Janu / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஷ்ஷைக் எம்.எச். ஷேஹுத்தீன் மதனி (B.A)
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு
'இரு புனிதஸ்தலங்களுக்குச் சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் செய்து வரும் அளப்பரிய சேவைகள் பாராட்டத்தக்கவை.'
'புனித மக்கா, மதீனாவுக்குச் சேவைகள் செய்வதால், சவுதி அரேபிய மன்னர்கள் "ஹாதிமுல் ஹரமைன் அல் ஷரீபைன்" (இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர்) எனும் கௌரவப் பெயருடன் அழைக்கப்படுகின்றனர்.'
'புனித ஹஜ்ஜுக்குரிய சகல ஏற்பாடுகளும் சவுதி அரேபிய அரசால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன.'
இலங்கையின் இவ்வருடத்திற்கான ஹஜ் குழு, மே மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகச் சவுதி அரேபியாவுக்குப் பயணமாகிறது. இக்குழுவை உத்தியோகபூர்வமாக வழியனுப்பி வைக்கும் விசேட வைபவம்; சமய, கலாசார பிரதியமைச்சர் முனீர் முழப்பர், இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரின் பங்குபற்றுதலோடு இடம்பெறவுள்ளது.

2026-ஆம் ஆண்டில், புனித ஹஜ் கடமையை உலகெங்கிலும் இருந்து நிறைவேற்ற வரும் ஹாஜிகள், அமைதியான சூழலில் பாதுகாப்புடனும் மன அமைதியுடனும் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தோடு சகல ஏற்பாடுகளையும் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸஊத் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
சவுதி அரேபியாவிலுள்ள புனித மக்கா மற்றும் மதீனா ஆகியன உலக முஸ்லிம்களினால் மதிக்கப்படுகின்ற, பிரதான வணக்க வழிபாடுகளுடன் சம்பந்தப்பட்ட இரு முக்கிய புனிதத் தலங்களாகும். குறிப்பாக, முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவது மக்கா மற்றும் மதீனாவோடு சம்பந்தப்பட்ட விடயமாகும். இக்கடமையைத் தன் உடலாலும் பொருளாலும் சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒரு தடவையாவது நிறைவேற்ற வேண்டும்.
சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வை வணங்கி வழிபடவென உலகிலேயே முதன்முதலில் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜித், மக்காவிலுள்ள 'கஃபதுல்லாஹ்' ஆகும். இங்கு நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு இலட்சம் நன்மைகள் கிடைக்கப்பெறும் என்று இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தோடு, மதீனாவிலுள்ள 'மஸ்ஜிதுன் நபவி'யில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தொழுகைக்கும் ஆயிரம் நன்மைகள் கிடைக்கும்.

இத்தகைய மகத்துவம் மிக்க இந்த இரண்டு ஹரம் ஷரீப்களின் விஸ்தரிப்புகள் என்பது உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலம் தொடக்கம் தற்போதைய சவுதி அரசின் ஆட்சி வரை பல கட்டங்களாக இடம்பெற்றன. நவீன சவுதி அரேபியாவை ஆட்சி செய்யத் தொடங்கிய முதலாவது மன்னர் காலத்தில் இருந்து தற்போதைய ஆட்சியாளர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வரை, இரு ஹரம் ஷரீப்களின் விஸ்தரிப்பானது யாத்திரிகர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உட்கட்டமைப்புகளையும் செய்துகொடுப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. இதனால், இது உலகின் அனைவராலும் பாராட்டி மெச்சப்படுகின்ற விடயமாக உள்ளது. சவுதி அரேபியாவை ஆட்சி செய்யும் 'ஆல் ஸஊத்' பரம்பரையினரின் ஆட்சிக் காலத்தில்தான் கஃபதுல்லாஹ்வின் விஸ்தரிப்பும் அபிவிருத்தியும் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளன.
புனித மக்கா, மதீனா மஸ்ஜித்களுக்குச் சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் ஆற்றிவரும் அளவிலா சேவைகளின் நிமித்தம், 'இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர்' என்ற நற்பெயரை அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் தற்போதைய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸும் இப்பெயரைப் பெற்றுள்ளார். இவர் இப்பள்ளிவாசல்களின் மேம்பாட்டிற்கும், தங்களது மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வரும் உலக முஸ்லிம்களுக்கும் அளப்பரிய சேவையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாக விளங்கும் ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றும் தளங்களாக விளங்கும் புனித மக்கா, மதீனா ஆகியவை சவுதி அரேபியாவில் அமைந்திருப்பது மாபெரும் வரப்பிரசாதமாகும். இங்கு வரும் அனைத்து யாத்திரிகர்களின் நலன் கருதிச் சவுதி அரசாங்கம் சகல விதமான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. குறிப்பாக: விமானப் போக்குவரத்து வசதிகள், மக்கா மற்றும் மதீனாவில் அதிநவீன தங்குமிட சொகுசு ஹோட்டல்கள், அதிநவீன போக்குவரத்துப் பேருந்துகள், மக்கா - மதீனாவுக்கு இடையில் 'ஹரமைன்' அதிவேக சொகுசு இரயில் போக்குவரத்து வசதிகள் மற்றும் ஹஜ் கடமையோடு சம்பந்தப்பட்ட மினா, முஸ்தலிபா, அரபா போன்ற இடங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடாரங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் பயனாக, புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருடா வருடம் 20 இலட்சத்திற்கும் (இரண்டு மில்லியன்) மேற்பட்ட யாத்திரிகர்கள் மக்காவில் ஒரே நேரத்தில் ஒன்றுகூடுகின்றனர். இவ்வளவு மக்கள் ஒரே இடத்தில் கூடும்போது அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பது என்பது சாதாரண காரியமல்ல. இருந்தபோதிலும், சவுதி அரசு சகல அடிப்படை வசதிகளையும் செம்மையாகச் செய்து வருவதால்தான், அனைவரும் தங்களது வணக்க வழிபாடுகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது.
ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் யாத்திரிகர்களுக்குச் சகல வசதிகளையும் முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, ஹஜ் காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உம்ரா யாத்திரிகர்களைக் கூடச் சவுதி அரசு முறைப்படுத்தி (மட்டுப்படுத்தி) வருவது குறிப்பிடத்தக்கது.

கஃபாவிலும் மஸ்ஜிதுன் நபவியிலும் யாத்திரிகர்களின் நலன் கருதி பல்லாயிரக்கணக்கான சுத்திகரிப்புப் பணியாளர்களும், மின்னணு சுத்திகரிப்பு வாகனங்களும் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும், 15,000-ற்கும் மேற்பட்ட மலசலகூடங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு, தினமும் உயர்ரகக் கிருமிநாசினிகள் மூலம் ஐந்து தடவைகள் அவை சுத்தம் செய்யப்படுகின்றன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட ஸம்ஸம் நீர்த் தாங்கிகள் பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன; இவை தினமும் நிபுணர்களால் பலமுறை பரிசோதிக்கப்படுகின்றன. அத்தோடு யாத்திரிகர்களின் பெறுமதியான பொருட்களைப் பாதுகாத்து வைக்க, பல்லாயிரக்கணக்கான உயர்ரகப் பாதுகாப்புப் பெட்டிகள் (Safe Lockers) அமைக்கப்பட்டுள்ளன. மக்கா, மதீனாவின் திறந்த வெளியரங்குகளில் பதிக்கப்பட்டுள்ள மார்பிள் கற்கள், வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சியை அளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதும் ஒரு விசேட அம்சமாகும்.
மேலும்; ஹஜ் கிரியைகள், இதர மார்க்க விடயங்கள், குர்ஆன் விளக்கங்கள் மற்றும் ஜும்ஆப் பிரசங்கங்கள் என்பன சுமார் 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. நோயாளிகள் மற்றும் முதியவர்களின் நலன் கருதி பல்லாயிரக்கணக்கான சிறு நாற்காலிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, அவர்களை ஏற்றிச் செல்ல 500-ற்கும் மேற்பட்ட மின்னணு வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மக்கா, மதீனா மற்றும் புனித இடங்களுக்குச் செல்லும் அனைத்து யாத்திரிகர்களுக்கும் உயர்ரக சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைச் சவுதி அரசு தடையின்றி வழங்குகிறது.
சில வருடங்களுக்கு முன், இலங்கை ஹாஜி ஒருவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது இருதயத்தில் இரண்டு அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்குத் தேவையான இருதய அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டது. இத்தகைய மனிதாபிமானச் செயல்கள் ஹாஜிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

அதேநேரம், சவுதி மன்னருடைய தனிப்பட்ட செலவில் ஏழைகள், அகதிகள், உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் பலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சுமார் 5,000 பேர் வருடா வருடம் உலகெங்கிலும் இருந்து இலவசமாக ஹஜ்ஜுக்காக அழைத்து வரப்படுகின்றனர். இது சவுதி அரசு மேற்கொண்டு வரும் மிக முக்கியமான அறப்பணிகளில் ஒன்றாகும்.
இதன் நிமித்தம், இஸ்லாமிய விவகார அமைச்சு மற்றும் ஹஜ் விவகார அமைச்சு ஆகியவற்றின் ஊடாகத் தகுதியான தலைமைத்துவ சபைகளை அமைத்துச் சவுதி அரசு இச்சேவைகளை முன்னெடுத்து வருகிறது. ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் நலன் கருதி ஒவ்வொரு வருடமும் புதிய தொழில்நுட்பங்களையும் இலகு வழிமுறைகளையும் புகுத்தி வரும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களின் பொறுப்பில் புனித மக்காவும் மதீனாவும் இருப்பது உலக முஸ்லிம்களுக்கே பெருமையாகும்.

அந்த வகையில், இவ்வருட ஹஜ் காலம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இம்முறையும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் ஒன்றுகூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இருந்தும் சுமார் 3,500 பேர் ஹஜ் கடமைக்காகச் செல்லவுள்ளனர். அவர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கையிலுள்ள சவுதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி, தூதரக அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.
ஹாஜிகள் முழுமையான பாதுகாப்புடனும், மன அமைதியுடனும் தங்களது கடமைகளை நிறைவேற்றிடச் சவுதி அரசு 'அல்லாஹ்வின் விருந்தாளிகளின்' நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. எனவே, சவுதி அரேபிய ஆட்சியாளர்களான 'ஆல் ஸஊத்' பொறுப்பின் கீழ் இப்பரிசுத்தமான இடங்கள் இருப்பது உலக முஸ்லிம்களுக்குப் பெருமைக்குரியது என்பதை மீண்டும் உறுதிபடக் கூறி, எல்லாம் வல்ல அல்லாஹ் சவுதி அரசையும் அந்நாட்டு ஆட்சியாளர்களையும் பொருந்திக் கொண்டு, அவர்கள் தொடர்ந்தும் சேவை செய்ய நல்ல ஆரோக்கியத்தை வழங்கிடப் பிரார்த்திக்கிறேன்.
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago