2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தோட்டங்களின் தேசிய மயமாக்கல் என்ற பேரினவாத நிகழ்ச்சிநிரல்

Johnsan Bastiampillai   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 07

இலங்கை 1972 மே 22இல்  குடியரசாகியதைத் தொடர்ந்து, மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கை,, காணிச் சீர்த்திருத்தமும் தோட்டங்களின் தேசிய மயமாக்கலும் ஆகும்.
1972 ஓகஸ்ட் 26ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட காணிச் சீர்திருத்தச் சட்டம், நீண்டகாலப் பாதிப்புகளைக் கொண்டிருந்தது. காணிகளை அரசுடைமையாக்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ், தோட்டங்கள் தேசிய மயமாக்கல் முக்கியமானதாக இருந்தது.

தோட்டங்களைத் தேசிய மயமாக்கும் கொள்கை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடம் முன்னரே இருந்த போதும், தேயிலை வணிகத்தில் அந்நியக் கம்பனிகளின் கணிசமான செல்வாக்கு, அதை நடைமுறைப் படுத்துவதற்குத் தடையாக இருந்தது.

இலங்கை சுதந்திரமடைந்தபோது, தோட்டங்களில் 70% பிரித்தானியரிடமும் இலங்கையர் அல்லாதவர்களிடமுமே இருந்தன. 1972இல் இது 30% குறைந்து விட்டது. இது குறித்த விரிவான தரவுகளை ஜி.எச். பீரிஸ் 1978ஆம் ஆண்டு Modern Asian Studies இதழுக்கு எழுதிய டுயனெ Land Reform and Agrarian Change in Sri Lanka என்ற கட்டுரையில் விரிவாக ஆராய்கிறார். 

1970ஆம் ஆண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்பது முக்கியமானது. தேயிலைத் தோட்டங்களைத் தேசிய மயமாக்கியதன் மூலம், அரசாங்கம், தேயிலைத் தோட்டங்களை நாட்டின் உடைமையாக்க மட்டுமே முயன்றிருந்தால், அதன் நோக்கங்களை சந்தேகக்கண் கொண்டுபார்க்க இயலாது போயிருக்கும்.

ஆனால், தேசிய மயமாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் ஒரு பகுதி, அரசாங்கப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திடமும் மிகுதி ‘உசவசம’, ‘ஜனவசம’, ‘நட்சா’ போன்ற நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டன. இந்தத் தேசிய மயமாக்கல் திட்டத்தின் பின்னால், ஒரு பேரினவாத வேலைத்திட்டம் இருந்தது.

இந்த நிலவுரிமை மறுப்பு, மலையகத் தமிழருக்கு மிக நீண்டகாலமாகத் தொடரும் அவலம். இதற்கு, மலையகத்தின் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து விலைபோனார்கள். 1970களில், மலையகத் தமிழருக்கு எதிரான ஒரு மனோநிலை, சிங்களத் தேசியவாதிகளால் வலுவாகக் கட்டமைக்கப்பட்டு விட்டது. இதன் ஆரம்பகர்த்தா ரணசிங்க பிரேமதாஸவின் அரசியல் குருவான ஏ.இ. குணசிங்க.
சிங்களவர்களுக்குச் சொந்தமாக இருந்த காணிகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, தோட்டப் பயிர்ச்செய்கைக்காகவும் வந்தேறிகளான மலையகத் தமிழருக்கும் வழங்கப்பட்டன என்ற கருத்து ஆழமாகப் பரப்பப்பட்டது. இதில் ஜே.வி.பியின் பங்கும் கணிசமானது. இதனால், பிரித்தானியர் காலத்தில் சிங்களவர் இழந்த காணிகளைப் பறிமுதல் செய்து, அதைச் சிங்களவர்களுக்குக் கொடுப்பதே நியாயமாகும் என்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

தோட்டங்களின் தேசியமயமாக்கல், மலையக மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கியது என்பதை ‘நட்சா’, ‘உசவசம’, ‘ஜனவசம’ போன்ற நிறுவனங்களின் செயல்கள் காட்டி நின்றன. ‘உசவசம’ நிறுவனத்துக்குப் பொறுப்பளிக்கப்பட்ட தோட்டங்களில் இரண்டுவிதமான போக்குகள் இருந்தன. ஒருபுறம் தோட்டநிலங்கள் காடுகளாக்கப்பட்டன. இதன்மூலம் வேலையிழப்பு நிகழ்ந்தது.
இன்னொருபுறம், தோட்டக்காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள்.

சிங்களவர்களுக்கு வீதிகளுக்கு அருகாமையில் காணிகள் வழங்கப்பட்டு, தமிழரின் வாழ்விடத்தை முற்றுகையிடும் வகையில் சிங்களவர்கள் தங்கள் குடியேற்றங்களை அமைத்தார்கள். இது ‘பொக்கெற் கொலனிகள்’ என அழைக்கப்பட்டன. அங்கு குடியேறிய சிங்களவர்களுக்கு வேலை வழங்குவதற்காகத் தோட்டங்களில் புதிய வெற்றிடங்கள் உருவாக்கப்பட்டன. ஏற்கெனவே வேலையில் இருந்த பலர், வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். 

இதேவேளை, வீழ்ச்சியடைந்து வினைத்திறனற்ற தேயிலைத் தோட்டங்களில், மாற்றுப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதன் ஊடு, அவற்றை வினைத்திறன் உள்ளதாக மாற்றுவது என்ற கொள்கையுடன் ‘நட்சா’ செயற்பட்டது. ‘நட்சா’விடம் கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்டங்கள் கையளிக்கப்பட்டு,  மாற்றுப்பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பட்டு, சணல் செய்கையும் மல்பரி வளர்ப்பும் பிரதானமாகின. தேயிலை, இ‌றப்பர் செய்கைகள் கைவிடப்பட்டதோடு தோட்டங்களும் மூடப்பட்டன. இம்மாற்றத்தால் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். வாழ்வாதாரம் ஏதுமற்ற நிலையில், தோட்டங்களை விட்டு வெளியேறினார்கள். கூட்டுவாழ்க்கை வாழ்ந்த தொழிலாளர்கள், சிதறிச் சீரழிய நேர்ந்தது.

அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், ‘ஜனவசம’ ஆகியவற்றின் பொறுப்பின்கீழ் வந்த தோட்டங்கள், தொடர்ந்தும் தோட்டங்களாக நடத்தப்பட்டன. அங்கும் ‘பொக்கெற் கொலனி’களும் சிங்களவர்களுக்கு காணிப்பங்கீடும் வழங்கப்பட்டன. காணிப்பங்கீட்டில் தமிழ்த் தொழிலாளர்களுக்கு நிலங்கள் வழங்கப்படவில்லை.

தோட்டங்களைத் தேசியமயம் ஆக்கியமையால், தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் வேலையிழப்பு, வீடின்மை, காணியின்மை, வேறு தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இன்மை எனப் பல்முனைகளில் நெருக்கடிகளை எதிர்நோக்கினார்கள். பலர் பட்டினியால் வாடினார்கள். வேலையும் இருப்பிடமும் தேடித் தோட்டம் தோட்டமாய் அலைந்தார்கள். இக்காலப்பகுதியிலேயே பலர் வேலைதேடி, வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குப் பயணமானார்கள்.

இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியின் விளைவால், இறக்குமதிகள் நிறுத்தப்பட்டு உள்நாட்டு உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டன. கோதுமைக்குப் பதிலாக மரவள்ளியும் அரிசியும் பதிலீடாகின.

1974-75ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட வரட்சி, தேயிலைப் பயிர்ச்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், மேலதிகமாகப் பலர் வேலையிழந்தனர். பெருநகரங்களில் முதியோரும் பெண்களும் குழந்தைகளும் பிச்சையெடுப்பது, அன்றாடக் காட்சிகளாயின.  அக்காலத்தில் அரசாங்கம் ஐந்தாவது அணிசேரா மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. விருந்தாளிகளுக்கு இந்தப் பஞ்சமும் அவலமும் தெரியக்கூடாது என்பதற்காகப் பிச்சைக்காரர்கள் தேடித்தேடி லொறிகளில் ஏற்றப்பட்டார்கள்.

இக்காலப்பகுதியில், தோட்டங்களுக்குள் சிங்களக் காடையர்கள் புகுந்து தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர். இது மலையக் தமிழரைத் தோட்டங்களையும் நாட்டையும் விட்டு அகற்றும் இனவாத நிகழ்ச்சிநிரலின் பகுதியானது. இத்தாக்குதல் சம்பங்கள், மெதுமெதுவாக அதிகரித்து 1976இல் உச்சத்தைத் தொட்டன. நீண்ட தொழிற்சங்கப் பாரம்பரியம் கொண்ட தோட்டங்களில் வேலைகள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டன. தமிழ்த் தொழிலாளர்களின் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டது. அதற்குப் போட்டியாக சிங்களத் தொழிற்சங்கங்கள் உருவாகின. இவ்விடத்தில் 1960களில் மலையகத்தில் வலிமை பெற்றிருந்த தொழிற்சங்கங்களின் நலிவும், தொழிற்சங்கத் தலைவர்கள் பதவிகளுக்காக அரசுடன் இணங்கிய சுயநலமும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

இக்காலப்பகுதியில் இலங்கைப் பிரதமர் சிறிமாவோவுக்கும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் நல்லுறவு இருந்தது. குறிப்பாக, 1971 ஜே.வி.பி கலவரத்தை அடக்குவதில் இந்தியாவின் உதவியைத் தொடர்ந்தும் இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்தியா, இலங்கையுடன் சில உடன்படிக்கைகளைச் செய்தது.  இவற்றில் இரண்டு பிரதானமானவை. முதலாவது, கச்சதீவை இலங்கைக்கு அளிப்பது. இரண்டாவது, மலையகத் தமிழரின் குடியுரிமைப் பிரச்சினை பற்றிய சிரிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் விடுபட்டிருந்த 150,000 மலையகத் தமிழரை இரண்டு நாடுகளும் சம அளவில் ஏற்பது. இதில் கவனிப்புக்குரியது யாதெனில், 1964ஆம் ஆண்டு எட்டப்பட்ட சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் மலையகத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போக்க, இந்த உடன்பாடும் முன்வரவில்லை.

இக்கட்டத்தில், மலையகத் தமிழரின் வாழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அவர்கள், இலங்கையில் தொடர்ந்து வாழ்வதைப் பற்றிய நம்பிக்கையை இழந்திருந்தார்கள். எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி, இந்தியாவுக்குப் போவதாக முடிவு செய்தவர்களால் தமது முடிவை மாற்றிக்கொள்ள இயலவில்லை. இந்தியாவுக்கான இடப்பெயர்வு படிப்படியாக வேகமடைந்தது. அதன் விளைவாகப் பல குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. இந்த உடன்படிக்கை, இன்னொரு பேரிடியாக மலையகத் தமிழர்களின் மீது விழுந்தது.

இவ்வாறு பல்முனைத் தாக்குதல்களுக்கு மலையகத் தமிழர்கள் உள்ளானார்கள். தோட்டங்களைத் தேசிய மயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் பின்னே, வலிய பேரினவாதத் திட்டமிடல் ஒளிந்திருந்தது. இன்றுவரை சிறிமாவின் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய காணிச் சீர்திருத்தம் பற்றிப் பேசுவோர், அதன் பொருளியல் அடிப்படையில் அமைந்த விடயங்களையே ஆராய்ந்திருக்கிறார்கள்.

அதற்கப்பால், இது மலையகத் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய சமூகப் பண்பாட்டு அரசியல் தாக்கங்கள், ஆழமான ஆய்வுகளுக்கு உள்ளாகவில்லை. இவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்ட போதும் மலையகத் தமிழ் அரசியல் தலைமைகளும் இலங்கை தமிழ் அரசியல் தலைமைகளும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X