2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களின் அடைவு எது?

Johnsan Bastiampillai   / 2022 மே 01 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

 

 

நாடு பூராவும் முன்னெடுக்கப்பட்டு வரும் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டங்கள் நாளுக்கு நாள் புதிய வடிவங்களை எடுத்து வருகின்றன. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலுள்ள “கோட்டா ஹோ கம”வில் நடைபெற்றுவரும் போராட்டம், சித்திரைப் புத்தாண்டு கால விடுமுறையுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று ராஜபக்‌ஷர்கள் உள்ளிட்ட பல தரப்புக்களும் நம்பின. ஆனால், அந்தப் போராட்டம் இன்றோடு 20ஆவது நாளை எட்டுக்கின்றது. போராட்டக்காரர்கள் பிரதமரின் வாசல்ஸ்தலமான அலரி மாளிகையையும் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டார்கள். ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ தென்னிலங்கை மக்களை ஒருங்கிணைத்து பாரிய பேரணிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தப் போராட்டங்களை எப்படியாவது நலிவடைய வைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ராஜபக்‌ஷர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், போராட்டத்தின் வலு அதிகரிக்க அதிகரிக்க ராஜபக்‌ஷர்களின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டது. கோட்டாபய ராஜபக்‌ஷ இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராக இருப்பதாக பௌத்த மகா சங்கங்களிடம் அறிவித்துவிட்டார். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது என்றால், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும். ஆனால், மஹிந்தவுக்கு பிரதமர் பதவியைவிட்டு செல்லும் எண்ணம் இல்லை.

மஹிந்த உள்ளிட்ட ஏனைய அனைத்து ராஜபக்‌ஷர்களையும் இராஜினாமாச் செய்ய வைப்பதன் மூலம் தனக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை குறைக்க முடியும் என்று கோட்டா நினைக்கிறார். அதன்போக்கிலேயே விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட தரப்பிரனை வைத்து மஹிந்தவை பதவி விலக வைக்கும் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

ஆனால், தான் பதவி விலகுதல் என்பது தன்னுடைய வாரிசுகளின் எதிர்கால அரசியல் வாழ்க்கையையே இல்லாமல் ஆக்கிவிடும் என்று மஹிந்த நினைக்கின்றார். அதன்போக்கில் அவர், கோட்டாவின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடத் தொடங்கிவிட்டார்.

மஹிந்தவுக்கு எதிர்க்கட்சி அரசியல் என்பது புதியதல்ல. அவர் அதில் முதன்மையாக செயற்படவும் கூடியவர். ஆனால், இப்போது தென்னிலங்கையில் ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக எழுந்துள்ள அதிருப்தி என்பது எதிர்க்கட்சி அரசியலை செய்வதற்கு எந்த வகையிலும் உதவாது. அப்படியான நிலையில், தான் பதவி விலகினால் அது ராஜபக்‌ஷர்களின் அரசியல் இருப்பை குறைந்தது ஒரு தாசப்த காலத்துக்காவது இல்லாமல் செய்துவிடும் என்று அச்சப்படுகின்றார். அது நாமல் ராஜபக்‌ஷவிடம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையளிக்க வேண்டும் என்கிற அவரது கனவை கலைத்துவிடும்.

எப்படியாவது மீதமுள்ள இரண்டு ஆண்டுகளை ஜனாதிபதியாகவே கடந்துவிட வேண்டும் என்று கோட்டா நினைக்கிறார். அதன் பின்னர் தனக்கு எந்தவித அரசியல் வாழ்வும் இல்லை என்பதையும் அவர் நன்கறிவார். அதனால், இடைநடுவில் பதவி விலகிய அல்லது பதவி விலக்கப்பட்ட ஜனாதிபதியாக தன்னுடைய பெயர் பதவாகிவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார். அதனால்தான், பௌத்த மஹாசங்கங்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தங்களில் பாதங்களைப் பணிந்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்று எழுதியிருக்கிறார்.

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டுப் போராட்டங்கள் அடுத்த கட்டத்தை அடைந்தாலும், அதனை எவ்வாறு கையாள்வது என்று எதிர்க்கட்சிகளிடத்திலும் குழப்பமே காணப்படுகின்றது. இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் கோட்டாவினால் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளை நோக்கி அழைப்பு விடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், ராஜபக்‌ஷர்கள் அங்கம் வகிக்கும் ஆட்சியில் தன்னால் பங்காளியாக முடியாது என்பது சஜித் பிரேமதாஸவின் நிலைப்பாடு. அது தன்னுடைய எதிர்கால அரசியலை பாழாக்கிவிடும் என்று நினைக்கிறார். அதனால்தான், அவர் ராஜபக்‌ஷர்கள், அவர்களின் சகபாடிகள் அங்கம் வகிக்கும் அரசாங்கமொன்றில் தன்னால் பங்களிக்க முடியாது என்கிறார். அத்தோடு, நல்லாட்சி காலத்தில் நிர்வாக ரீதியாக மஹிந்த ஆதரவு அதிகாரிகள் விளைவித்த குழப்பங்கள், நல்லாட்சி மீதான நம்பிக்கையீனத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தது. அதனால்தான் ராஜபக்‌ஷர்களின் எந்தவித ஒட்டுறவிற்கும் சஜித் தயாராக இல்லை.

அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் பொதுத் தேர்தலொன்றின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தோடுதான் இருக்கின்றார். அந்த நிலைப்பாட்டில்தான் மக்கள் விடுதலை முன்னணியும்கூட இருக்கின்றது. எதிர்க்கட்சிகள் கொண்டுவர நினைக்கும் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக அநுரகுமார திசாநாயக்க அறிவித்தாலும், அவர் பொதுத் தேர்தல் ஒன்றின் மூலமே தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்கிறார்.

தற்போது ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வது என்பது ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான தென்னிலங்கையின் அதிருப்தியை தங்கள் மீது திருப்புவதாக அமையும் என்றும் சஜித் அச்சம் கொள்கிறார். ஏனெனில் நாட்டின் வங்குரோத்து நிலையை சரி செய்வதற்கு எவ்வளவு முறையாக  திட்டமிட்டாலும் சில ஆண்டுகளாவது ஆகும். அப்படியான நிலையில், மக்கள் இன்றைக்கு சந்தித்துள்ள விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்தப் பிரச்சினையையும் உடனடியாக தீர்க்க முடியாது.

குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு என்பது சாத்தியமில்லாதது.  இலங்கைக்கு கடன்களை வழங்குவதற்கு தயாராக இருக்கும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட எந்தத் தரப்பும், வரி குறைப்பு விடயத்தை செய்ய அனுமதிக்காது. இன்னும் சில மாதங்களுக்கு பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கவே செய்யும். அதனால், தற்போதுள்ள கடும் நெருக்கடி நிலையை ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வந்தபின்னர் ஆட்சியை கைப்பற்றுவதுதான் நல்லது என்பது சஜித்தின் எதிர்பார்ப்பு. இந்த நிலைப்பாட்டில்தான் குறிப்பிட்டளவான எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் இருக்கிறார்கள்.

எந்தக் காரணம் கொண்டும் ராஜபக்‌ஷர்கள் மீதான மக்களின் எதிர்ப்பினை பங்கிட்டுவிடக் கூடாது, அது அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றியின் அளவை பாதிக்கும் என்கிற அச்சம்.

இன்னொரு பக்கம், ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த அடுத்த கட்டக் கேள்விகள் பதில்கள் இன்றி வலம் வருகின்றன. அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்துக்குள் நிறைவேற்றப்பட்டால், அடுத்து ஆட்சியை அமைக்கப் போவது யார்? இதற்கு பதில் இல்லை. ராஜபக்‌ஷர்கள் அங்கம் வகிக்கும் எந்தவோர் ஆட்சியிலும் தான் பங்காளி ஆகப்போவதில்லை என்ற சஜித்தின் அறிவிப்பு, ஜனாதிபதி கோட்டா குறித்தானதும்தான்.

அப்படியான நிலையில், பாராளுமன்றத்துக்குள் அரசாங்கத்தை தோற்கடித்தாலும், ஜனாதிபதியாக கோட்டாவே இருப்பார். அவர், பாதுகாப்பு, ஊடகம் உள்ளிட்ட அமைச்சுக்களை தன்வசம் வைத்துக்கொள்ள முனைவார். அது, பிரச்சினையாக இருக்கும். அதனால், பொதுஜன பெரமுனவின் மாற்று அணியோ, மைத்திரியோ அல்லது விமல் வீரவங்ச அணியோதான் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் சூழல் உருவாகும்.

அவ்வாறான சூழலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் கட்சிகள் விரும்பாது. அதனால்தான், ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்களை ஆதரிக்கும் கூட்டமைப்பு, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கின்றது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு ஆட்சியில் ஸ்திரமான தரப்பொன்று அமர வேண்டும். அதற்கு அமைவான சூழல் உருவாகாத வரையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பது என்பது சிக்கலானதுதான். அது, விமல் உள்ளிட்டவர்கள் ஆளுமை செலுத்தும் ஓர் இடைக்கால அரசாங்கம் உருவாக்கிவிடக் கூடாது என்கிற அச்சம் சார்ந்தது. ஏனெனில், விமல், கம்மன்பில போன்றவர்கள் ஆளுமை செலுத்தும் அரசாங்கத்தினால் நாட்டை மீட்டெடுப்பதற்கான எந்தவித திட்டங்களும் இல்லை. அவர்கள், இனவாதத்தின் வழியாகவே அனைத்தையும் கையாள நினைப்பார்கள்.

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டங்களின் அரசியல் அடைவு என்பது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்போடு ஆரம்பமாக வேண்டும். அதுதான், பாராளுமன்றத்துக்குள்ளும் ஸ்திரமான அரசாங்கத்தினை அமைக்கும் வாய்ப்பினை உருவாக்கும். இல்லையென்றால், விட்ட குறை தொட்ட குறையாக ராஜபக்‌ஷர்களின் எச்சத்தோடும், நிறைவேற்று அதிகாரம் என்கிற அச்சுறுத்தலோடும்தான் இலங்கை ஆட்சி அதிகார கட்டமைப்பை வைத்திருக்கும். அவ்வாறான நிலை இருக்கும் வரை இலங்கையினால் உய்யவே முடியாது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X