2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மலக் கப்பலுக்கு முன்பாக மண்டியிட்ட அரசாங்கம்

Editorial   / 2022 ஜனவரி 07 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்து என்ன? நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு நாட்டின் நிலைமை இருக்கிறது. எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு, எங்குமே நீண்ட வரிசை, பற்றாக்குறை, விலையேற்றம், பதுக்கிவைத்து கொள்ளை விலைக்கு விற்றல், இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதற்கிடையே, மியன்மாரில் இருந்து ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசியை உடனடியாக இறக்குமதிச் செய்வதற்கும் அதனை ஜனவரி மாத இறுதிக்குள் களஞ்சியப்படுத்துவதற்கும்  வர்த்தக அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமன்றி, அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து, வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்த நாடான இலங்கையே, வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மரக்கறிகளின் விலைகளும் பற்றாக்குறைக்கும் குறைவே இல்லை. தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுவருகிறது.

இது, நாளை, அல்லது நாளை மறுதினமே தீர்க்கக்கூடிய பிரச்சினையில்லை. நன்கு திட்டமிடவில்லையெனில் இப்பிரச்சினை நீண்டுக்கொண்டே செல்லும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடும் இல்லை. ஏனெனில், இரசாய ​பசளையின் தட்டுப்பாடு இன்னும் நீங்கவில்லை. யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் பின்னர், சேதன பசளை பயன்பாட்டுக்கு ஊக்குவிக்கப்பட்டது.

எனினும், இரசாயன உரத்துக்கு பழக்கிக்கொண்ட விவசாயிகளும் பண்பட்ட மண்ணும், ஏனைய உரங்களின் பா​வனைக்கு உரத்துக்கொடுக்கவில்லை. ஆதலால் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது, பற்றாக்குறையும் ஏற்பட்டது.

இந்நிலையில்தான், சீனாவிலிருந்து உரம் இறக்குமதிச் செய்யப்பட்டது. 20,000 தொன் உரங்களை ஏற்றிக்கொண்ட கப்பல், இலங்கை கடல் எல்லையில் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், அந்த உரம், பக்டீரியாவால் மாசுபட்டதாகக் கூறி இலங்கை நிராகரித்தது.

 

அதன் பின்னர்தான், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சர்ச்சை வெடித்தது. இவ்விரு நாடுகளும் மற்றைய நாடுகளை விட சிறந்த இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருந்தன என்பது கண்கூடு. சீனாவின் உரத்தை இலங்கை நிராகரித்ததுக்கு பதிலடியாக, மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சீனா சேர்த்துக்கொண்டது. இதுவும் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் சிறு கீறலை ஏற்படுத்தியது.

இலங்கையால் நிராகரிக்கப்பட்ட சீன உரக் கப்பல், சுமார் 70 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்தது. 70 நாட்களுக்கு பின்னர் திடீரென   காணாமற் போன அந்தக் கப்பல் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது.

 நிராகரிக்கப்பட்ட உரங்களின் மாதிரிகளை சுவிட்சர்லாந்தின் ஆய்வு மற்றும் சான்றிதழ் நிறுவனமான S.G.S க்கு அனுப்புமாறு சீனா கோரியிருந்தது.

மேலும் நிபந்தனைகள் ஏதுமின்றி ஆய்வகம் வழங்கும் பரிசோதனை முடிவுகளை இரு நாடுகளும் ஏற்க வேண்டுமென சீனா அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஆய்வக சோதனைகளில் மாசுபாடு தெரிந்தால், சீனா உரங்களை திரும்பப் பெறுமென்றும், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லையென கண்டறியப்பட்டால், இலங்கை உரங்களை கட்டணம் செலுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் சீனாவினால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டிருந்தது.  

எனினும், சீனாவின் கோரிக்கைக்கு எவ்வித பதிலுமின்றி உரங்கள் அடங்கிய கப்பல் இலங்கை கடற்பகுதியை விட்டு வெளியேறியது. மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தமையால், இரு நாடுகளுக்கும் இடையில்  சர்ச்சை இருப்பது அம்பலமானது.

சீன உர நிறுவனம் மற்றும் உள்ளூர் முகவரகத்துக்கு பணம் செலுத்துவதை தடுக்கும் வகையில், மக்கள் வங்கி உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி 03 ஆம் திகதி முடிவுக்கு வந்தது.

இதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணம் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடைகளை ரத்து செய்யுமாறு நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவு பிறப்பித்தார்.  உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள், கடன் கடிதத்துக்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன்  ஐக்கிய அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது. Qingdao Seawin Biotech Group Co., Ltd நிறுவனத்துக்கு இந்த தொகை ஜனவரி (07) செலுத்தப்படவுள்ளதாக இலங்கை மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

கடன் செலுத்தப்பட்டமைக்கு அப்பால், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் வருகைக்கு முன்னரான முயற்சியின் ஒரு கட்டமாகுமென பரவலாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன வெளிவிவகார அமைச்சர் ஜனவரி 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்திருந்த நிலையில், ஒரு நாளுக்கு முன்னதாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.   

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.  

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்க உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதை புரிந்து கொள்ள முடியும்.

மேலும், சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்திற்கு முன்னதாக உரப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.  கொழும்பு கமர்ஷல் உர நிறுவனம் மற்றும் லங்கா உர நிறுவனம் ஆகியன இதற்கான உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்துக்கு கடந்த 3 ஆம் திகதி அறிவித்திருந்தன.

சர்ச்சைக்குரிய அந்த உரக் கப்பல், நாட்டை நோக்கி வந்துகொண்டிருபோதே, சீனாவின் மலக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு கப்பல் வருகின்றது என பரவலாக குற்றச்சாட்டப்பட்டன. அக்குற்றச்சாட்டுகள் மறுதலிக்கப்படவில்லை. எனினும், அந்தக் கப்பலை நங்கூரமிடுவதற்கு அனுமதிக்காமையால், அது கடலில் அங்குமிங்கு பயணித்துக்கொண்டிருந்தது.

இந்நிலையில், சேருவில தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, “இந்த அரசாங்கம் ஒரு மலக் கப்பலுக்கு முன் மண்டியிட்டது” என்றார்.

சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன்  ஐக்கிய அமெரிக்க டொலர்களை மக்கள் வங்கி செலுத்தியுள்ளது. இந்நிலையில், சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து மக்கள் வங்கி நீக்கப்படுமா? இல்லையா? என்பதற்கு எதிர்காலமே பதில் சொல்லும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X