2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா’

Johnsan Bastiampillai   / 2022 மே 02 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

என்.கே. அஷோக்பரன்

 

 

 

மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகச்செய்துவிட்டு, எல்லாக் கட்சிகளில் இருந்தும் ஆதரவைப் பெற்று, ஓர் அரசை அமைக்க, ஜனாதிபதி கோட்டா துடித்துக்கொண்டிருப்பதை அறிக்கைகள் சுட்டி நிற்கின்றன.

மறுபுறத்தில், “நான் ஒருபோதும் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை; வேண்டுமானால் என்னைப் பதவி நீக்கவும்” என வௌிப்படையாகவே சவால் விட்டிருக்கிறார் மஹிந்த.

ஏற்கெனவே பசில், சமல், நாமல் ஆகிய ராஜபக்‌ஷர்கள், தங்கள் அமைச்சரவைப் பதவிகளிலிருந்து விலகியுள்ள நிலையில், இன்றைய அமைச்சரவையைப் பொறுத்தவரையில் கோட்டாவும் மஹிந்தவும் ஆகிய இரண்டு ராஜபக்‌ஷர்கள் மட்டுமே அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள். இதில் மஹிந்தவையும் விலக்கிவிட்டால், கோட்டாவைத் தவிர வேற எந்தவொரு ராஜபக்‌ஷவும் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்.

மறுபுறத்தில், எதிர்த்துக்கொண்டு நிற்கும் எதிர்க்கட்சிகளையெல்லாம் ஒன்றிணைத்து ஆட்சி அமைத்துவிட்டால், தனது பதவியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று கோட்டா சிந்திக்கலாம்.

மக்கள் எதிர்ப்பு, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகக் கடுமையாகக் கிளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், மற்ற ராஜபக்‌ஷர்கள் வேறு; நான் வேறு என்று காட்டி, பிழைகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சாட்டிவிட்டு, கோட்டா தன்னை வேறுபடுத்தி, நல்லவனாகக் காட்ட விளைகிறாரோ?

கோட்டா, அடிப்படையில் ஓர் அரசியல்வாதி இல்லை. கோட்டாவின் மிக நெருங்கிய வட்டம், அரசியல்வாதிகளால் ஆனது அல்ல. மஹிந்த, பசில், நாமல், சமல் ஆகியோரின் அரசியல் வட்டத்திலிருந்து, கோட்டாவின் அரசியல் வட்டமும் வேறுபட்டது. ஆகவே, இன்று கோட்டா உட்பட ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் மக்கள் எதிர்ப்பிலிருந்து கோட்டாவைக் காப்பாற்ற, கோட்டாவின் வட்டம் கையிலெடுத்திருக்கும் புதிய முயற்சிதான் இந்த மாற்றமோ என்ற எண்ணம் எழுவதும், தவிர்க்க முடியாதது.
அப்படியானால், இந்த இடத்தில் எழும் முக்கிய கேள்வி, ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் உடைவு ஏற்பட்டுவிட்டதா என்பதே!

‘குடும்பம்தா’ன் ராஜபக்‌ஷர்களின் பலமும் பலவீனமும். இதுவரைகாலமும் பலமே விஞ்சிநின்ற குடும்பம்; இன்று பலவீனம் விஞ்சி நிற்கிற நிலைக்கு வந்தவுடன், குடும்பத்தை கைவிடும் நடவடிக்கையை கோட்டா செய்கிறாரோ என்ற எண்ணம் எழுவது இயல்பானதே.

“குடும்ப ஆட்சி” என்ற குற்றச்சாட்டுத்தான் ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று. தான் நினைத்தபடி ஆட்சியை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டதற்குக் காரணம், தனது குடும்பத்தினரின் தலையீடுதான் என்று கோட்டா நம்புவாராக இருந்தால், அது முழுமையாக மறுக்கப்பட முடியாது. எனினும், இன்றைய ஆட்சிப்பிழைகளுக்கு கோட்டா தன்னுடைய பங்கினை மறுத்துவிட முடியாது.

இரவோடிரவாக இரசாயன உரத்தை தடைசெய்யும் அடிமுட்டாள்தனமான முடிவை யார் எடுத்தது? இலங்கையின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளிய முடிவுகளை எடுத்த மத்திய வங்கி ஆளுநர்களான டபிள்யூ.டீ.லக்ஷ்மன், அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை, அந்தப் பதவிக்கு நியமித்தது யார்? நிறைவேற்று அதிகாரம் யார் கையில் இருக்கிறது? ஆகவே, தனது குடும்ப உறுப்பினர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு, கோட்டா அவ்வளவு இலகுவாக பொறுப்புத்துறப்பு செய்துவிட முடியாது.

இது அரசியல்; இவர்கள் அரசியல்வாதிகள். இவர்களின் செயல்களை மேலோட்டமாகப் பார்க்காது, ஆழமாகப் பார்க்க வேண்டியது அவசியம் என்று சிலர் எண்ணலாம். ஆகவே, மேலோட்டமாக நடப்பதை மட்டும் அவதானிக்காது, இன்னொரு வகையில் சிந்தித்தால், இன்று ஏற்பட்டிருக்கும் ராஜபக்‌ஷ எதிர்ப்பலையை அடக்க, உண்மையில் அதிகாரங்கள் நிறைந்த ஜனாதிபதி ராஜபக்‌ஷவைத் தவிர, மற்றைய ராஜபக்‌ஷர்களை அரசாங்கத்திலிருந்து விலத்தி வைத்துவிட்டால், ராஜபக்‌ஷர்களுக்குள்ளேயே ஒரு முரண்பாடு இருக்கிறது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டால், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான அலை அடங்கிவிடும்; அல்லது, திசைதிரும்பிவிடும் என்ற திட்டத்தின்படியே, ‘ராஜபக்‌ஷ குடும்பம் உடைந்துவிட்டது’ என்ற விம்பம் கட்டமைக்கப்படுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது! ஆனால், இதற்காக தன்னையும் தனது பெயரையும் மதிப்பையும் பலிகொடுக்க, மஹிந்த தயாரா என்பதுதான் இங்கு முக்கிய கேள்வி.

கோட்டா, மஹிந்தவை பதவி நீக்குவது நாடகமா, இல்லையா என்பதை அறிவதற்கு ஒரு வழி இருக்கிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தலைவர் மஹிந்ததான். அந்தக் கட்சி பசிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கட்சி முடிவையும் கட்டுப்பாட்டையும் மீறி, பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டால், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்க முடியும். அப்படி முறையாக நீக்கப்பட்டால், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழப்பார்கள். இது நடந்தால், இந்த முரண்பாடு உண்மையில் பாரதூரமானது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இல்லையென்றால், இந்த முரண்பாட்டின் உண்மைத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படும்.

எது எவ்வாறாயினும், இது எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைச் சுட்டி நிற்கிறது. ‘கோ ஹோம் கோட்டா’, ‘கோ ஹோம் ராஜபக்‌ஷஸ்’ போராட்டங்கள் ராஜபக்‌ஷர்களை நிலைகுலையச் செய்துள்ளது. ‘ராஜபக்‌ஷர்கள்’ என்ற, பெரும் பகீரதப் பிரயத்தனங்களால் கட்டியெழுப்பப்பட்ட விம்பம், தனது மதிப்பை இழந்துபோய் இருக்கிறது.

‘கோ ஹோம் கோட்டா’, ‘கோ ஹோம் ராஜபக்‌ஷஸ்’ போராட்டங்களின் பெரும் வெற்றி என்பது, ஊதிப்பெருப்பிக்கப்பட்டிருந்த ‘ராஜபக்‌ஷ’ விம்பங்களை, ஓர் ஊசி நுனியின் சிறு அழுத்தத்தில் பலூன் வெடிப்பதைப் போல, ஒன்றும் இல்லாததாக்கியதுதான். உச்சரிக்கவே பலரும் அஞ்சிய ‘கோட்டா’ எனும் பெயர், “கோட்டா கொப்பயா” என தூசிக்கப்படுகிறது.

ராஜகம்பீரத்துடன் “மஹ ரஜானனீ” என்று பாடல்பாடிப் புகழப்பட்ட மஹிந்த, ‘நாக்கி மைனா’ (கிழட்டு மைனா) ஆனார். பசிலைப் பொறுத்தவரையில், அன்று மிஸ்டர் 10%, இன்று ‘கபுடா’ (காகம்). ஆகவே அதில் பெரிய மாற்றமில்லை. நாமல் இன்று, ‘பேபி மைனா’ ஆகியிருக்கிறார்!

இது எல்லாம், ராஜபக்‌ஷர்கள் கனவிலும் எதிர்பார்த்திராத நிலை. தாம் இப்படி ஓர் அசிங்கத்தை, அவமானத்தைச் சந்திப்போம் என்று கோட்டாவோ, மஹிந்தவோ கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் கவலையும், நாமலுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், என்ன செய்வது என்று தெரியாமல், சமூக ஊடகங்களில் சில உளறல்களையும் பதிவுசெய்து வருகிறார். நிற்க!

இந்த நாடகத்தின் உச்சக்காட்சி, இந்தவாரம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம். ஒன்றில் கோட்டா, மஹிந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தான் பல கட்சிகளையும் ஒன்றிணைத்த அரசாங்கமொன்றை அமைக்கலாம்
அப்படியானால், அதில் பிரதமர் யார் என்ற கேள்வி எழுகிறது. பிரதமர் என்பது, இன்றைய நிலையில், ஒரு மதிப்பு மிக்க ‘டம்மி’ (பொம்மை); அவ்வளவுதான்! ஆனால், மதிப்பு மிக்க ‘டம்மி’யாக இருப்பதற்கு, இங்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. 

அல்லது, கோட்டாவும் மஹிந்தவும் ஒரு சமரசத்துக்கு வந்து, மஹிந்த பிரதமராகத் தொடர்ந்து கொண்டு, பல கட்சிகளையும் ஒன்றிணைத்த அரசாங்கமொன்றை அமைக்கலாம். ஆனால், அதற்கு பல கட்சிகளும் சம்மதிக்குமா என்பது சந்தேகமே.
எல்லாவற்றையும் விட, இதில் எது நடந்தாலும், அது களத்திலிறங்கிப் போராடும் மக்களையும் அவர்களது கோரிக்கைகளையும் திருப்தி செய்யுமா என்பது மிக முக்கிய கேள்வி.

இந்த இடத்தில், இன்னொரு முக்கிய கேள்வியும் எழுகிறது. இங்கு பல கட்சிகளையும் ஒன்றிணைத்த அரசாங்கம் என்று முன்மொழியப்படுவதில், அங்கம் வகிக்கப் போகும் கட்சிகள் எவை? ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்று, அரசாங்கத்தில் அங்கம் வகித்து, பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்ட, மற்றும் அரசாங்கத்தை விட்டு விலகிய உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை உள்ளடக்கியதுதான் இந்தப் புதிய அரசாங்கமா? அப்படியானால், இதற்கும், இதற்கு முன்னிருந்த அரசாங்கத்துக்கும் கட்சிக்கட்டமைப்பு ரீதியில் என்ன வித்தியாசம்?

மறுபுறத்தில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலிருந்து, எவரேனும் இந்த அரசாங்கத்தில் இணைந்துகொள்ளப் போகிறார்களா? அப்படியானால், அதனை மக்கள் எப்படிப் புரிந்துகொள்வது? பதவிக்காக கட்சிமாறிவிட்டார்கள் என்றா?
நிறையக் கேள்விகள் தொக்கி நிற்கின்றன. இந்தவாரம், இதில் சிலவற்றுக்கேனும் பதில் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .