2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரச்சினைகளால் பற்றி எரியும் நாடு: தமிழ் மக்களின் நிலைப்பாடு

Johnsan Bastiampillai   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

நாடு பற்றி எரியும் வேளையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததற்கு ஒப்பாக, தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் தற்போதைய நெருக்கடிச் சூழலைக் கையாளுதலை அல்லது கணக்கற்று இருப்பதை அவதானிக்க முடிகிறது.

பொருளாதாரப் பிரச்சினைகளால் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது குறித்து தமிழ் மக்களின் நிலைப்பாடு சரியா, தவறா என்பதான கேள்விகளுக்கு இதுவரையில் சரியான பதில்கள், முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த இடத்தில்தான், ஒரு தேசமாக தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான தமிழர்களின் நீண்டகாலக் கேள்விக்கு, இன்று தெற்கில் இடம்பெறும் போராட்டங்களில் பதிலேதும் உண்டா என்று தமிழர் தரப்பின் வினவல் நெருடலாகின்றது.

இலங்கையில் யுத்தம் தானாக ஆரம்பித்ததல்ல. அது, தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஆனாலும், இன்று தெற்கில் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள், இளைஞர்களுக்கு தம் தோழமையை தமிழர்கள் இப்போது கொடுக்காமலில்லை. இருந்தாலும் அடிப்படையை உணர்ந்தார்களா என்பதற்கான சரியானதொரு பதில் கிடைக்கவேண்டுமென்றே தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புத் தவறானதல்ல.

பெரும்பான்மை மக்களின் பெரும்பகுதியினர் போராடப் புறப்பட்டதற்கான காரணமான பொருளாதார நெருக்கடிகள் தமிழர்களையும் தாக்காமலில்லை. ஆனால், அவற்றைச் சகித்துக்கொண்டே ஆகவேண்டும் என்ற பக்குவத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள். நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் பிறந்தவர்கள் இந்தச் சகிப்பினை கைக்கொள்ள கொஞ்சம் சிரமப்படத்தான் செய்வார்கள்.

எது எவ்வாறாக இருந்தாலும், அயலிலுள்ளவர், நம்முடன் உள்ளவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போது அதனைத் தீர்த்துவைக்க அல்லது கைகொடுக்காதவர்களை மனிதர்களாகவோ சகபாடிகளாகவோ யாரும் எண்ணுவதில்லை. அந்தவகையில், தமிழர்களுக்கு இருக்கின்ற மனத்தடையைத் தீர்க்கவேண்டியது நாட்டிலுள்ள பெரும்பான்மைச் சமூகத்துக்குள்ளது என்ற பொறுப்பையே தமிழர்கள் கோருகின்றனர். இந்த ஆத்மாத்தமான கோரிக்கையைத் தவறாக எண்ணிவிடமுடியாது.

தென்னிலங்கையில் இடம்பெற்றுவரும் பொதுமக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொள்வதற்கு தமிழர்களின் அரசியல் தரப்புகளும், சிவில் அமைப்புகளும் முயன்றே வருகிறார்கள்.  இந்த முயற்சிகளுக்குத் தடைகள் வராமலில்லை. அதற்கு பட்டறிவுகளுடனான அனுபவங்களே காரணம்.

இதில்தான், காலி முகத்திடலில் இருந்து முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் இன்றைய பொருளாதாரச் சிக்கல்களுக்கு உண்மையான அடிப்படைக் காரணமான சிங்கள -பௌத்த மேலாதிக்க அபிலாஷைகளுக்கு மாற்றீடுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்பதும், வெறுமனே நாட்டில் ஆட்சி மாற்றம் தமிழருக்கு அமைதியையும் நிம்மதியையும் கௌரவத்தையும்  தந்துவிடப் போவதில்லை என்ற விடயம் சிக்கி நிற்கின்றது.

இந்த வகையில் தான், தமிழ்த் சிவில் சமூக அமையத்தின் ‘அண்மைய நாள்களில் தென்னிலங்கையில் முகிழ்த்து வரும் பொதுமக்கள் போராட்டங்களுக்கான ஆதரவைத் தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது’ என்ற அறிக்கையும் முக்கிய பார்வைக்குரியதாகின்றது.

இந்தப் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் பட்டிணியை தமது அன்றாடமாக்குகின்ற நிலைமை உருவாகிவருகின்ற நிலையில், இந்த நெருக்கடிக்கு இன்றைய அரசாங்கம் மாத்திரமே காரணம் என்று அதனை ஆட்சிபீடத்திலிருந்து அகற்றுவதால் தீர்வு வந்துவிடாது என்பதும் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
அதில்தான், அடிப்படைக் காரணமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு,  போராட்டத்தின் முதற் கோரிக்கையாக அமைய வேண்டும் என்பது முன்னகருகின்றனது.

இப்போது காலி முகத்திடலிலே சிங்கள இளையோர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டத்தின் கோரிக்கைகளில், பொருளாதார வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற விடயம் முதன்மையான கோரிக்கையாக அமைந்திருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வே, நாட்டின் மீட்சிக்குரிய ஒரே வழி என்பதும் அதன் அடிப்படையும் தெரிந்திருந்தாலும், அதனை வெளிப்படையாக பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள யாரும் தயாரில்லை. 

உண்மையிலேயே இந்த நாட்டில், தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதும், அதன் காரணமாக ஏற்பட்ட யுத்தமும், யுத்தத்தின் காரணமமாக பில்லியன் கணக்கான டொலரை வெளிநாடுகளிடம் கடனாகப் பெற்றமையானது நாட்டுக்குப் பெரும் சுமையே. இந்தச் சுமையைத் தூக்குவதற்கு தமிழ் மக்கள் மீது போராட்டத்தினை திணித்த அனைவரும் தயாராக வேண்டும்.

அதனை விடுத்து, தற்போதைய அரசாங்கத்திடம் மாத்திரம் அதனை விட்டுவிடுவது எவ்வகையில் நியாயம் என்பது ஆட்சித் தரப்பின் கேள்வியாக இருக்கவேண்டும். ஆனால், அதனை அவர்கள் இன்னமும் வெளிப்படையாகச் செய்யவில்லை.

ராஜபக்‌ஷ குடும்பம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில்,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்; ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவிகளைத் துறக்க வேண்டும். ராஜபக்‌ஷ குடும்பத்தினர் எவருமே பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வகிக்கக் கூடாது. ராஜபக்‌ஷ குடும்பத்தால் அபகரிக்கப்பட்ட சொத்துகள் மீளப்பெறப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளே போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இது ராஜபக்‌ஷ குடும்பத்தின் மீதான கோபமாகவே பார்க்கப்படவேண்டும்.

ஆனால், இதனால் உருவாகின்ற மாற்றம் நாட்டை மீட்டுவிடுமா என்றால் அது சந்தேகமாகவே இருக்கும். வெறுமனே ராஜபக்‌ஷ குடும்பத்தினை மாத்திரம் வெளியேற்றிவிட்டால் நாடு மீண்டுவிடுமா?

நாடு பொருளாதார ரீதியாக மிகவும் அதளபாதாளத்துக்குள் விழுந்து கிடக்கின்றது. இலங்கை தற்போது இருக்கும் பொருளாதார நிலைமையை எந்தக்கட்சியோ, நபரோ ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக நிமிர்த்திக் கொள்ளக்கூடிய நிலைமை இல்லை. இந்த உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பண்டா - செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது அன்றைய நிலையில் எல்லோரும் நிம்மதி ஏற்பட்டுவிட்டதாகவே எண்ணினர். அன்று  நாட்டில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட்டிருந்தால் இந்த நாட்டில் 30 வருடங்களுக்குமேல் யுத்தமும் இடம்பெற்றிருக்காது. அழிவுகள், பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்காது. தமிழ் மக்களின் மனங்களில் இவ்வளவான வெறுப்பும் பட்டிறிவும் பதிந்தும் இருக்காது.
அத்தோடு, யுத்தத்திற்காக மாறி மாறி வந்த அரசாங்கங்கள் டொலரைச் செலவு செய்ய வேண்டிய தேவையும் இருந்திருக்காது. ஆனால், நடந்தது என்னவோ வேறு.

தொடர்ச்சியாக, இப்போதும் இனவாதம் ஊட்டி வளர்க்கப்படுகின்ற இளைஞர்களையே நாம் காண்கிறோம். அதனை அடிப்படைவாதிகளும், அரசியல் கட்சிகளும் செய்தே வருகின்றன.

இந்த இடத்தில்தான், யுத்தத்திலும், அதற்கு முன்னரும், பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள் 1,800 நாள்களையும் தாண்டி இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் போராட்டத்தில் எமது தமிழ் இளைஞர்களின் பங்கு என்ன? எமது தமிழ் இளைஞர்கள் காலி முகத்திடல் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என எங்கள் மக்களின் பிரதிநிதிகளே அறைகூவல் விடுக்கின்றனர். இவ்வாறு அறைகூவல் விடுபவர்கள் எமது உறவுகளின் போராட்டத்தில் இளைஞர்களை உள்வாங்குவதற்கு எவ்வித அக்கறையும் அற்றவர்களாகவே செயற்பட்டிருக்கின்றார்கள்.

சிங்கள மக்கள் மின்சாரம், எரிபொருள், போன்ற பொருட்கள் இல்லாமல் இருக்கின்ற காரணத்தால் போராடுகின்றார்களே தவிர, பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டமைக்கான முல காரணத்தைக் கண்டு பிடித்து, அதனை நிவர்த்தி பண்ணுவதற்கு எந்தவிதமான எத்தனிப்பும் காட்டவில்லை. இந்த விடயத்தில், நாங்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும் என்ற தமிழ்த் தரப்பின் கேள்வி நியமானதாகவே இருக்கிறது எனலாம்.
அதே நேரத்தில், தமிழ் மக்களுடைய அரசியலை நகர்த்துகின்ற தரப்புகளின் ஒருமிப்பின்மை, தமிழ் மக்களை மேலும் பிரித்து வைத்தே வருகிறது.
மொத்தத்தில், அரசியல் பாரபட்சம், இனப்பாகுபாடு, தரப்படுத்தல், நெருக்கடிகளால் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டே இருந்த மூளை சாலிகள் இன்றும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
நாட்டின் பாரபட்சம் இல்லாமலாக்கப்படவில்லை. தமிழ் மக்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை. இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்க்கமான செயற்பாடில்லை.
இவ்வாறிருக்கையில், தமிழ் மக்களுக்கு வேறு என்னதான் நிலைப்பாடு முடிவிருக்கமுடியும். ஆனாலும், தமிழர்களாகிய எம்முடைய நிலைப்பாடு வேறாக இருந்தாலும் இந்தச் சூழலில் ‘பிடில்’ வாசித்த கதையாக இருப்பது பொருத்தப்பாடற்றதே.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .