2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

மீனவரை முழங்காலில் இருத்திச் சித்திரவதை: கடற்படை அதிகாரிக்கு பிணை

Editorial   / 2026 ஏப்ரல் 24 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராஜா சரவணன்

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் இருத்தித் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரியைக் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தை மீண்டும் விசாரணை செய்து, 1994-ஆம் ஆண்டின் 22-ஆம் இலக்கச் சித்திரவதை தடுப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ்    போதிய சாட்சியங்களுடன் எதிர்வரும் 22-ஆம் திகதி புதிய வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு நீதவான் புதன்கிழமை (22) கட்டளையிட்டார்.

செட்டிபாளையம் கடற்கரையில், கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர்  கடந்த 5-ஆம் திகதி சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நந்தீசன் என்பவர் சுருக்கு வலை பயன்படுத்தியதாகவும், ஈயம் வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி அவரைக் கைது செய்துள்ளனர். அங்கு அவரை சுமார் 2 மணிநேரம் முழங்காலில் இருத்தி அடித்துச் சித்திரவதை செய்ததாகப் பாதிக்கப்பட்ட மீனவர் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 8-ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

  முறைப்பாட்டைத் தொடர்ந்து, பொலிஸார் குறித்த கடற்படை அதிகாரியைப் புதன்கிழமை கைது செய்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இதன்போது, பொலிஸார் தண்டனைச் சட்டக்கோவையின் 314-ஆம் பிரிவின் கீழ் (சாதாரண காயம் விளைவித்தல்) வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

பாதிக்கப்பட்டவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். “பாதிக்கப்பட்டவரை முழங்காலில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்துள்ளமை பாரதூரமான செயலாகும். இதனை 1994-ஆம் ஆண்டின் 22-ஆம் இலக்கச் சித்திரவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யாமல், பொலிஸார் எதிராளிக்குச் சாதகமாகச் சாதாரண பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். மேலும், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பொலிஸார் நேரடியாகப் பதிவு செய்திருந்தும் அவற்றை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர்,” எனத் தனது வாதங்களை முன்வைத்தார்.

  இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், பொலிஸார் தற்போது 314-ஆம் பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளதால் அந்தப் பிரிவின் கீழ் கடற்படை அதிகாரியை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். அதேவேளை, இந்தச் சம்பவத்தை மீண்டும் முழுமையாக விசாரணை செய்து, சித்திரவதை தடுப்புச் சட்டத்தின் 1-ஆம் பிரிவின் கீழ் உரிய சாட்சிகள் மற்றும் சான்றுப் பொருட்களுடன் எதிர்வரும் 22-ஆம் திகதி புதிய வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்குக் கடும் உத்தரவு பிறப்பித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .