2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மலையக மக்களை வஞ்சித்த தமிழ்த் தேசியம்

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 08 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 09

மலையக மக்களைத் தனித்த தேசிய இனமாக அங்கிகரிப்பதில், தமிழ்த் தேசியமும் சிங்களத் தேசியமும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என்பதை, சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாறு, தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

‘மலையகத் தமிழர்’ என அடையாளப்படுத்தப்படும் மக்களின் இலங்கை வருகை, இலங்கையையும் இந்தியாவையும் ஒருசேர ஆண்ட பிரித்தானியக் கொலனியாதிக்கத்தின் விளைவிலானது. இலங்கையில் போக்குவரத்துத் துறையை விருத்தி செய்யும் விருப்பத்துக்கு, போதிய ஆட்பலம் இலங்கையில் இருக்கவில்லை. இதனால், தென்னிந்தியாவிலிருந்து ஆட்களைக் கொண்டுவருவதற்கு பிரித்தானியர் முடிவெடுத்தனர். வீதி அபிவிருத்தி, ரயில் பாதை அமைப்பு, கொழும்பு துறைமுகம் ஆகிய போக்குவரத்துக்கு அடிப்படையான அம்சங்களை உருவாக்கி, வினைத்திறனுள்ளதாக மாற்றுவதற்காக அந்த மக்கள் அழைத்துவரப்பட்டார்கள்.

இவ்வாறு வந்தவர்கள், நிலமற்ற விவசாயிகளும் கூலி உழைப்பாளர்களுமாகவே இருந்தார்கள். இலங்கையில் அவர்கள் எதிர்நோக்கிய சொல்லொணாத் துயரங்களால், திரும்பவும் பலர் இந்தியாவுக்கு மீண்டனர். இதனால் பிரித்தானியர், கங்காணி முறையை அறிமுகப்படுத்தி அவர்களைத் தக்கவைத்தனர்.

மிகுந்த கட்டுப்பாடுகளுக்குள் பெருந்தோட்டங்களுக்குள் அடைபட்ட மக்களுக்கான மருத்துவம், கல்வி போன்ற வசதிகள் கிடைக்க, மிக நீண்டகாலம் எடுத்தது. மலைக்காடுகளில் உருவாகிய தோட்டங்களிலேயே இம்மக்கள் குடியமர்த்தப்பட்டார்கள். அயலில் வாழ்ந்த சிங்கள மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு, இவர்களுக்கு மறுக்கப்பட்டது. அதேவேளை, இரண்டு சமூகங்களுக்கு இடையிலான இனப்பகையும் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது.

மலையகத் தமிழருக்கு எதிரான இனவாத அரசியல், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கியது. மலையகத் தமிழர், இலங்கைக்கு வந்து நூற்றாண்டு கடந்திருந்த நிலையில், அம்மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றி, எந்தவொரு சிங்களம், தமிழ் மொழி பேசும் அரசியல் தலைவரும் வாய்திறக்கவில்லை. எல்லோரும் அவர்களை, மலிவான கூலி உழைப்பாளர்களாகவே பார்த்தனர்.

இவர்களில் இருந்து வேறுபட்டிருந்தவர் பொன்னம்பலம் அருணாச்சலம் ஆவார். ஏனைய யாழ்ப்பாண உயர்சைவ வேளாள அரசியல் தலைவர்களில் இருந்து வேறுபட்டு, மலையகத் தமிழரது உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த ஒருவராக, தனித்துவமானவராகத் திகழ்ந்தார். அவரது சமூகக் நீதிக் கருத்துகள், அவரது சூழலை மீறியனவாக இருந்தன. இருந்தபோதும் அவரது முன்னோடியான செயற்பாடுகள், பின்வந்தவர்களுக்கு நம்பிக்கையளித்தன.

மலையகத் தொழிலாளர்களின் உரிமைகளுக்குக் குரல்கொடுக்க, மலையகத் தமிழர் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட உயர்குடியினர் முன்வரவில்லை. அதேவேளை, மலையகத் தலைவர்கள் என்று தம்மை அழைத்தோர் தொடர்ந்தும் தம்மை ‘இந்திய வம்சாவளியினர்’ என்று அழைத்தனர். அவர்கள் நேருவையும் காந்தியையுமே தம் தலைவர்களாக வரித்துக் கொண்டனர்.

இதனாலேயே 1939இல் உருவாகிய அமைப்பு ‘இலங்கை-இந்திய காங்கிரஸ்’ என்று பெயரிடப்பட்டது. இந்திய அடையாளத்தை முன்னிறுத்தியதன் மோசமான விளைவை, 1948இல் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம் வெளிப்படுத்தி நின்றது. எந்த இந்திய அடையாளத்தை இவர்கள் முன்னிறுத்தினார்களோ, அதே அடையாளமே இவர்களது குடியுரிமைப் பறிப்புக்குக் காரணமானது.  இதன் விளைவாலேயே, இலங்கை-இந்திய காங்கிரஸ், 1950இல் ‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்’ எனப் பெயர் மாற்றம் கண்டது.

சுதந்திர இலங்கையில், முதலாவது ஜனநாயக மறுப்பு பிரஜாவுரிமைச் சட்டமாகும். இந்தியத் தமிழர் எனவும் இந்திய முஸ்லிம்கள் எனவும் அன்று அறியப்பட்ட இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. இதில் ஜி.ஜி. பொன்னம்பலம் உள்ளிட்ட சில தமிழ்த் தலைவர்களின் பங்களிப்பு பெரியது.

இதேவேளை, இன்று மலையகத் தமிழர்களுக்கு நடந்தது, நாளை ஈழத் தமிழர்களுக்கு நடக்கும் என்ற எண்ணம் சில தமிழ்த் தலைவர்களுக்கு இருந்தது என்பதையும் இங்கு அடிக்கோடிட வேண்டும்.

ஆனால், உரிமையிழந்த மலையகத் தமிழரின் உரிமைக்கான வலுவான குரல்கள், இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருந்து எழவில்லை. மலையகத் தமிழர்கள், ‘வெளியார்’ என்ற மனநிலை, ஈழத்தமிழரிடம் அப்போது இருந்தது. அவர்களை ஓர் இனக்குழுவாகவோ, மக்கள் கூட்டமாகவோ அங்கிகரிக்க தமிழ்த் தேசியம் தயாராக இருக்கவில்லை.

மலையகத் தமிழரை, தமிழ்த் தேசியம் எவ்வாறு நடத்தியது என்பதை, 1970களில் தங்கள் நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நிலையில், வடபகுதிக்கு வந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களை, அங்கிருந்த தமிழர்கள் எவ்வாறு நடத்தினார்கள் என்பதில் இருந்து புரிந்து கொள்ளவியலும்.

1970களில், மலையகத்தில் தோட்டங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிட்ட வன்முறையால், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கில் கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் அதிகரித்திருந்த விவசாய அபிவிருத்தியை நம்பி, தொழிலாளர்கள் தோட்டங்களிலிருந்து வடக்கே புலம்பெயர்ந்தனர். அவர்களை ஏற்று, குடியேற்றிக் கண்ணியமான வாழ்க்கையை வழங்கியதில் சில தமிழ்த் தேசியவாதிகளின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, ‘காந்தியம் அமைப்பு’ இதனை முழுமூச்சாக மேற்கொண்டது.

ஆனால், அதைத் தாண்டி இம்மக்களின் மலிவான கூலி உழைப்பே, எல்லோருடைய கவனமுமாக இருந்தது. விவசாயத்தால் புதிய செல்வந்தவராகி இருந்தவர்களுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் மலையகத் தொழிலாளர்களின் வருகை வாய்ப்பாகியது. மலையகத் தமிழர்கள் தொடர்ந்தும் மலிவான கூலி உழைப்பாளர்களாகவே இருந்தார்கள்.

அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டன. அவர்களை, ‘கள்ளத்தோணிகள்’ என்று இழிவாக அழைத்தனர். அவர்கள், தங்கள் நியாயமான சம்பளத்தைக் கேட்டபோதெல்லாம், “பொலிஸிடம் பிடித்துக் கொடுக்கப்படும்” என்று அச்சுறுத்தப்பட்டனர். இவ்வாறு மலையகத் தொழிலாளர்கள், தொடர்ந்தும் நிலமற்றவர்களாக, உரிமை மறுக்கப்பட்டவர்களாக வாழ்ந்தார்கள்.

தமிழ்த் தேசியவாதத் தலைமைகள், அவர்களது உரிமைகள் குறித்தோ, அவர்களை ஒன்றிணைப்பது குறித்தோ சிந்தித்ததில்லை. தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகவே, வடபுலத்தில் குடியேறிய மலையகத் தமிழர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் மொழி பேசுகிற இன்னோர் இனக்குழுவை, சிங்களத் தேசியவாதம் ஒடுக்கியது போலவே தமிழ்த் தேசியவாதமும் ஒடுக்கியது.

பிரஜாவுரிமைச் சட்டத்தின் போது, தமிழ்க் காங்கிரஸ் மலையகத் தமிழருக்கு துரோகம் இழைத்ததைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியும் யாழ். உயர்குடிகளின் தேவைக்கான கட்சியானது.

பெயரளவில் தமிழ் மக்களின் கட்சி என்று பேசியபோதும், மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை, அதிலும் குறிப்பாக வடக்கு,  கிழக்கில் வாழ்ந்து வந்த மலையகத் தமிழரின் உரிமைகளை, தமிழ்த் தேசியவாதம் கவனத்தில் கொள்ளவில்லை.
1970களில் முனைப்படைந்த சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், மலையகத் தமிழரினதும் ஈழத்தமிழரினதும் உரிமைகளுக்கான இணைந்த போராட்டங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திய போதும், தமிழ்த் தேசியவாதத்தின் பிற்போக்குத்தனமும் சுயநலமும் அவ்வாறானதொரு போராட்டத்தை முன்னெடுக்க இடமளிக்கவில்லை. தமிழ்த் தேசியவாதத்தின் இக்குறுந்தேசியவாதத்தை, அதன் வாரிசுகளான ‘இயங்கங்கள்’ வரித்துக் கொண்டன.

சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறை, பெருந்தேசியவாத அகங்காரமாக வெளிப்பட்டு நின்ற நிலையில், தமிழ்த் தேசியவாதத்தின் இயலாமையும் அரசியல் வங்குரோத்தும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இந்நிலையில் தமிழ்த் தேசியவாதிகள் எல்லோரும், தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒரே குரலில் பேசவேண்டும் என்று கோரினர்.

தமிழ் பேசும் எல்லா மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொள்ளாத, அம்மக்களின் உரிமைகளுக்காக என்றுமே குரல்கொடுக்காத ஒரு குழுவினரின் கோரிக்கை, காலத்துக்கு ஒவ்வாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

இன்றைய நிலையில், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை வெறுமனே சிங்களம், தமிழ் ஆகிய தேசிய இனங்களின் பிரச்சினையாக நோக்குவது கோளாறானது.  தொடர்ச்சியான பெரிய நிலப்பரப்பொன்றுக்கு உரிமை கோரக் கூடிய சிங்கள, தமிழ்த் தேசிய இனங்கள் மட்டுமன்றி, தமக்கான தொடர்ச்சியான பெருநிலப்பரப்பற்ற போதும் மொழி, பண்பாட்டு, அரசியல், வரலாற்றுப் பொதுமைகளையுடைய முஸ்லிம், மலையகத் தமிழ் தேசிய இனங்களினதும் சுயநிர்ணயமும் சுயாட்சியும் என்ற அடிப்படையில் மட்டுமே, தேசிய இனப்பிரச்சினைக்கு, நிலைக்கக் கூடிய நல்ல தீர்வொன்றைக் காண இயலும். இதை ஏற்கத் தேசியவாதிகள் தயாராக இருக்கிறார்களா என்பது, பதிலை வேண்டி நிற்கும் கேள்வியாகும்.

தமிழருடனும் முஸ்லிம்களுடனும் ஒரே மொழியைப் பகிர்ந்து கொண்டுள்ள போதிலும், தனித்துவமானதும் சோகம் மிக்கதுமான வரலாற்றுப் பின்னணி மலையகத் தமிழர்களுடையது. கடந்த அரைநூற்றாண்டு காலத்தில், அவர்கள் ஒரு தனித்த தேசிய இனமாக வளர்ச்சியடைந்து உள்ளனர். தமிழர் என்ற பொது அடையாளத்துக்குள் எல்லோரையும் திணிப்பதும், மற்றச் சிறுபான்மையினரை விட நாமே அதிகம் பாதிக்கப்பட்டோம் என்பதனூடும் அவர்களது உரிமை மறுப்பைக் கவனிக்கத் தவறுவதும் தமிழ்த் தேசியவாத வரலாற்றின் மிகப்பெரிய பலவீனம். இதற்குத் தமிழ் மக்கள் கொடுத்த விலை அதிகம்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X