Janu / 2026 ஜனவரி 11 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தம் தவம்
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராஜ்ஜிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும். அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டுமென தமிழகத் தலைவர்களை வலியுறுத்த தமிழ் தேசிய மக்கள் அண்மையில் சென்னைக்கு பயணமானது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த தமிழகத் தலைவர்களுடனான சந்திப்புக்கான தமிழக விஜயம் தமது அரசியல் இருப்புக்கு பாதகமாக அமைந்து விடும் என்பதால் இலங்கை தமிழரசுக் கட்சியினர் உடனடியாகவே ''இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை கொழும்பில் சந்திக்கவுள்ளோம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம்அடைக்கலநாதன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர் என தமிழரசுக்கட்சி சார்பானவர்களினால் தகவல்கள் வெளியிடப்பட்டன.
தமிழகம் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி -தமிழ் தேசியப் பேரவை ,தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ,தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி,நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,திராவிடர் கழகத் தலைவர் வீரமணி,தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன், பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம. க. தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள், தரப்புக்களுடன் சந்திப்புக்களை நடத்தி தமிழர்தேசம். இறைமை,சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்புஉருவாக்கப்பட தமிழகத்தலைவர்கள் ஒருங்கிணைந்து செயலாற்றுவதுடன் இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இந்த விஜயம் இலங்கை அரசினாலும் உற்று நோக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் தமிழரசுக்கட்சியினரே எதிர்பாராத வகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை கொழும்பில் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொது செயலாளர் சுமந்திரன். சிறீதரன் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம்அடைக்கலநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சந்தித்தனர்.இந்த சந்திப்பில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென இந்தியா தற்போதைய இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற வலியுறுத்தலே தமிழ் அரசியல் தரப்பில் பிரதானமாக இருந்தது.
இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அழைப்பு விடுக்கப்படாது.அவர் சமஷ்டியை வலியுறுத்தி தமிழகத் தலைவர்களை சந்தித்தது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை என்றவாறாக தமிழரசுகட்சிக்கு சார்பான சிலரால் தகவல்களை வெளியிடப்பட்டன . மாறாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தியத் தூதரகத்தினால் ஜெய்சங்கருடனான சந்திப்புக்கு அழைக்கப்பட்ட நிலையில் தமிழரசுக்கட்சியுடன் கூட்டு சேர்ந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சித் தலைவர்களான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோருடன் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரான நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தான் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த சந்திப்பில் ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு வருகை தர இருக்கின்றார் அவர் மாகாண சபை முறைமையையே ஒழித்து, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஆளுநர் மூலம் மாகாணங்களை நிர்வகிப்பது பற்றிப் பேசுகிறார். அவருக்குத் தெளிவான அறிவுறுத்தலை புதுடில்லி வழங்க வேண்டும் என்றவாறாகவும் தமிழ் தேசியக்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது .ஆனால் ரில்வின் சில்வாவின் புதுடில்லி வருகை டித்வா புயல் பாதிப்புக் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுளதாகத் தெரிவித்த ஜெய்சங்கர் மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பிலும் பெரிதாக அக்கறை காட்டிப்பேசவில்லை. தற்போது இலங்கையில் இயற்கைப் பேரனர்த்த பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பில் தற்போதைக்கு இலங்கை அரசுடன் பேச முடியாது என்றவாறாகவே ஜெய்சங்கரின் கருத்துக்கள் அமைந்திருந்தன.
இந்த சந்திப்பிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முக்கியமாக ,இந்திய இலங்கை ஒப்பந்தம், தமிழ் மக்களுடையஅரசியல் அபிலாஷைகள், மக்களுடைய அபிலாஷைகளோடு நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மிகத்தெளிவாக வலியுறுத்தி இருக்கின்றது.அந்த அபிலாஷைகள் நடைமுறைப்படுத்தப்படுவது என்ற பெயரிலே இலங்கை அரசாங்கம் 13 ஆம் திருத்தத்தை ஒற்றையாட்சி முறைக்குள் கொண்டு வந்து மட்டுப்படுத்தின. 13ஆம் திருத்தம் தொடர்பான ஒற்றையாட்சி கட்டமைப்பு சம்பந்தமாக இலங்கை உச்சநீதிமன்றம் மிக தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றது. அதில்,அதிகாரங்கள் மத்தியில் மட்டும்தான்இருக்கலாமே தவிர மாகாணங்களுக்கோ வேறு எந்தஒரு கட்டமைப்புக்கோ வழங்கப்பட முடியாது என்றுள்ளது.
அந்த வகையிலே மிகவும் இறுக்கமான ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் தான் 13 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய- இலங்கை ஒப்பந்தம், தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளான தமிழ் தேசத்துடைய அங்கீகாரம் ,தமிழ் தேசத்துடைய தனத்துவமான இறைமையின் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய - குறிப்பாக, திம்பு கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதான திருத்தங்களை உள்ளடக்கியிருந்தபோதும், அவற்றை ஒற்றையாட்சி முறைக்குள் முடக்கியதால், 13 ஆம் திருத்தம் நிறைவேற்றி 38 வருடங்களின் பின்னரும் தமிழ் மக்கள் எதையும் அனுபவிக்க முடியாமல் உள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை நாங்கள் அடைய முடியாமல் இருக்கிறது.
ஆகவே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்ட விடயங்களை நாங்கள் அடைவதாக இருந்தால், அதிலே அடிப்படை மாற்றமொன்று நடைபெறவேண்டும். குறிப்பாக- இலங்கையின் அரசியலமைப்பு ஒரு சமஸ்டி கட்டமைப்பாக மாற்றி அமைக்கப்பட்டே ஆக வேண்டும். இல்லாதுவிடின் - இந்த 13ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து 38 வருடங்களாக இந்தியாவும் அதை நடைமுறைப்படுத்த சொல்லி கேட்கின்ற நிலையில், வரும்காலங்களிலும் , நடைமுறைப்படுத்மாறு கோரும் கோரிக்கையையே நாங்கள் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தவிரஅதற்கு அப்பால் எதுவுமே நடக்கப் போவதில்லை என்ற விடயத்தை தெளிவாக ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார்.தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை ஒற்றையாட்சிக்குள் காண முடியாது என்பதை இந்திய வெளியுறவு அமைச்சரும் ஏற்றுக்கொண்டார் .
அதேவேளை இந்த சந்திப்பிலே கலந்து கொண்ட தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றும் மாகாண சபை முறைமையிலே 13ஆம் திருத்தம்நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் திரும்பத்திரும்ப கேட்டார்களே தவிர, தங்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையான ஒற்றையாட்சி கோட்பாடு நிராகரிப்பையும் சமஷ்டி ஆட்சிமுறைமையையும் அவர்கள் வலியுறுத்தவில்லை.ஆனால் அரசியல் தீர்வு தொடர்பாக ஒற்றையாட்சிக்குள் தீர்வுகாண முடியாது என நாங்களும் தெரிவித்தோம். தீர்வு சமஷ்டிக் கட்டமைப்பில் இருக்க வேண்டும் அதற்கு என்ன பெயர் கொடுக்கப்பட்டாலும் அந்த கட்டமைப்பு சமஷ்டியாக இருக்க வேண்டும் என சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார் என சுமந்திரன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
எது எப்படியோ தமிழகத் தலைவர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி - தமிழ் தேசிய பேரவை சந்தித்திருப்பதும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்தித்திருப்பதும் ரில்வின் சில்வா தாமதித்தேனும் புதுடெல்லி செல்லும்போது தமிழர் விடயத்தில் இந்திய அழுத்தம் கொடுக்குமென நம்பலாம் . தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தியாவிடம் வலியுறுத்தும் நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சி-ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி அதற்கு நேர்மாறாக மாகாண சபைத்தேர்தலை விரைவில் நடத்த அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவிடம் கோரியுள்ளது.தமிழ் தேசிய முன்னணிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி- ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான இந்த இரு நிலைப்பாட்டு அரசியல் போட்டியால் தமிழர் தரப்புக்கு ஏதேனும் நன்மைகள் கிடைக்குமா என்பதே கேள்வியாகவுள்ளது.
08.01.2026
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago