாகின்றன. பெருந்தலைகள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்கள் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்படுகின்றன; அதற்காக விசாலமான இடங்கள் தெரிவுசெய்யப்படுகின்றன.
சனத்திரளுக்கு நடுவே கட்சித்தலைவர் நடந்து செல்வதற்கு, ‘ரேம்ப் வாக்’ (Ramp Walk) என்று சொல்லக்கூடிய உயரமான ‘நடைமேடை’ அமைக்கப்படுகிறது. அதனூடாக மக்களை நோக்கித் தலைவர் வருவது போன்ற அமைப்பு உருவாக்கப்படுகின்றது; இதனால் சனத்திரளிடையே தலைவரினால் லாவகமாகச் செல்ல முடிகின்றது. அவ்வாறாகவே, தலைவர் மிக நெருங்கி வருவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. மிகக் கிட்டிய தூரத்தில் தலைவரைக் கண்டதும் சாமானியர்கள் குஷியாகின்றனர்; அதேவேளையில், யாரேனும் தலைவரை நெருங்க முற்பட்டால் ‘பவுன்சர்களினால்’ (Bouncers) துவம்சம் செய்யப்படுகின்றனர்.
ஒருகாலத்திலே அழகிப்போட்டி மற்றும் ‘பேஷன் ஷோ’க்களிலேயே (Fashion Shows) ‘ரேம்ப் வாக்’ முறை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதிலே பெண்கள் ஒய்யாரமாக நடந்து வருவது போன்று காட்சிகள் அமைக்கப்படுவதுண்டு; அத்தகைய ‘ரேம்ப் வாக்’கையே அரசியல் மேடைகளிலும் இப்போது காண முடிகின்றது. அதிலே தலைவர்கள் ஒய்யார நடை பயில்கின்றனர்.
மறுபுறத்தில், சாமானியர்கள் அமரக்கூடிய பகுதிகள் பாதுகாப்பானதாக அமைக்கப்படுகின்றன. சுமார் ஐநூறு பேர் அமரக்கூடியதாகத் தனித்தனிப் பகுதிகள் உருவாக்கப்பட்டுத் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன; அதன் மூலமாக நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது. மேலதிகமாக, யாருமே பசி அல்லது தண்ணீர் தாகத்தால் அவதிப்படாத அளவுக்குக் கவனிக்கப்படுகின்றனர். பிரியாணி, குடிதண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவை பொதிசெய்யப்பட்டு, கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆசனங்களிலே வைக்கப்படுகின்றன. போதியளவு வாகனத் தரிப்பிட வசதியும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இத்தகைய பிரம்மாண்டமான அரசியல் கூட்டக் கலாசாரத்தை ஆரம்பித்த முன்னோடிகளில், பாட்டாளி மக்கள் கட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வண்டலூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மகாநாடு, இப்புதுமைகளின் ஆரம்பமாகியது. தலைவருக்கான ‘ரேம்ப் வாக்’ மேடை, அதிலே நடந்துகொண்டே பேசுகின்ற அமைப்பு, சட்டையிலேயே பொருத்திக்கொள்ளக்கூடிய ‘காலர் மைக்’ (Collar Mic) எனப் பல்வேறு வியக்கவைக்கும் நடைமுறைகள் அப்போது ஆரம்பமாகின.
முன்னொரு காலத்தில், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் ஒற்றை மைக் வைத்து கூட்டம் நடத்தினார்கள்; அதன்பின்னர், நான்கு ஐந்து பெஞ்சுகளைச் சீரான வரிசையாக்கி அரசியல் மேடை தயாராகியது. அதுவே காலவோட்டத்தில், பிரத்தியேக மேடை அமைக்கும் கலாசாரமாக மாறியது. அதனுடைய தொடர்ச்சியாகவே பிரம்மாண்டமான மேடை, ‘ரேம்ப் வாக்’, சட்டையிலே பொருத்தக்கூடிய ‘காலர் மைக்’ என்று இன்றைய காலகட்ட அரசியல் மேடை கலகலப்பாக ஆகியுள்ளது.
ஒருகாலகட்டத்திலே வாகனங்களுக்கு மேலே ஏறி நின்று மட்டுமே பேசினார்கள்; ஆனால் இன்று தேர்தல் பிரசாரத்திற்குப் பிரத்தியேக வாகனங்களே தயாரிக்கப்படுகின்றன. அதிலிருந்துகொண்டே பேசலாம்; வாகனத்தின் உட்பகுதியிலிருந்தே ‘லிப்ட்’ (Lift) மூலமாக வாகனத்தின் மேற்பகுதி வரை வெளியே வந்து பேசலாம் என ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் பிரத்தியேகமாக வாகனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அத்தகைய வாகனங்களிலே ஓய்வெடுக்கப் படுக்கை, உணவு உண்ணக்கூடிய ஏற்பாடு, கழிப்பறை என ஏகப்பட்ட வசதிகளும் உருவாக்கப்படுகின்றன.
அத்தோடு ‘ரோட்ஷோ’க்களும் நடத்தப்படுகின்றன. அதன்போது விசாலமான வாகனத்திலே நின்றுகொண்டோ அல்லது அமர்ந்துகொண்டோ தலைவர் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படுகின்றது. தெருவோரங்களிலே சாமானியர்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர்; வாகனத்திலே தலைவரைக் காணும்போது அவர்கள் ஆரவாரிக்கின்றனர். இவ்வாறான பாணியிலேயே மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், மோடி என வெவ்வேறு தலைவர்களும் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் 12-ஆவது மாநில மாநாடு, மார்ச் 9-இல் நடைபெற்றது. அண்மையிலே நடைபெற்ற பிரம்மாண்டமான பிரசாரக் கூட்டங்களிலே அதுவும் ஒன்றாகும். சுமார் ஐநூறு ஏக்கர் பரப்பளவில், இருபது இலட்சம் சதுர அடிக்கு அரங்குகளும், மூன்று இலட்சம் வரையானவர்கள் அமர்வதற்கும், ஏழு இலட்சம் வரையானோர் நின்று பார்க்கக்கூடிய வகையிலும் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டிருந்தது. உணவு, குடிநீர், வாகனத் தரிப்பிடம் என ஒவ்வொரு ஏற்பாடும் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருந்தது என்று சொல்லப்படுகின்றது.
கழகக் கொடியை ஏற்றுவதற்காக, நூறு அடி உயரமான பிரம்மாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ போன்ற மகுட வாசகங்கள் மாநாட்டின் கருப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டன. மாநாட்டுக்குத் திரண்ட தொண்டர்களின் கூட்டத்தால், சிறுகனூர் அமைந்துள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை மக்கள் மற்றும் வாகனக் கடலாகக் காட்சியளித்ததாகவே வர்ணிக்கப்பட்டது.
இவ்வாறாக, ஒரு ‘கார்ப்பரேட்’ (Corporate - செழுமையான வர்த்தக) நிறுவனத்தின் பிரத்தியேகக் கூட்டம் போன்ற புதுமை, கவர்ச்சி, பயனாளர்களுக்கான வசதி எனத் தமிழகத்தின் அரசியல் கூட்டங்கள் மாற்றமடைந்திருக்கின்றன. ‘ரேம்ப் வாக்’கில் தலைவர்கள் ஒய்யார நடை நடக்கின்றனர்; இப்படியான விடயங்களே தமிழக அரசியலை இன்று சுவாரஸ்யமாக்குகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .