2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

முஸ்லிம்கள் மீதான கறையும் பேராயரின் உரையும்

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 15 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பது, கட்டம்கட்டமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்குப் பின்னால், பெரியதோர் அரசியல் நிகழ்ச்சி நிரலும் சதித்திட்டமும் இருக்கலாம் என்று, ஆரம்பத்தில் துளிர்விட்ட சந்தேகம், இப்போது வலுவடைந்து இருக்கின்றது.

இந்நிலையில், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், ஈஸ்டர் தாக்குதல் பற்றிக் கூறியுள்ள கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை.

“ஏப்ரல் 21 தாக்குதல்கள் இடம்பெற்றவுடன் கிடைக்கப் பெற்ற ஆரம்பக்கட்ட தகவல்களின் அடிப்படையில், இஸ்லாமிய அடிப்படைவாத குழுவொன்றே இத்தாக்குதலை மேற்கொண்டதாக நாம் நினைத்தோம். ஆனால், அதன் பின்னர் இவ்வளவு காலமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், இதற்குப் பின்னால் பெரிய அரசியல் சதியொன்று இருக்கின்றது என்ற விடயம் தெரிய வந்திருக்கின்றது” என்று, தனது மனதில் இருந்ததை பேராயர் போட்டுடைத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலால், நேரடியாக பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தின் பிரதிநிதியான பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, திருத்தந்தை பிரான்ஸிஸை வத்திகானில் சந்தித்துவிட்டு, ஜெனீவாவுக்குச் சென்று இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.

இவ்வளவு காலமாக நீதி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் கூறிய இந்தக் கருத்து, மறுபுறத்தில், இத்தாக்குதலின் பிறகு முஸ்லிம்கள் மீது படிந்திருந்த அபகீர்த்தியை, கறையை பெருமளவுக்கு துடைத்தெறியக் காரணமாகி இருக்கின்றது. 

நாடு இப்போதிருக்கின்ற நெருக்கடி நிலையில், உள்நாட்டு விவகாரத்தை சர்வதேசத்துக்கு அவர் கொண்டு சென்றதை, அரசாங்கத் தரப்பில் இருந்து நோக்குகின்றவர்கள் விமர்சிக்கின்றனர். ஆனால், உள்நாட்டில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படாமையால் பேராயர் ஜெனீவாவுக்குப் போயிருக்கின்றார் என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கத்தோலிக்க மதத் தலைவர்களையும் இஸ்லாம் போன்ற ஏனைய மதத் தலைவர்களையும் இவ்வுலகம் வேறு வேறு கோணங்களிலேயே நோக்குகின்றது. எவ்வாறிருப்பினும், தத்தமது சமூகங்கள் பாதிக்கப்பட்ட போது,  முஸ்லிம் மதத் தலைவர்களோ, இந்து மதத் தலைவர்களோ பௌத்த துறவிகளோ, நேரிய மனத்துடன் பக்குவமாக, அதற்காகக் குரல் கொடுக்க முன்வரவில்லை. அந்தவகையில், இதைப் பேராயர் செய்து வருகின்றார்.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது, தமிழ்பேசும் கத்தோலிக்கர்களை இலக்குவைத்து, சிங்கள கத்தோலிக்கர்கள் பெருமளவுக்கு அகப்படாமல், தாக்குதல் வடிவமைக்கப்பட்டிருந்தது. முன்னர் பதவிவகித்த அரசாங்கம், இந்தக் கும்பலுக்கு மாதாந்தம் கொடுப்பனவு வழங்கியதாகக் கூறப்பட்டது. அத்துடன், தாக்குதல் நடத்தப்படப் போகின்றது என்ற புலனாய்வுத் தகவல் முன்கூட்டியே கிடைத்திருந்தும், மைத்திரி-ரணில் அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பொறுப்புடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்தத் தாக்குதல் தொடர்பாக, அரசாங்கங்கள் செயற்பட்ட விதத்தில் ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன. அவர்களது செயற்பாடுளை வைத்து, ‘நிஜம் எதுவாக இருக்கும்’ என்று உய்த்தறிந்து கொள்வது கடினமான காரியமாக இருக்கவில்லை.

இந்தப் பின்னணியிலேயே, இப்போது பேராயரால் உலக அரங்கில் சில விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.  ‘முஸ்லிம்கள் ஒரு சமூகமாக இத்தாக்குதல்களில் பங்கேற்கவில்லை’ என்ற அவரது நிலைப்பாடே நிதர்சனமானது. ஆனால், ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை களத்தில் நின்று நடத்தியது, முஸ்லிம் அடிப்படைவாதக் குழு ஒன்று என்பதில், இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இதை மறுக்கும்படியான ஆதாரங்கள், இதுவரை கிடைக்கவில்லை.

பேராயர் சொல்வது போல, இதற்குப் பின்னால் அரசியல் சதி இருந்தாலும், அதன் கருவியாய் இருந்தவர்கள் இந்தக் கும்பலே என்பதை மறுக்கவியலாது. அந்தவகையில், ‘முஸ்லிம்’ என்ற அடையாளத்துடன் தொப்பி, தாடியுடன், சமய விடயங்களைப் பேசிக் கொண்டு, ஒரு பயங்கரவாதக் குழு தமக்குள் வளர்ந்ததற்கு, முஸ்லிம் சமூகம் பொறுப்புக் கூறுவதில் இருந்து விலக முடியாது.

ஆனால், உண்மையிலேயே முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமன்றி, இந்த நாட்டில் வாழ்கின்ற வேறு எந்த இன, மத குழுமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் யாரையும் கொலை செய்ய வேண்டும் என்ற குரூர எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை.
சாதாரணமாக வாழ்வதற்காகவே போராட வேண்டியிருக்கின்ற ஒரு காலகட்டத்தில், யாரையும் திட்டமிட்டுப் படுகொலை செய்வதால், சாதாரண பொதுமகனுக்கு எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லை. அதுமட்டுமன்றி, கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த முன்பகையும் இருந்ததும் இல்லை.

எனவே, இவ்வாறு தாக்குதல் நடத்துவதால் யாருக்கு இலாபம் கிடைக்குமோ அவர்கள்தான் இதற்குப் பின்னால் இருந்து இயக்குகின்றார்கள் என்பதே, உலக அனுபவமும் ஆறாம் அறிவுக்கு எட்டுகின்ற விடயமும் ஆகும். அது ஒரு பயங்கரவாத இயக்கமாகவும் இருக்கலாம்; வெளிநாடாகவும் இருக்கலாம்; அரசியல் தரப்பாகவும் இருக்கலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக உயிர்களை, உடமைகளை நேரிடையாகவே இழந்தவர்கள், கத்தோலிக்க மக்களே ஆவர். ஆனால், அதைவிட அதிகம் உளவியல் நெருக்கடிக்கும் இனவாத ஒடுக்குமுறைக்கும் ஆளானவர்கள் முஸ்லிம் சமூகமாகும். அத்துடன் சிங்கள, தமிழ் மக்களும் இது விடயத்தில் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார்கள்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் என்ற பிம்பத்தை இனவாதிகளும் சில ஊடகங்களும் கட்டமைத்தன. இது தவிர, வடமேல் மாகாணத்தில் பெரும் இனக்கலவரம் தூண்டிவிடப்பட்டது. இதை வைத்துக் கொண்டு, முஸ்லிம்களின் எல்லா விவகாரங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவர, இனவாத  சக்திகளும் அரசியல்வாதிகளும் இன்று வரை முயன்று கொண்டிருக்கின்றனர்.

எந்தச் சக்தியால், ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், சஹ்ரான் கும்பலோ அல்லது அதுபோன்ற அடிப்படைவாதிகளோ தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஏனென்றால், இவர்களின் இந்த மிலேச்சத்தனமான காரியத்தால், மிக மோசமான விலையை முஸ்லிம் சமூகம் கொடுத்துவிட்டது; சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டது.

அந்த வகையில், இங்கே பிரதானமாக கத்தோலிக்க மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதற்கு மேலதிகமாக எந்தவித குற்றமும் இழைக்காமல் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். இதன் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதன் ஊடாகத் தம்மீதான கறை நீங்க வேண்டும் என அவர்கள் அவாவி நிற்கின்றார்கள். சிங்கள, தமிழ் மக்களுக்கும் உண்மையை அறிய வேண்டிய தேவையுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குலை, யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எந்த மதமும் இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை அங்கிகரிக்கவும் இல்லை. குறிப்பாக, இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம்களே அல்ல என்பதை, முஸ்லிம் சமூகம் சொல்லாலும் செயலாலும் பகிரங்கமாகவே வெளிப்படுத்தி விட்டது.

எனவே, மனித குலத்துக்கு எதிரான சஹ்ரான் கும்பலையும் அதற்குப் பின்னால் இருந்தவர்களையும் கண்டறிந்து, நீதியை நிலைநாட்ட வேண்டிய கடமை அரசாங்கங்களுக்கும் நீதித்துறைக்கும் இருந்தது. ஆனால், இதுவிடயத்தில் பொறுப்புவாய்ந்த தரப்புகள் நியாயபூர்வமாக செயற்படவில்லை.

இதில் முதலில் தவறிழைத்தது, மைத்திரி - ரணில் அரசாங்கம்தான். தமது ஆட்சியில் இப்படியான ஒரு தாக்குதல் நடைபெறுகின்றது என்றால், அதனை விசாரிக்க முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களும் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கின்றார்கள் என்றால், மிக இலாவகமாக அதைச் செய்திருக்க வேண்டும்; ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, பிரசாரம் செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த ராஜபக்‌ஷர்களின் அரசாங்கமாவது, அதைச் செய்து காட்டியிருக்க வேண்டும். ஆனால், இந்தத் தாக்குதலைத் திட்டமிட்ட சதிகார குழு யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு,  இன்னும் மக்களுக்குச் சொல்லப்படவில்லை. எனவே, எல்லா ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இவ்விதம் செயற்படுகின்றமையே, இதற்குப் பின்னால் வேறு ‘அரசியல் சதி ஒன்று இருக்க வேண்டும்’ என்ற பலமான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

அந்தச் சந்தேகத்தை தீர்க்கும் விதத்தில், நீதியை நிலைநாட்டி உண்மையை மக்களுக்குச் சொல்வதில் இரண்டு அரசாங்கங்களும் விட்ட, விட்டுக் கொண்டிருக்கும் தவறுகள்தான், பேராயரை இன்று ஜெனீவா மேடையில் கொண்டு சென்று நிறுத்தியிருக்கின்றது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது, மிலேச்சத்தனமான வேலையாகும். இதில் பொறுப்பு வாய்ந்தவர்கள் குற்றவாளிகளை, அவர்களை  இயக்கியவர்களை கண்டுபிடித்து, நீதியை நிலைநாட்டத் தவறியதால், இப்போது, நேரிடையாகவே ‘அரசியல் தரப்பினரை’ நோக்கி விரல் நீட்டப்படுகின்றது.

எனவே, இந்தக் கறைகள் தம்மீது படிந்து விடாது தவிர்ப்பதற்காகவாவது, அரசாங்கம் உண்மைச் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தி, நீதியை நிலைநாட்ட வேண்டும். அதுதான் ஒட்டுமொத்த இலங்கையரின் எதிர்பார்ப்புமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .