2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பயங்கரவாத தடைச் சட்டமா? ஜீ.எஸ்.பி வரிச் சலுகையா?

Johnsan Bastiampillai   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம். ஐயூப்

 

 

 

சந்தேக நபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்காக, பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு குறுக்கு வழியாகப் பாவிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பொலிஸாரைப் பணித்துள்ளதாக கடந்த வாரம், ‘டெய்லி மிரர்’ பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.

ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக, வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கொழும்பைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். கடந்த வாரம் அவரது அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர், எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஆரம்பமாகி, ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள  நிலையிலேயே, இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளதோடு, ஜனாதிபதியும் மேற்படி பணிப்புரையையும் விடுத்துள்ளார்.

அத்தோடு, மனித உரிமைகள் மீறல் தொடர்பாக, விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவும், தமது இரண்டாவது இடைக்கால அறிக்கையை, வெள்ளிக்கிழமை (18) ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.

வெளிநாட்டமைச்சர் நடத்திய இந்தக் கூட்டம், இதயசுத்தியோடு கூட்டப்பட்டதா என்பது ஒரு புறமிருக்க, அது சரியான திசையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றே தெரிகிறது. ஏனெனில், இந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் தன்னார்வ நிறுவனங்களும், மனித உரிமைகள் விடயத்தில் மிகவும் அக்கறை கொண்டவையாகும்.

அதேவேளை, மனித உரிமைகள் பேரவையும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் தகவல்களைப் பெறுவதற்காகவும் தாம் பெறும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும், இந்த உள்ளூர் அமைப்புகளையே அணுகுகின்றன.

எனவே அரசாங்கம், அவற்றோடு முறையான தொடர்பைப் பேணுவது, அரசாங்கத்துக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் இடையிலுள்ள இடைவெளியை குறைக்க உதவலாம்.

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள், சர்வதேச அமைப்புகளில் பொதுவாக ஆராயப்பட்டு வந்தாலும், மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய நாடாளுமன்றம் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையைப் பற்றி அக்கறை கொண்டுள்ள அமைப்புகள், அண்மைக் காலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பற்றியே, பெரிதும் கவனம் செலுத்தி வருகின்றன.

2021ஆம் ஆண்டு, மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்சலே, மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையிலும் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றம், இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய பிரேரணையிலும், இந்தச் சட்டத்தின் மீதும் அதன் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீதும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு இருந்தது. இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை நீக்கப்படும் அபாயமும், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் காணக்கூடியதாக இருக்கிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை, சர்வதேச சட்டங்களின் தரத்துக்கு பொருத்தமாகும் வகையில் திருத்த வேண்டும் என்றே, மனித உரிமைகள் பேரவையும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் வலியுறுத்தி வருகின்றன. இதை முன்னைய அரசாங்கம் ஏற்று, பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்துக்கு எதிரான புதியதொரு சட்டமூலமொன்றை வரைவு செய்து, நாடாளுமன்றத்திலும் சமர்ப்பித்து இருந்தது. ஆனால், அது நிறைவேறி இருக்கவில்லை.

இந்த நிலையில்தான், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோட்டாபயவின் கீழான அரசாங்கம், முன்னைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட மூலத்தை வாபஸ் பெற்றது. அந்தச் சட்ட வரைவு, வெளிநாட்டு நெருக்குதலின் காரணமாகத் தயாரிக்கப்படடு இருந்தமையால், அதை வாபஸ் பெற்றதாக அப்போது அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவராக இருந்த பந்துல குணவர்தன கூறினார்.

ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக, வெளிநாடுகளில் வழக்குத் தாக்கல் செய்து, அவர்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்க வேண்டும் என்று, மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு, இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகைகளை நீக்க வேண்டும் என்று, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், தற்போதைய அரசாங்கமும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்தது. அதன்படி, அண்மையில் ஒரு திருத்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், தமிழ் அரசியல் கட்சிகளோ ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’ உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகளோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள மனித உரிமைகளை மீறும் வாசகங்கள், அந்தத் திருத்தத்தின் மூலம் பலம் இழக்கவைக்கப்படவில்லை என்று கூறியே, அவர்கள் அதை நிராகரித்தனர். அதன் பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாகவே இரத்துச் செய்ய வேண்டும் எனக் கூறியது.

1970களின் இறுதியில், பிரிவினைவாத தமிழ் ஆயுதக் குழுக்கள் தோன்றியதை அடுத்து, ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கமே, ஆயுதக் குழுக்களை அடக்கும் நோக்கத்துடன் முதன் முதலில் தனியான சட்டங்களை இயற்றியது. அதன் ஒரு கட்த்திலேயே, 1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அது, மனித உரிமைகளை மிகவும் மோசமாக மீறும் வகையிலேயே வரையப்பட்டு இருந்தது. அதன் பிரமாணங்களின் படி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர்கள், வருடக் கணக்கில் அல்லது தசாப்த காலம் தடுத்து வைக்கப்பட முடியும். அதேபோல், சித்திரவதை மூலமாக சந்தேக நபர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்றாலும், அவற்றை அதே சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியாகப் பாவிக்க முடியும்.

எனவே, ஆரம்பத்திலிருந்தே இதற்கு இடதுசாரி கட்சிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், கடந்த 43 ஆண்டுகளாக, அது அமலில் இருக்கிறது. அதன் கீழ், பலர் வழக்கு விசாரணையின்றி, பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டும் இருக்கின்றனர்.

2021ஆம் ஆண்டு, ஐரோப்பிய பாராளுமன்றம் இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் எச்சரிக்கை செய்து, பிரேரணை நிறைவேற்றி இரண்டு வாரங்களுக்குள், அதாவது ஜூன் 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டோருக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப் பயங்கரமான அநீதியைப் பற்றி, நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதையாவது, பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு தெரியாது என்றும், 35 கைதிகள் தமக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைக் காலத்தை விட, நீண்டகாலம் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சில கைதிகள் தனது (நாமலின்) வயதைப் (35) பார்க்கிலும் நீண்டகாலம் விளக்க மறியலில் உள்ளதாகவும் அவர் கூறினார்.  இதை உறுதி செய்த நீதி அமைச்சர் அலி சப்ரி, பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்தார். அதன்படியே, அண்மையில் சட்டத் திருத்தமொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர்களிடம் விசாரணை செய்வதற்காக, பொலிஸாருக்கு அவகாசம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதற்கு எவ்வளவு காலம் வேண்டும் என்பதே பிரச்சினையாகும்.

சாதாரண சட்டத்தின் படி, சில நாடுகளில் 24 மணித்தியாளங்களிலும் சில நாடுகளில் 48 மணித்தியாலங்களிலும் மேலும் சில நாடுகளில் 72 மணித்தியாலங்களிலும் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட  வேண்டும். ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், ஒருவருக்கு எதிரான தடுப்புக் கட்டளையை, பாதுகாப்பு அமைச்சர் தொடர்ந்து வழங்கிக் கொண்டு இருக்கலாம்.

ராஜபக்‌ஷ குடும்பத்தில் ஒருவரே, இவ்வாறான சந்தேக நபர்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையொன்று வேண்டும் என்று கூறுவதாக இருந்தால், உணவுக்கே வழியில்லாத அளவுக்கு நாடு தள்ளப்பட்டு இருக்கும் நிலையில், ஜீ.எஸ்.பி வரிச் சலுகை பறிபோகும் நிலை உருவாகி இருக்கிறது என்றால்,  இறுதிப் போர் காலத்தில் உயர்பதவிகளில் கடமையாற்றிய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு பயணத் தடை விதிக்கப்படும் அபாயம் இருந்தால், இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஏன் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .