Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 18 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, கடந்த இரண்டு வருடங்களில் செய்ய முடியாதவற்றை, மீதமிருக்கின்ற மூன்று வருடங்களில் செய்யப் போவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கின்றார்.
நாடு என்றுமில்லாத பொருளாதார பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கூட, சீராகக் கொண்டு நடத்த முடியாத நெருக்கடிக்குள் அகப்பட்டுக் கொண்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக, கிட்டத்தட்ட 95 சதவீதமான பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஏகப்பட்ட பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இனிவரும் நாள்களிலாவது நிலைமைகள் சீரடையும் என்ற நம்பிக்கையை விட, இன்னும் மோசமடைந்து விடுமோ என்ற அச்சமே, மக்களை அதிகளவில் ஆட்கொண்டுள்ளது. இது, எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்மையைத் தோற்றுவித்துள்ளது.
நெருக்கடிகளுக்கு காத்திரமான தீர்வுகளைக் காணாமல், எகத்தாளமான தோரணையில் எடுக்கப்படும் தீர்மானங்களும் அரசியல் இலாபம் தேடுவோரின் காய் நகர்த்தல்களும், பாரதூரமான தாக்கங்களை நாட்டில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
‘ஒரு சோற்றுப் பீங்கானுக்குள் முழுப் பூசணிக்காயை மறைக்க முயல்வது’ போல, அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்தாலும், நிலைமைகளை வெற்றிகரமாக மறைக்கவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை. அவை கைமீறிச் செல்லும் ஒரு கட்டத்துக்கு, ஆட்சியாளர்கள் வந்திருக்கின்றார்கள்.
இந்த நெருக்கடியும் கவலையும், ஆட்சியாளர்கள் மீதான விசனமாக, விமர்சனமாக மாறியிருக்கின்றன. சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி, கணிசமான பெரும்பான்மை மக்கள் மட்டுமல்லாமல் ஆளும்தரப்பு அரசியல்வாதிகள் கூட, ஆட்சியின் தோல்வி பற்றி, காட்டமான கருத்துகளை முன்வைத்து வருகின்றார்கள்.
ஆகவே. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, எல்லாத் தரப்பும் கூட்டிணைந்து பணியாற்ற வேண்டிய தருணமாக இதைக் கருதலாம். ஆனால், ஆட்சியைக் கவிழ்ப்பது அல்லது, அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவது பற்றித்தான், இப்போது பெருந்தேசிய கட்சிகள் கரிசனை காட்டுகின்றன.
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க, பல அரசியல் தரப்புகள் வியூகங்களை வகுக்கக் தொடங்கியுள்ளன.
அரசியலில் அதுவும் ஓர் உத்திதான். இந்த அரசாங்கம் மக்களை சரியாக ஆளவில்லை; தமது போக்குகளை மறுபரிசீலனை செய்து கொள்ளவில்லை என்றால், மாற்றுத் தெரிவு குறித்து சிந்திப்பதில் தவறொன்றும் கூறமுடியாது.
பல்வேறு புதுக் கூட்டணிகள் பற்றிப் பேசப்படுகின்றது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியை பிரதானமாகக் கொண்டு, ஒரு கூட்டுப் பற்றிப் பேசப்படுகின்றது.
சஜித் பிரேமதாஸ, ஒரு கூட்டணி கனவோடு முன்னோக்கி நகரத் தொடங்கியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தலைமையிலான புதிய கூட்டணி பற்றிய அனுமானங்கள், அரசியல் பெருவெளியில் இப்போதைய பேசுபொருளாகியுள்ளன.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளராக இரண்டு தடவை பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனத்தை, சந்திரிகா அம்மையாரிடம் சிபாரிசு செய்து பெற்றுக் கொடுத்தவர்களுள் ஒருவராகக் கருதப்படும் சுசில் பிரேம்ஜயந்த, அரசாங்கத்தை விமர்சிக்கின்றார் என்ற காரணத்துக்காக, சர்வசாதாரணமாக பதவி பறிக்கப்பட்டார்.
அதுதான், இன்று புதிய கூட்டணி பற்றிய பேச்சுகளையும் ஆட்சிமாற்றத்துக்கான நகர்வுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. வழக்கம்போல, வஞ்சிக்கப்பட்டோர், மனம் வெறுத்தோர், அதிருப்தியடைந்தோர், பதவி ஆசை கொண்டோர் எனப் பலர் கூட்டுச் சேர்வதற்கான நிகழ்தகவுகள் உள்ளன. ஆனால், இந்த மந்திரமெல்லாம் பலிக்கும் என்பதற்கு, எவ்வித உத்தரவாதங்களும் கிடையாது.
எவ்வாறிருப்பினும், தாம் வெற்றிகரமான ஆட்சியை நடத்த முடியாமல் போய்விட்டது என்பதை, ஆளும் தரப்பினர் உணர்ந்திருப்பார்கள். அடுத்த தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம், அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. என்னதான் அவர்கள் வீராப்பாகப் பேசினாலும், உள்மனதில் இருக்கின்ற உதறலும் பயமும் அவர்களையும் மீறி வெளிப்படுவதை கூர்ந்து நோக்குகின்ற மக்கள் கவனிக்கத் தவறவில்லை.
இந்த வேளையிலேயே, இனிவரும் மூன்று வருடங்களுக்குள் எல்லாவற்றையும் செய்து காட்டுவோம் என்ற தொனியில், அவர்கள் மீண்டும் மக்களுக்கு வாக்குறுதி வழங்குவதை அவதானிக்க முடிகின்றது. அதாவது. கடந்த இரண்டு வருடங்களில் தம்முடைய தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதையும் நிறைவேற்ற முடியாமல் போயிருக்கின்றது என்ற தெளிவு, அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லலாம்.
இந்த இடத்தில் இரண்டு கேள்வி எழுகின்றன! அதாவது, முஸ்லிம் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கின்றார்களா? அல்லது, நிறைவேற்றவில்லை என்பதை உணர்ந்திருக்கின்றார்களா? என்பதுதான் அந்தக் கேள்விகளாகும்.
தற்போதுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், முஸ்லிம் கட்சிகளில் அங்கம் வகித்துக் கொண்டு, அரசாங்கத்துக்கு ‘ஜால்ரா’ அடிக்கின்ற எம்.பிக்கள், பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் ஏனைய முஸ்லிம் எம்.பிக்கள் ஆகியோரிடம் தனித்தனியாக கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இவையாகும்.
அவர்கள் மட்டுமன்றி, 1990களின் பிற்பகுதியில் இருந்து இந்த ஆட்சி 2015 வரையும், பதவிகளைச் சுகித்த முன்னாள் எம்.பிக்களும் அமைச்சர்களும் இந்த வினாவுக்கு பதிலளிப்பதில் இருந்து விதிவிலக்குப் பெற முடியாது.
ஏனெனில், கடந்த இரண்டு வருடங்களில் மட்டுமல்லாமல், அதற்கு முந்திய 20 வருடங்களில் கூட, முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை.
பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை விடவும், அதற்கான உளப் பூர்வமான நடவடிக்கைகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதே மிகப் பாரதூரமான விடயமாகும்.
ஒரு சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாயின், அதுபற்றிப் பரந்துபட்ட அறிவு இருக்க வேண்டும். சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பான ஆவணங்கள் கைவசம் இருக்க வேண்டும். தேவையான போது சமூகத்துக்காக யாருடனும் பேசுவதற்கும் தம்முடைய நிலைப்பாட்டை தெளிவுறச் சொல்வதற்குமான கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும்.
பணத்தாசையையும் பதவி ஆசையையும் விட, மக்களுக்குச் சேவையாற்றுவதே முன்னுரிமைத் தெரிவாக இருக்க வேண்டும். தமக்கு சொந்தப் புத்தி குறைவென்றாலும் தம்மைச் சுற்றியுள்ள தரப்பினர், அதாவது இணைப்பாளர்கள், ஆலோசகர்கள் சமூகப் பிரச்சினைகள் பற்றிய புரிதல் உள்ளவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வைப் பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால், இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்தப் பிரச்சினைகள் உள்ளன. அவர்களது எதிர்பார்ப்பு இதுதான் என்பதை, சரியாக அவர்கள் முன்வைத்திருக்கின்றனர்.
தமிழர் விவகாரத்தில் எதையாவது அடைந்து கொள்ள அவசியமென்றால், அவர்கள் ஜனாதிபதியுடன் பேசவும் தயார்; எதிர்க்கட்சியுடன் சேரவும் தயார். இரண்டு தரப்பையும் எதிர்க்கவும் தயார் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இவ்விதமான அரசியலில், முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் அரிச்சுவடி கூட கற்றுக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனமாகும்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை, கடந்த இரண்டு வருடங்களாக நிறைவேற்றவில்லை என்பதை, அரசாங்கம் ஏற்றுக் கொள்கின்றது. தமிழ்த் தேசிய கட்சிகளும் தமது கையறு நிலை குறித்து, அடிக்கடி கருத்து வெளியிடுகின்றன. இது அவர்கள், தமது தவறுகளைக் கொஞ்சமாவது திருத்திக் கொள்ள ஏதுவாகலாம்.
ஆனால், ஆண்டாண்டு காலமாக முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர், தமது தவறுகளை உணர்ந்து கொண்டதாகவோ திருத்திக் கொண்டதாகவோ தெரியவில்லை. பழையவர்கள் இப்படியென்றால், புதிதாக எம்.பியாக வருகின்றவர்கள் அதைவிட மோசமாக, மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்.
மக்களது பிரச்சினைகளை எவ்வாறு முன்வைக்கலாம்? எவ்வாறான நகர்வின் ஊடாக அவற்றுக்கான தீர்வுகளை நோக்கி நகரலாம்? என்று யோசிக்காமல், இப்போது யாருடன் ‘டீல்’ பேசலாம்? தேர்தல் வரும்போது மக்களை எவ்வாறு பேய்க்காட்டலாம் என்று சிந்திக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளாலேயே முஸ்லிம் சமூகம் இவ்வளவு இழப்புகளையும் சந்தித்திருக்கின்றது.
பொதுவாக, முஸ்லிம் அரசியல்வாதிகளை ‘கள்வர் கூட்டம்’ என்று மக்கள் விமர்சிக்கின்ற போதிலும், அவர்களது தவறுகள் பற்றிப் பொதுவெளியில் யாரும் கேள்வி எழுப்பியதில்லை. பள்ளிவாசல்களோ, ஜம்மியத்துல் உலமா சபை போன்ற உயரிய சபைகளோ, சிவில் அமைப்புகளோ, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் போன்ற மாணவர் மையங்களோ இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.
சமூக சிந்தனையே அற்ற அரசியல்வாதிகளுக்குத் திரும்பத் திரும்ப வாக்களித்துக் கொண்டும், மௌனமாக இருப்பதன் ஊடாக, அவர்கள் செய்கின்ற தவறுகளை அங்கிகரித்துக் கொண்டும் காலத்தைக் கடத்துகின்ற ஒரு மக்கள் கூட்டத்தின் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதற்கு, நிகழ்கால இலங்கை முஸ்லிம்கள் நல்ல உதாரணமாவர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago