Janu / 2026 ஜனவரி 11 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்

ஒரு நாட்டில் கொடுங்கோள் அட்சியை நடத்தும் ஒரு தலைவனுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சர்வதேச நிறுவனங்களிடமும் சிலவேளை குறிப்பிட்ட சில வெளிநாடுகளிடமும் முறையிடுவது சகஜமான விடயமாகும். இலங்கையிலும் சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் கட்சிகள் வருடா வருடம் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் போர் காலததில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கேட்டு முறையிடுகின்றன.
ஆனால் அவ்வாறு முறையிடுவோர் தமக்கு அநீதி இழைத்ததாக கருதப்படும் தலைவர்களை சட்டத்துக்கு முரணாக தண்டிக்க வேண்டும் என்று கேட்பதில்லை. சிலவேளை சட்டத்துக்கு முரணான முறையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.
அவ்வாறானதோர் நிலைமையை நாம் இப்போது தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் காண்கிறோம். அமெரிக்கப் படைகள் கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் தலைநகரான கரக்காஸின் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதியாக இருந்த நிக்கலஸ் மடுரோவை பலாத்காரமாக அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றுள்ளனர். கடந்த திங்கட்கிழமை அவர் நியூயோர்க் நகரில் உள்ள நீதிமன்றமொன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் கடத்திச் செல்லப்பட்டதை அடுத்து வெனிசுவேலா நாட்டிலும் ஏனைய சில நாடுகளிலும் வாழும் வெனிசுவேலா நாட்டவர்கள் சிலர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளதாக செய்திகள் கூறின. இலங்கையில் போர் காலத்தில் ஆட்சி செய்தவர்களுக்கு அந்த நிலைமை ஏற்பட்டாலும் சிலவேளை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பலர் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.
ஆயினும் அமெரிக்கா வெனிசுவேலாவில் செய்ததை சர்வதேச சட்டத்தை மதிக்கும் எவராலும் அனுமதிக்க முடியாது. உலகில் எந்தவொரு நாடும் அச்செயலை நியாயப்படுத்தியதாக செய்திகள் வரவில்லை. இவ்வாறு உலகில் பிரச்சினைகளை தீர்க்க ஏனைய பலம் வாய்ந்த நாடுகளும் முற்பட்டால் சர்வதேச சட்டம வெறும் கேளிக்கூத்தாகிவிடும். ஏற்கனவே அது நடந்துவிட்டது.
பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புச் செயலை கண்டித்துள்ளன. அமரிக்காவிலும் சில அமைப்புக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.
இலங்கையில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் பிரதான உறுப்புக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புச் செய்லுக்கு இரண்டு விதமாக தமது எதிர்வினையை காட்டியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி இவ்வாக்கிரமிப்பை கடுமையாக கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனை கண்டிக்கவில்லை. மாறாக அது சர்வதேச சட்த்தை மீறும் செயல் என்று மட்டும் கூறியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்து தெரிவித்த வெளிவிவாகர அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் ஊடகவியலாளர்கள் இந்த வேறுபாட்டைப் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் மக்கள் விடுதலை முன்னணியானது தனியொரு கட்சி என்றும் அரசாங்கமானது பல கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பொன்றால் வழிநடதத்தப்படுவதாகவும் அக்கட்சிகளுக்கு இந்த விடயத்தில் பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம் என்றும் கூறினார்.
ஒரு வாதம் என்ற அடிப்படையில் இது சரி தான். ஆனால் கூட்டரசாங்கமாக இருந்தாலும் அவ்வரசாங்கம் முக்கியமான விடயங்களின் போது கூட்டாக முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த விடயத்தின் காரணமாக அரசாங்கம் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டியேற்பட்டால் அது கூட்டு முடியவாகத் தான் அமைய வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணியானது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தையும் ஏகாதிபத்தித்தையும் நிராகரிக்கும் இடதுசாரி கட்சியொன்றாகும். எனவே அக்கட்சி சர்வதேச சட்டம் எதுவாக இருந்தாலும் மேற்குலக மேலாதிக்கத்தை எதிர்க்கும் கட்சி என்ற வகையில் அது இவ்வாக்கிரமிப்பை கண்டித்தேயாக வேண்டும்.
அரசாங்கம் இவ்வாக்கிரமிப்பை கண்டிக்காவிட்டாலும் இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்னும் போது அது கண்டனத்துக்கரியதாக தான் இருக்க வேண்டும். அது தனி கட்சி அரசாங்கமா பல கட்சிகளின் அரசாங்கமா என்பது முக்கியமல்ல. ஆயினும் இந்த இடத்தில் தத்துமுவார்த்த அடிப்படையிலன்றி தந்திரோபாய ரீதியிலேயே அரசாங்கம் பிரச்சினையை அணுகியுள்ளது.
இந்நாட்டிலோ ஏனைய நாடுகளிலோ எது நடந்தாலும் அரசாங்கம் அதைப் பற்றி தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கூச்சலிடும் எதிர்க் கட்சிகள் இந்த விடயத்தில் மூச்சு விடாமல் இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முன்னணி சோஷலிச கட்சி போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே தமது கண்டனத்தை தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி போன்ற எந்தப் பிரதான எதிர்க் கட்சியும் வெளியே கேட்கும் வகையில் வாய் திறக்காமல் இருப்பதையும் விளங்கிக்கொள்ள நாம் முயல வேண்டும். அவை அமெரிக்காவை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை போலும். அரசாங்கத்திடம் உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்ட ஊடகவியலாளர்களும் அக்கட்சிகளிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை.
அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையிலான முறுகலானது வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியின் எதிரொலி என்றே கூற வேண்டும். ஜனாதிபதி மடுரோ போதைப் பொருள் கடத்தலை ஊக்குவித்து வருவதாகவும் டன் கணக்கில் போதைப் பொருட்களை அமெரிக்காவுக்குள் அனுப்புவதாகவும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றஞ்சாட்டியே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெனிசுவேலாவை தாக்கி அதன் ஜனாதிபதியை கடத்த உத்தரவிட்டார். மடுரோ கடத்தப்பட்ட அன்றே ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த டிரம்ப் முறையாக ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமரிக்கா வெனிசுவேலாவை ஆட்சி செய்யும் என்றும் அமெரிக்க எண்ணெய் கம்பனிகள் வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகளின் பொறுப்பை ஏற்று அவற்றை அபிவிருத்தி செய்யும் என்றும் கூறினார்.
இந்தக் கூற்றின் உள்ள முரண்பாடு மிகத் தெளிவானது. மடுரோவை கடத்தக் காரணம் இந்த போதை பொருள் குற்றச்சாட்டு என்றால் அவரை கடத்தி தமது நாட்டுக்கு இழுத்துச் சென்றதன் பின்னர் அமெரிக்க ஏன் வெனிசுவேலாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும்? மடுரோவை தமது படைகள் கைது செய்ததை அடுத்து வெனிசுவேலாவின் உப ஜனாதிபதி டெல்ஸி ரொட்ரிகுவெஸ் ஜனாதிபதியாக பதவிப் பிரமானம் செய்து கொண்டுள்ளதாகவும் அவர் தமக்கு ஆதரவளிப்பதாக தமது இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோவிடம் தெரிவித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.
உப ஜனாதிபதி டெல்ஸி வெனிசுவேலாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதை டிரம்ப் விரும்புவதாக இந்தக் கூற்றின் மூலம் தெரிகிறது. அவ்வாறாயின் அமெரிக்க ஏன் வெனிசுவேலாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் போவதாக டிரம்ப கூறுகிறார்? இந்த விடயத்தில் டிரம்ப் கூறுவது உண்மையல்ல. வெனிசுவேலாவின் உப ஜனாதிபதி டெல்ஸி அமெரிக்கவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறுவது உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர் அமெரிக்க ஆக்கிரமிப்பை கண்டித்தும் மடுரோவை விடுவிக்குமாறும் அவரே தமது நாட்டின் ஒரே ஜனாதிபதி என்றும் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்து இருந்தார்.
அமெரிக்கப் படைகள் மடுரோவை கடத்தியதற்காக டிரம்ப் தெரிவித்த காரணத்தை உலகில் மிகச் சிலர் மட்டுமே ஏற்றுக்கொண்டிருப்பாரகள். முழு உலகமே அதனை ஏற்றுக் கொண்டாலும் அமெரிக்க வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றிக் கொள்வiதை எவராலும் நியாயப்படுத்த முடியாது.
உண்மையிலேயே இது போதைப் பெருள் சம்பந்தப்பட்ட பிரச்சினையொன்றல்ல. இது அமெரிக்கா வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றிக்கொள்ள செய்த மிக மோசமான அத்துமீறலாகும். இதனை உப ஜனாதிபதி டெல்ஸியும் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அமெரிக்க தமது எண்ணெய் வளத்தையும் கனிம வளத்தையுத் இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கவே தமது நாட்டில் பலாத்கால ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறியிருந்தார்.
மற்றுமொரு முக்கியமான விடயமும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. வெனிசுவேலா ஜனாதிபதி மடுரோ கடந்த காலத்தில் தமது நாட்டு எண்ணெய்யை அமெரிக்க டொலர் அடிப்படையலன்றி யூரொ மற்றும் சீன யூவான நாணய அடிப்படையில் விற்பனை செய்து வந்தார். இது அமெரிக்காவின் கோபத்துக்கு பிரதான காரணமொன்றாகியது.
அமெரிக்க வெளிநாடுகளின் இயற்கை வளங்களை அபகரிப்பதற்காக பல்வேறு வழிகளில் அந்நாடுகளின் ஆட்சியை கவிழ்த்துள்ளது. 2003 ஆம் ஆண்டு ஈராக்கின் சத்தாம் ஹ_சைனின் ஆட்சியையும் 2011 ஆம் ஆண்டு லிபியாவின் முஅம்மர் கத்தாபியின் ஆட்சியையும் அமெரிக்கத் தலைவர்கள்; இவ்வாறே பொய்க் கற்றச்சாட்டுகளை சுமத்தி பலாத்காரமாக கவிழ்தனர். அந்நாடுகளில் கொடுங்கோள் அடசியை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்டவே தாம் அந்த ஆட்சி மாற்றங்களை செய்ததாக அமெரிக்க தலைவர்கள் அப்போது கூறினர். ஆனால் இன்று அந்நாடுகளில் அரசியல் நிலையற்றத் தன்மையும் சண்டையும் பஞ்சமுமே நிலை நாட்டப்பட்டுள்ளன.
தமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத தலைவர்களின் நாடுகளில் இது போன்ற நிலையை உருவாக்குவதே அமெரிக்க தலைவர்களின் நிலைப்பாடாகும். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் இதனை உணர்ந்துள்ளது போலும். அவரது கட்சி எவ்வளவு தான் இடதுசாரி கட்சியாக இருந்த போதிலும் இதனால் தான் அவரது அரசாங்கம் கடந்த காலத்தில் அமெரிக்காவையும் அதன் அடிவருடியான இஸ்ரேலையும் பகைத்துக்கொள்ளாமல் நடத்து கொள்ள முயன்றது போலும்.
07.01.2026
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago