Janu / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
'டிட்வா' சூறாவளி மிகப் பெரிய அனர்த்தமொன்றை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இந்த வரலாறு மற்றொரு ஆறா ரணத்தை உருவாக்கியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் இதனை யாரும் மறக்கமாட்டார்கள். சூறாவளி என்றால் 1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியை எமக்கு முந்திய சந்த்கள் ஞாபகப்படுத்துவதுண்டு.
ஆனால், ஒரு சூறாவளி எப்படியிருக்கும், அதன் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போதைய சந்ததியும் 'டிட்வா' மூலமாக உணர்ந்திருக்கிறது. ஆழிப்பேரலையான சுனாமியினுடைய தாக்கம் இலங்கையின் கரையோரங்களை இலக்கு வைத்தது. 'டிட்வா' சூறாவளியானது மத்திய பகுதியை இலக்கு வைத்திருந்தது. இவை இரண்டுமே இயற்கைகளின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்கள் என்ற வகையில் அவற்றினை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி
யாருக்கும் இருக்கவில்லை.. ஆனால் அதனுடைய தாக்கங்களைக் குறைப்பதற்கான இயலுமை இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் நடந்து முடிந்த பின்பு அதனைப்பற்றி ஆலோசித்துப் பயனில்லை என்ற முடிவுக்கே இப்போது வர முடிகிறது.
மிகப் பலவீனமான பொருளாதார சூழலுள்ள வேளையில், வெளிநாடுகளுக்குச் செல்லும் போதும். இராஜதந்திரிகளைச் சந்திக்கும் வேளைகளிலும் இலங்கையின் பொருளாதார
மீட்சிக்கு உதவுங்கள் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கோரிக்கைகளை
அடுக்கிக் கொண்டிருந்த வேளையில்தான் நாட்டின் மீது விழுந்த மற்றொரு பெரும் அடி தித்வா. இதிலிருந்து இலங்கை மீள்வதற்கு வெளிநாடுகள் உதவிகளை வழங்க வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள சிவில் சமூகத்தினருடைய ஒத்துழைப்புகள் அவசியமானது.
சவால்கள் நிறைந்த சூழலில் ஒத்துழைப்புகளுக்குப் பஞ்சம் இருப்பது ஆபத்தானது.
அவ்வளவு விரைவாக மீளமுடியாத நிலைமையே காணப்படும் இன்றைய நிலையில், மனிதாபிமான, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைச் சமாளிப்பதிலேயே அரசாங்கம் காலத்தினைக் கடத்த வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என்றுதான் கூறமுடியும். இதுவரை வெளியான தரவுகளின்படி, வெள்ளம், மண்சரிவுகள் காரணமாக 640 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 211 பேர் காணாமல்
போயிருக்கின்றனர்.
473,138 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,637,960பேர் அடங்குகின்றனர். இடைத்தங்கல் முகாம்கள் இப்போதும் இயங்குகின்றனர். உயிரிழந்த, காணாமல்போனவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளம் தாக்கிய பகுதிகளிலுள்ள வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக நிதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இழப்பீடுகளை வழங்குவதற்கான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்றுச் சென்ற ஒருதொகை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கடமையடிப்படையில், சேவைக்கு ஈர்க்கப்பட்டிருக்கின்றனர்.
சரியான மதிப்பீகளின் பின்னரே நாட்டில் ஏற்பட்ட அழிவுகள் சரி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
நாட்டில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியால் அடுத்த வருடத்துக்கான மொத்த செலவு அதிகரித்திருக்கிறது. தேசிய உற்பத்தியில் பாதகமான தாக்கம் ஏற்படக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டிருக்கிறது.
பொருளாதாரம் நெநருக்கடியைச் சந்தித்து கொண்டிருந்த வேளையில், மேலும் ஏற்படப்போகும் நெருக்கடியைச் சமாளித்துக்கொள்வதற்கான வேலைகளில் அரசாங்கம் ஈடுபடவேண்டிய நிலைமை
உருவாகியிருக்கிறது.
நிகழ்ந்தேறிய பேரழிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதில் அரசாங்கம் கட்டுப்பாடுகளற்ற நடைமுறையை அறிவித்துள்ளது. இருந்தாலும், சில தினங்களுக்கு முன்னர் அனர்த்த நிலைமையிலிருந்து குறுகிய நாட்களுக்குள் இயல்புநிலைக்கு நாடு திரும்புவதற்கு நன்றி தெரிவித்துள்ள
ஜனாதிபதி தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரணம் வழங்குங்கள்.
உத்தியோகத்தர்கள் அவதானத்துடன் செயற்படுங்கள் என்று ஒரு அறிவுரையினை வழங்கியிருக்கிறார். இதற்குக் காரணம் இந்த நிவாரண நடவடிக்கையில் கையாளப்படுகின்ற அவதானமற்ற தன்மையையே வெளிப்படுத்துகின்றது. செயலற்ற தன்மையானது குழப்பங்கள், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனம் போன்றவற்றை உருவாக்கலாம்.
இந்த இடத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய மூலோபாயத் திட்டம், திட்டமிடப்பட்ட நிதியாதார முறைமைகள் ஏதுமற்ற நிலையில் எழுந்தமானமாக அவசர தேவை கருதிக் கொண்டு வரப்பட்ட ஒழுங்குகள் தவறான சூழலை உருவாக்காது பாதுகாக்கவேண்டிய தேவையுள்ளது என்பது நினைவிலிருத்தல் அவசியமானது. தேசிய அனர்த்த முகாமைத்துவம், தேசிய கட்டுமானம், திட்டமிடல், நாட்டின் மீள வடிவமைப்பு எனப் பல விடயங்கள் இதற்குள் காணப்படுகின்றன. சமூகப் பொருளாதார யதார்த்தத்தை கருத்தில் கொண்டு இதன் அடிப்படைகள் வரையறுக்கப்படவேண்டும்.
நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் ஆழிப்பேரலை அனர்த்தத்திற்கான பாதுகாப்பு முறைமை உருவாக்கப்பட்டது. அதற்காகப் பல மில்லியன் செலவில் முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டன.
தானியங்கிப் பொறிமுறைகள் உருவாக்கப்பட்டன. முன்னாயத்தச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அனைத்து மக்களும் இதற்கு ஒத்துழைப்பதில்லை. இதற்குள் பொறுப்பற்ற மனோநிலை இதில் தாக்கம் செலுத்துவதைக் காணலாம்.
அதே போன்று முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிக்காத வரையில் அவற்றினால் பயன் ஏற்படப்போவதில்லை. அதே போன்று அரசாங்க அதிகாரிகளும் மக்களின் மீதான தீவிரமான அக்கறையுடன் செயற்படுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன என்றே சொல்லலாம்.
இந்த நிலையில்தான் பேரிடர் முகாமைத்துவத்திற்கான ஒருமுறைமை, சட்டம் உருவாக்கப்பட் வண்டும் என்று அரசாங்கம் முனைப்புக் காட்டியிருக்கிறது.
ஆனால், நாட்டில் பேரிடர் முகாமைத்துவச் சட்டம் இருக்கையில் வேறொரு திட்டம் எதற்காக என்ற கேள்வியை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுப்பியிருக்கிறார். இது அரசியல் தனமானதல்ல என்றாலும், ஆட்சிகள் மாறும்போது முன்னைய ஆட்சிகளின் திட்டங்களையும் கைவிடுகின்ற நிலைமை
ஆபத்தானது. இதிலிருந்து நாம் மீண்டுவரவேண்டும். அந்தவகையில்தான், அவசர அவசரமாக உருவாகின்ற அனர்த்த நிலைமைகள் ஆபத்துகளையே ஏற்படுத்தும் என்பது தெரிந்திருந்தாலும் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படாத வகையில் ஒரு அனர்த்த முன்னேற்பாட்டை மேற்கொள்வதற்கான திட்டமிடல் இலங்கையில் இல்லை என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக் கொண்டேயாகவேண்டும்.
முன்னர் குறிப்பிட்ட பகுதிகளில் மண்சரிவுள் ஏற்பட்டிருந்தன. தித்வா சூறாவளி அனர்த்தத்தில் மலைப்பாங்கான பகுதிகளில், மண்சரிவுகள் ஏற்பட்டன. இந்த அனர்த்தம் ஏற்படும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுதான் அதிக அழிவுகளுக்குக் காரணமாகும்.
இந்த ஆபத்திலிருந்து மக்களை மீட்பதற்கான தயார் நிலை இருக்கவில்லை என்பதும் நினைவில் இருத்தப்படவேண்டும். குறைபாடுகள் பேரழிவை அதிகப்படுத்தியிருக்கின்றன என்பதே உண்மை.
முழுமையான அழிவுகள், இழப்புகள் கணிப்பிடப்படாத நிலையில், நடைபெற்று வருகின்ற அரசியல்களை ஓரங்கட்டிவிட்டு அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புக்களிலிருந்து மக்களை மீட்பதற்கே முயலவேண்டும்.
சூறாவளி ஏற்படுவதற்கான ஆபத்திருப்பது அறிவிக்கப்பட்டமையினால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை. அதனால் மீனவர்களது உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. தூர இடங்களுக்கான பயணங்கள் வெள்ள நீர் காரணமாக தடைப்பட்டிருந்தமையினால் ஓரளவுக்குத் தவிர்க்கப்பட்டிருந்தன.
இருந்தாலும் ஆபத்தான பகுதிகளிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பான இருப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இருந்தாலும், 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்தம் சூறாவளியாக மாறிநாட்டை அல்லோலகல்லோலம் ஆக்கிவிட்டிருக்கின்ற சூழலில் இனிமேல் நடைபெறவிருக்கின்ற அனர்த்தங்களிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான வழிகளையே தேட வேண்டும் என்பது அனைத்து தரப்பினருடைய நினைவிலும் இருத்தப்படுவதைத் தவிர வேறுவழியில்லை.
எது எவ்வாறானாலும், சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்களை குறைத்திருக்க முடியாமைக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படுவதும் அதற்கான கட்டமைப்பு மற்றும் நிறுவன ரீதியான ஏற்பாடுகளை ஏற்படுத்துவதும் இப்போதைய தேவை என்பதே யதார்த்தம். எனவே, குறைபாடுகளைத் தேடுவதை விடுத்து ஒத்துழைப்புடன் கூடிய
செயற்பாட்டு முறைமைக்குள் நாடு உள்நுழைவதே எதிர்காலத்துக்கான தீர்மானமாக இருக்கும்.
ஆனாலும், சரியான திட்டமிடல்கள், திட்டங்கள் இன்றி நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது, அவற்றினை பயன்படுத்தாமல் இருப்பது. அனர்த்தங்களுக்கான ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை அமைப்புகளை பராமரிக்கப்படாமை. சரியான கொள்கை வகுப்புகளின்மை. என பல விடயங்கள் குறித்து நாடு தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய 'டிட்வா'வுக்கு நன்றிகளைச் சொல்வோம். இனி வருங்காலத்துக்கான மேம்பாட்டுக்காக ஒத்துழைப்புகளுக்கான வழிகளை ஏற்படுத்துவோம்.
2025.12.15
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025