Thipaan / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்பது தமிழகத்தின் கிராமப் புறங்களில் உள்ள பழமொழி. அதுபோன்ற புதன்கிழமையன்று (28.9.2016) இரவு, இந்திய இராணுவமானது, தனது எல்லைக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் இரு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் பயங்கரவாதிகளை அனுப்பும் முகாம்களுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய இராணுவ நடவடிக்கைகள் பிரிவு தலைமை இயக்குநர் லெப்டினன் ஜெனரல் ரன்பீர் சிங் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பற்றிய தகவல்களையும் அதற்கான காரணங்களையும் உலக நாடுகளின் தூதர்களுக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் விவரித்துக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, இந்த இராணுவத் தாக்குதல் பற்றி விளக்கியிருக்கிறது, இந்திய மத்திய அரசு.
கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி, நாட்டையே அதிர வைக்கும் “உரி தாக்குதல்”, பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது. குறிப்பாக, காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், 18 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள். இவர்களின் மரணம், நாடு முழுவதிலும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. இது, இந்திய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகவுமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மட்டும் அல்ல, நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே கருதின. இந்தத் தாக்குதலுக்கு முன்பு, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் இராணுவ விமானத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலும் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் நின்று கண்டனக் குரல் எழுப்பவைத்தது. அடுத்து நடைபெற்ற “உரி” தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற அழுத்தத்தை, இந்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளும் கொடுக்க ஆரம்பித்து விட்டன. “இனியும் நம் நாட்டின் மீதும் இராணுவ முகாம்கள் மீதும் நடக்கும் தாக்குதல்களை, வேடிக்கை பார்க்கக் கூடாது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும்” என்பது மக்கள் கருத்தாக மாறத்தொடங்கியது.
இந்திய மக்களின் கோபத்தை, பாகிஸ்தான் நினைத்திருந்தால் தணித்திருக்கலாம். அதற்கு மாறாக, “உரி” தாக்குதலை நியாயப்படுத்தும் விதத்தில் பேசியது. பிரதமர் நவாஷ் செரிப்பே, அப்படிப் பேசத் தொடங்கினார். ஐக்கிய நாடுகள் சபையிலும் அதே எண்ணத்தை வெளிப்படுத்தியது. “உரி தாக்குதலில்” ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்களை, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை அழைத்துக் கொடுத்த பிறகும், நவாஷ் செரிப் அரசு, இது விடயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, “உரி” தாக்குதலை வைத்துக்கொண்டு காஷ்மீர், பாகிஸ்தானுக்கே சொந்தம் என்று உரக்கக் குரல் எழுப்புவதிலேயே காலம் கடத்தியமையானது, இந்திய அரசுக்கு மட்டுமல்ல - இந்திய மக்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்தக் கோபத்தைத் தணிக்கும் பொருட்டுத்தான், “உரி தாக்குதலை நடத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கேரள மாநிலத்தில் நடைபெற்ற பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்திலும் “நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்” என்று உத்தரவாதம் அளித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள சிந்து நதி ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்படும்; சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்பதெல்லாம், இந்த தாக்குதலுக்கான முன்னெச்சரிக்கை என்பதை, பாகிஸ்தான் அரசு உணர மறுத்து விட்டது. இதன் தொடர்ச்சிதான், பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்து, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பும் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று, பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டவுடன், “பாகிஸ்தான் விவகாரத்தில் மிகவும் கெடுபிடியாக இருப்பார்” என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் செரிப் உள்ளிட்ட அண்டை நாட்டு பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் தன் பதவியேற்பு விழாவுக்கே அழைத்தார். பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் எண்ணவோட்டத்தை, பிரதமராகப் பொறுப்பேற்ற நரேந்திர மோடியும் கொண்டிருந்தார். அதை மனதில் வைத்துத்தான், நவாஷ் செரிப்பீன் பிறந்த நாளன்று கூட, யாருக்கும் முன்கூட்டி அறிவிக்காமல், திடீரென்று பாகிஸ்தான் சென்று அவரை வாழ்த்தினார். இரு நாடுகளுக்கிடையிலும் நல்லுறவு நீடிக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் நரேந்திர மோடியின் நல்லிணக்க முயற்சிக்கு கிடைத்த பரிசு, உரி இராணுவ முகாம் மீதான தாக்குதல், பதன்கோட் இராணுவ விமான நிலையத் தாக்குதல் போன்றவைதான். அதுவும் போதாது என்று, காஷ்மீர் விவகாரத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சர்வதேச பிரச்சினையாக மாற்ற, பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இனி பாகிஸ்தான் அரசை நம்பி பிரயோசனமில்லை என்ற நிலைக்கு வந்த பிறகுதான், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஷ்மீர் இந்தியாவுக்கு வர வேண்டும்” என்ற பிர்சாரத்தை தீவிரப்படுத்தியது மத்திய அரசு. அது மட்டுமின்றி, பலுஸிஸ்தான் மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளையும் கண்டித்துப் பேசத் தொடங்கியது. இதன் உச்சக்கட்டமாக, இந்திய இராணுவத்தின் இந்த அதிரடித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு, இந்திய இராணுவம் உஷார் நிலையில் இருக்கிறது. “இது பயங்கரவாதிகள் முகாமுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, பாகிஸ்தான் இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கை இல்லை” என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதேமாதிரி, இந்த தாக்குதல் முடிந்து விட்டது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையைப் பிடிக்கும் முயற்சி அல்ல இது; முழுக்க முழுக்க இந்தியாவுக்குள் நுழைந்து, பல்வேறு முக்கிய நகரங்களில் நாசவேலை செய்யக் காத்திருந்த பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை மிகத் தெளிவாக, அனைத்து மட்டத்திலும் இந்திய இராணுவ செய்தி தொடர்பாளர்களும் சரி, மத்திய அரசின் செய்தி தொடர்பாளர்களும் சரி, விளக்கி வருகிறார்கள். அரசாங்கத்தின் நடவடிக்கை என்றாலும், அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி அவர்களுக்கு நிலவரத்தை விளக்கிச் சொல்லி அனைத்துக் கட்சி ஆதரவையும் மத்திய அரசு பெற்றிருக்கிறது. “உரி தாக்குதல்” “பதன்கோட் தாக்குதல்” போன்றவற்றின்போது மத்திய அரசின் மீதும், பிரதமர் நரேந்திர மோடியின் மீதும் குறை சொன்ன எதிர்கட்சிகள் கூட, இந்தத் தாக்குதல் குறித்து ஓரணியில் நின்று, இந்திய இராணுவத்தையும் மத்திய அரசையும் பாராட்டியிருக்கின்றன.
அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில், உத்தரபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை இப்போது எல்லையைக் காப்பாற்றிய “ஹீரோ” இமேஜுடன் சந்திக்கிறது பாரதீய ஜனதாக் கட்சி. அதே இமேஜுடன், பிரதமர் நரேந்திர மோடியும், உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறார். இந்திய மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். அதிலும் குறிப்பாக, 400க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் 80க்கும் மேற்பட்ட எம்.பிக்களையும் கொண்ட மாநிலம். இம்மாநிலத்தில் வெற்றி பெற்றால், அது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு மேலும் வலுச் சேர்க்கும். அந்தவகையில், வெளியுறவு விவகாரத்தில் மட்டுமல்ல - உள்நாட்டிலும் இந்த இமேஜை பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இந்த நடவடிக்கை. இதை எதிர்க்கட்சிகள் இனிவரும் காலங்களில் எப்படிக் கையாளப் போகின்றன என்பதைப் பொறுத்து, அடுத்து வரும் காட்சிகள் அமையும்.
ஆனால், இந்தத் தாக்குதலின் அடிப்படையில், இரு நாடுகளுக்கு இடையில் போர் மூள்வதற்கு வாய்ப்பளித்துவிடக் கூடாது என்பதில் இந்தியாவும் கவனமாகவே இருக்கிறது. இந்திய அரசின் நோக்கம், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதிகளை அந்நாடு தடுக்கத் தவறிவிட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இனி வரும் காலங்களில் இது போன்று பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த அனுமதிக்கக்கூடாது என்பது மட்டுமே! இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, “தொடர் தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை” “இந்த தாக்குதல் நிறைவு பெற்று விட்டது” “பாகிஸ்தான் பகுதியைக் கைப்பற்றும் எண்ணம் இல்லை” என்றெல்லாம் கூறியிருப்பது, பயங்கராவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கு இடையிலான போராக மாறக் கூடாது என்பதால்தான். அதேநேரத்தில், அப்படியொரு போர் மூண்டால், அதைச் சந்திக்கவும் இந்திய இராணுவம் முழுத் தயார் நிலையில் இருக்கிறது என்பதை, இராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநரே அறிவித்திருக்கிறார்.
இந்தத் தாக்குதலால், உள்நாட்டில் மத்திய அரசாங்கத்துக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டரை வருட ஆட்சியில் சாதனைகள் இல்லை என்று எதிர்க்கட்சிகள் நடத்திய பிரசாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மோடி “கார்ப்பரேட்” களை மட்டும்தான் கண்டு கொள்கிறார் என்று தொடர்ந்து புகார் கூறி வந்த ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தின் முனை, மழுங்க வைக்கப்பட்டுள்ளது. “நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடும் பயங்கரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தயங்க மாட்டார் நரேந்திர மோடி” என்ற எண்ணம், இந்திய மக்கள் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டு, பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்றோரின் இமேஜுக்கு உயர்ந்து விட்டார், பிரதமர் நரேந்திர மோடி!
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago