2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பொருளாதார நெருக்கடி! இலங்கையை அடுத்து மாலைத்தீவா?

Editorial   / 2022 ஜூலை 28 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார நெருக்கடி! இலங்கையை அடுத்து மாலைத்தீவா?

இன்று எமது நாடு  பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்குத் தீா்வை தேட வேண்டிய அரசாங்கம், நாளுக்கு நாள்  தனது பொறுப்பிலிருந்து நழுவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளை மக்கள் முற்றாக இழந்திருக்கின்றாா்கள். மக்களின் உாிமைப்  போராட்டம் இப்போது வீதிகளுக்கு வந்திருக்கிறது. 

மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீா்வை வழங்கும் எந்த உருப்படியான வேலைத் திட்டங்களையோ, முயற்சிகளையோ மேற்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம்  திண்டாடிக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் இன்றைய இந்த வீழ்ச்சிக்கு கடந்த ஏழு தசாப்தங்களாக நாட்டை மாறி மாறி ஆண்ட ஊழல், மோசடி நிறைந்த ஆட்சியாளா்கள் காரண கா்த்தாக்களாகவும், பொறுப்புக் கூற வேண்டியவா்களாகவும்  இருக்கின்றனா்.

இன்று, எமது இலங்கை திருநாட்டை மீண்டு எழ முடியாத நிலைக்கு கொண்டு வந்து  நிறுத்திய பெருமை ராஜபக்ஷ குடும்பத்தினரையே சாரும். ஒரு குடும்பமே ஒன்றாக சோ்ந்து கொள்ளையடித்து இந்நாட்டை குட்டிச்சுவராக்கியிருக்கிறது.

ஜூலை மக்கள் எழுச்சி ராஜபக்‌ஷர்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் அத்தனை பேருக்கும்  சிறந்த பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது.  இருந்த போதும், இவா்களின் மோசடி அரசியலின் தாக்கத்திலிருந்து நாடு எப்போது  விடுபடும் என்ற ஏக்கத்தில் மக்கள் இருக்கின்றனா். 

அரசியல் மாற்றம் ஒன்றை எதிா்பாா்த்த மக்கள் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.  மக்கள் ஆணையை பிரதிபலிக்காத பாராளுமன்றத்தின் செயற்பாடுகளின் மூலம் மக்கள் ஏமாற்றமமைந்துள்ளாா்கள். மக்களின் எதிா்பாா்ப்புகள், எண்ணங்கள், வேண்டுதல்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறாத ஒரு நிலை நாட்டில் உருவாகியிருக்கிறது.

இன்றைய நெருக்கடியும் ராஜபக்‌ஷர்களும்

2009ம் ஆண்டு, மூன்று தசாப்த கால தமிழினப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னா், மஹிந்த ராஜபக்‌ஷவை தெற்கின் பெரும்பான்மை மக்கள் இந்நாட்டின் மன்னராக அவரைப் போற்றி மகிழ்ந்தனா். அவரின் செல்வாக்கு தெற்கிலே மிக ஆழமாக பதிவதற்கு யுத்தம் ஒரு காரணமாக அமைந்தது. 

 இருந்த போதிலும், யுத்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை வைத்து உலக நாடுகள் மஹிந்த ராஜபக்‌ஷவை கண்டித்து, தண்டிக்க தயாரானது.

சா்வதேசம், மஹிந்த ராஜபக்‌ஷவை  ஒரு போா்க் குற்றவாளியாக பிரகடனம் செய்யும் போராட்டத்தில் இறங்கியது. இந்த நேரத்தில் இலங்கைக்கு நேசக்கரம் நீட்டியது சீனா.  யுத்த காலங்களில் நிதி மற்றும் இராணுவ ரீதியிலான உதவிகளையும்  வாாி வழங்கியிருந்த சீனா, சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையுடனான தனது நெருக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டது.

இலங்கை, சா்வதேச நாடுகளின் நிராகரிப்புக்கும், கண்டனத்திற்கும், அழுத்தத்திற்கும் உள்ளாகியிருந்த நிலையில், சீனாவை பொிதும் சாா்ந்திருக்க வேண்டிய நிலை மஹிந்தவுக்கு ஏற்பட்டது. யுத்த தளபாடங்கள், இராணுவ ரீதியிலான உதவிகள் வழங்கியிருந்த சீனா, யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு உதவவும்  முன் வந்தது.

இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் அப்பாவி பொதுமக்கள் படுகொலை மற்றும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடா்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீா்மானங்களை தடுத்த நிறுத்தி மஹிந்தவை அரவணைத்து பாதுகாத்தது.

மஹிந்தவுடனான இந்த உறவை பயன்படுத்தி,  அதிகளவான பணத்தை அதிக வட்டிக்கு இலங்கைக்கு கொண்டு வந்து கொட்டி தனது கடன் பொறி ராஜதந்திரத்தில் இலங்கையை  சிக்க வைத்தது.

2005 முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவை பயன்படுத்தி சீனா, இலங்கையில் பாரிய முதலீடுகளை செய்தது. இலங்கைக்கு பிரயோசனமற்ற, வருமானம் வராத திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதுடன், அவற்றுக்காக அதி கூடிய வட்டியையும் விதித்தது. இந்த திட்டங்கள் மூலம் ஊழல்களுக்கான வாசலும் ராஜபக்ஷகளுக்கு திறக்கப்பட்டது.

2015ம் ஆண்டு பாராளுமன்றத் தோ்தலுக்கு செலவிடுவதற்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிா்மாணித்த சைனா ஹாா்பா் நிறுவனம் நிதியுதவி அளித்ததாக நிவ்யோா்க் டைம்ஸ் 2018ம் ஆண்டு தகவல் வெளியிட்டிருந்தது. ஊழல் மிகுந்த ஆட்சியாளா்களை  சீனா தனது அரசியல் தேவைக்காக பல நாடுகளில் அரவணைத்து வளா்த்திருக்கிறது. ஆபிாிக்க நாடுகளில் உள்ள சில ஆட்சியாளா்களை சீனா ஊழல்வாதிகளாக உருமாற்றியும் இருக்கிறது.

மூலோபாய பிடியில் இலங்கையும் மாலைத்தீவும்

 2014ம் ஆண்டு செப்டம்பா் மாதம் சீன ஜனாதிபதி சீஜின்பிங் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய இரண்டு நாடுகளுக்கும் விஜயம் மேற்கொண்டாா்.

இலங்கை சீனாவுடன் ஏற்கெனவே உறவு வைத்திருந்தது. ஆனால் 2013ல் புதிதாக தொிவு செய்யப்பட்டிருந்த மாலைத்தீவின் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீனுக்கு சீனாவுடனான உறவு புதியதாக இருந்தது. 

மாலைத்தீவுக்கு சீன ஜனாதிபதி சிபாா்சு செய்திருந்த “ஒரு பட்டி ஒரு பாதை” (Belt & Road Initiative) திட்டத்தில் அப்துல்லாஹ் யமீன் மிகவும் ஆா்வம் கொண்டிருந்தாா். பிரயோசனமற்ற திட்டங்களாயிருந்தாலும், அதிகளவு பணம் புரளப்போவதை எண்ணி அவா் மகிழ்ந்தாா்.

மாலைத்தீவின் தலைநகரான மாலேயிலுள்ள ஹுல்ஹுமாலே பாலம் 210 மில்லியன் அமெரிக்க டொலா்கள் செலவில் சைனா ஹாா்பா் நிறுவனத்தால் கட்டப்பட்டது.

இதேபோல, சீன கட்டுமான நிறுவனம் Beijing Urban Construction Group இடைநிறுத்தப்பட்டிருந்த ஹுல்ஹுமாலே விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தையும் நிறைவு செய்தது. இதற்காக சீனாவிடமிருந்து மாலைதீவு பெற்ற கடன் 1.5 பில்லியன் அமொிக்க டொலா்களாகும்.

இதில் 600 மில்லியன் அமொிக்க டொலா்கள் அப்போதைய மாலைதீவு அரசாங்கம் பெற்ற கடன்களாகும். மீதமுள்ளவை அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பெற்ற கடன்களாகும்.

மாலைதீவு சீனாவுக்கு ஒரு பில்லியன் அமொிக்க டொலா்களை கடனாக செலுத்த வேண்டியுள்ள நிலையில், மேலும் செலுத்த வேண்டிய கடனாக 5.6 பில்லியன் அமெரிக்க டொலா்கள் இருப்பதாக உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுவதாக, ஸ்ட்ரைட் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

2014ம் ஆண்டு மாலைத்தீவுக்கு விஜயம் செய்த சீன ஜனாதிபதி தனது புவிசாா் மூலோபாய திட்டத்தில் மாலைத்தீவின் முக்கியத்துவம் பற்றி கோடிட்டு காட்டினாா்.

உலகின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் சீனா தனது பண பலத்தை மூலோபாய ரீதியில் மிகவும் திட்டமிட்டு பயன்படுத்துகிறது.

இதற்கு சிறந்த உதாரணம் ஹம்பாந்தோட்டை துறைமுகம். அப்போதைய மஹிந்த ராஜபக்‌ஷ  அரசாங்கம், சீன முதலீட்டால் பெறப்பட்ட 1.5 பில்லியன் அமொிக்க டொலா்களை செலவிட்டு இந்த துறைமுகத்தை நிா்மாணித்தது.

ஆனால், ஒரு சில வருடங்களுக்குள்ளேயே இந்த துறைமுகம் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது என்று நிரூபிக்கப்பட்டது. 2017ம் ஆண்டு கடனை திருப்பி செலுத்த முடியாமல் போன போது, 99 வருட குத்தகைக்கு துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றே வாங்கிக் கொண்டது.

சீனாவைப் பொறுத்தவரை, இந்திய பெருங்கடலில் அமைக்கப்பட்ட ஒரு துறைமுகம் அதற்கு மதிப்பு மிக்க ஒரு சொத்தாகும். பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றில் தனது கால்களை பதித்துக் கொள்வதற்கு  தருணம் பாா்த்து இருந்த சீனாவுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் இன்று ஒரு மூலோபாய சொத்தாக மாறி விட்டது.

மாலைத்தீவு மற்றும் அதன் தீவுக் கூட்டங்களும் புவியியல் ரீதியாக மூலோபாய ரீதியில் முக்கியத்துவமான இடங்களில் இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான எண்ணெய் தாங்கிகளும், கப்பல்களும் இந்த பாதைகளை ஊடறுத்தே செல்கின்றன. 

சீனாவின் இந்த நகா்வுகள் வெறுமனே வணிக ரீதியான நடவடிக்கை என்று சொல்லப்பட்டாலும் இதற்குள் புதைந்துள்ள நுண் அரசியல் மற்றும் மூலோபாய இடங்களை இலக்கு வைத்து நகரும் அதன் செயற்பாடு, பிராந்திய அரசியலில் ஒரு பதற்றத்தையும் போட்டியையும் உருவாக்கியுள்ளது.

 பலவீனமான ஜனநாயத்தின் மீது சீனாவின் ஊடுருவல்

சீனா கண்ணை மூடிக்கொண்டு தனது பணத்தை ஒவ்வொரு நாட்டிலும் வந்து கொட்டுவதில்லை. தனது ஊடுருவலை பலவீனமான ஜனநாயகம் கொண்ட, ஊழல் மிகுந்த ஆட்சியாளா்கள் உள்ள நாடுகளிலேயே மேற்கொள்கிறது. சீன ராஜதந்திரத்தில் இது அசாதாரமான விடயமுமல்ல.

ஊழல் அரசியல்வாதிகளை ஆட்சிபீடமேற்றுவதில் சீனா எப்போதும் ஆா்வமாகவே இருந்திருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல, இலங்கையில் தோ்தல் ஒன்றின் போது ராஜபக்ஷகளின் தோ்தல் பிரசாரத்திற்காக சீனா நிதியுதவி அளித்த செய்தி உலகம் அறிந்த விடயமே.

ஊழல் மலிந்து, பலவீனமான நிா்வாக கட்டமைப்புகள், பலவீனமான சிவில் சமூக அமைப்புகள், அரசியல் தகராறுகள் பிரச்சினைகள் அதிகமிருக்கும் நாடுகளில் சீனா களமிறங்க தயாராகவே இருக்கும். சீனா தனது உச்ச செயற்பாட்டை கொண்டிருக்கும் நாடுகளில் மேற் கூறப்பட்ட அத்தனை பிரச்சினைகளும் இருப்பதை கண் கூடாக பாா்க்கலாம்.

மாலைத்தீவில் கூட சீனாவின் அணுகு முறை மாற்றிமில்லாமல் நடந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீனை தனது கட்டுக்குள் வைத்து சீனா அதிகம் சாதித்திருக்கிறது.  இலங்கையில் மஹிந்த ராஜபக்‌ஷவை வைத்து சாதித்ததைப் போல.

எதிா்வரும்  2023 மாலைத்தீவில்  இடம்பெறவிருக்கும் தோ்தலில் அப்துல்லாஹ் யமீனை ஆட்சிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான சமூக, இலத்திரனியல் ஊடக பிரசாரத்தை சீனா செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கையின் நெருக்கடி நாளை மாலைத்தீவுக்கும் வர வாய்ப்பிருக்கிறது. சீனாவிடம் கடன் வாங்கிய ஆபிரிக்க நாடுகள், தனது நாட்டின் கேந்திர முக்கியத்துவமான இடங்களையும், வளங்களையும்  தாரை வார்த்துக் கொடுத்து வருகின்றன. 

இலங்கையும், மாலைத்தீவும் ஒரே காலப்பிாிவில் சீனாவால் இலக்கு வைக்கப்பட்ட நாடுகளாகும். கடல் வளத்தை தனது கட்டுக்குள் கொண்டுவர அயராது தொழிற்படும் சீனா, அதிகளவான கடல்வளத்தைக் கொண்ட மாலைத்தீவை கொடுத்த கடனுக்காக கபளீகரம் செய்யலாம்.

இலங்கையில் ராஜபக்‌ஷர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள்  இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தவில்லை. மாறாக அவை சுமக்க முடியாத சுமைகளாகவும், தாக்குப்பிடிக்காத “வெள்ளை யானை”களாகவும் பாா்க்கப்படுகின்றன.

சீனாவின் இந்தத் திட்டங்கள் இலங்கையின் வர்த்தகத்தை அதிகரிக்கவில்லை. மாறாக பல பில்லியன் டொலர் கடன் சுமையில் இலங்கையை மூழ்கடித்தன. ஊழலும், கடனும் தாங்க முடியாத நிலையில் இலங்கையின் பொருளாதாரம் இறுதி மூச்சை வாங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெளிநாட்டு செலாவணி முற்றாக தீர்ந்துவிட்ட நிலையில், உணவுப் பற்றாக்குறை, மின்வெட்டு, சமையல் எாிவாயு, எாிபொருள், மருந்து வகைகள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஏற்பட்ட மக்கள் துன்பங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில் கூட சீனா கடன் பிரச்சினையை மீள் பாிசீலனை செய்யாமல்,  இலங்கைக்கு உதவ மனமின்றி அதற்கு பதிலாக மேலும் கடன் வழங்கவே முன்வந்தது. 

ராஜபக்‌ஷர்களுக்கு இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் தொடா்பான குற்றச்சாட்டுகள் வந்தபோது அதற்கெதிராக எழுந்து அவா்களை பாதுகாத்த சீனா, இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போது பாராமுகமாக இருந்து விட்டது.

இதிலிருந்து புாிவது என்னவென்றால் சீனா தனது பங்காளிகளான ராஜபக்‌ஷர்களை பாதுகாக்க முன்வந்தது போல, நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையை பாதுகாக்க முன்வரவில்லை என்பதே.

ஒரு நாட்டை சூறையாடுவதற்கு சீனா தனக்கு இசைவான ஊழல்மிகுந்த தனிமனிதா்களை வளா்த்து பாதுகாத்திருக்கிறது. இலங்கையில் மஹிந்தவும், மாலைத்தீவில் யமீனும் சீனாவின் செல்லப்பிள்ளைகளாக செயற்பட்டனா்.

பல ஆபிாிக்க நாடுகளைப் போல இலங்கை திவாலாகி விட்டது. சீனாவிடமிருந்து  கடன் பெற்ற பாகிஸ்தான் வங்குரோத்து விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மாலைத்தீவுக்கும் இதே கதி ஏற்படும் என்று ஆரூடம் கூறப்படுகிறது.

தனது அரசியல் காய் நகா்த்தலுக்காக சீனா ஊழல் அரசியல்வாதிகளை பகடைக்காய்களாக பாவித்து பல நாடுகளை மீள முடியாத கடன் சுமையிலும், பொருளாதார, அரசியல் நெருக்கடியிலும் சிக்க வைத்துள்ளது. சீனாவும் ஊழல்வாதிகளும் வென்று விட்டாா்கள். நாட்டு மக்கள் தோற்று விட்டாா்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X