Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2022 மார்ச் 10 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
நாடு எதிர்நோக்கி இருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி, அரசாங்கத்துக்குள் பிளவுகளை உருவாக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. அதன் வெளிப்பாடாகவே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கருதலாம்.
சரியாகக் கணக்குப் பார்த்தால், பொருளாதார நெருக்கடி இல்லாவிட்டாலும் இந்த இருவருக்கும், ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பாரியதொரு வெடிப்பு ஏற்படத்தான் இருந்தது. பொருளாதார நெருக்கடி அதைத் துரிதப்படுத்தியது. அல்லது, ஆளும் கூட்டணியில் உள்ள சிறுகட்சிகளுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மோதலை வெளிக் கொணர, பொருளாதார நெருக்கடி ஒரு வாகனமாக அமைந்தது எனலாம்.
“வழி தவறிச் செல்லும் அரசாங்கத்தை, நேர்வழிக்கு கொண்டு வர நாங்கள் முயன்றோம்; அதன் காரணமாகவே ஆளும் கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டு, நாம் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டோம்” என்று விமலும் கம்மன்பிலவும் கூறுகின்றனர்.
ஆனால், பசில், தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே, அவருக்கும் விமலுக்கும் இடையே பாரியதொரு பிணக்கு இருந்தது.
2015ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த போது, புதிய அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம், தாம் சிறையில் அடைக்கப்படுவோம் என நினைத்த பசில், உடனடியாக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு, தாம் பிரஜாவுரிமை பெற்றுள்ள அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதையடுத்து, “மஹிந்தவின் தோல்விக்கு பசிலே காரணம்” என விமல் கூறினார்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது. அதைடுத்து, ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான புதிய அரசாங்கம், 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது. அதன்மூலம், வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும், இலங்கையில் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ஷவுக்காகவே, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்குள் அந்தச் சட்டப் பிரமாணம் புகுத்தப்பட்டது என்பது சகலரும் அறிந்திருந்தனர். விமல், கம்மன்பில போன்றோர் இதனை எதிர்த்தனர். ஆனால், கோட்டாபய அவர்களைச் சமாளித்து, தமது சகோதரனுக்கு அமெரிக்க பிரஜாவுரிமையையும் வைத்துக் கொண்டு, அமைச்சரவைக்குள் புகுந்து கொள்ள வழி சமைத்துக் கொடுத்தார்.
ஆளும் கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளின் உதவியுடனேயே அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தது. அதன் மூலம், பசிலுக்கு அமைச்சராகப் பதவியேற்கவும் முடிந்தது.
ஆனால், பசில் பதவிக்கு வந்ததன் பின்னர், அவர்களை ஒதுக்கித் தள்ள ஆரம்பித்தார். முன்னைய மஹிந்தவின் ஆட்சியிலும் பசில் இதையே செய்தார். அதன் காரணமாகவே, மஹிந்தவின் தோல்விக்கு, பசில் தான் காரணம் என விமல் சாடியிருந்தார்.
இம்முறையும் பசில் அவ்வாறே நடந்து கொண்டதால், ஆளும் கூட்டணியில் உள்ள சகல சிறுகட்சிகளும் தனியாக இயங்க ஆரம்பித்தன. பொதுஜன பெரமுனவின் தலைமையை, ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பத்திரிகை நேர்காணல் ஒன்றின்போது விமல் கூறினார்.
பொதுஜன பெரமுனவின் பசில் ஆதரவாளர்கள், அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். அத்தோடு, அச்சிறு கட்சிகள், ‘வழி தவறிச் செல்லும் அரசாங்கத்தை நேர்வழிக்கு எடுக்க’ முயன்றன.
அதன் பிரகாரம், கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையத்தின் பெரும்பாலான பங்குகளை, இந்தியாவின் ‘அதானி’ என்ற நிறுவனத்திடம் கையளிக்க அரசாங்கம் முற்பட்ட போது, 2021 ஜனவரி மாதம் அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. அப்போது, இச்சிறு கட்சிகளும் தனிக்குழுவாக அதை எதிர்த்தன.
2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், கொவிட்-19 பெருந்தொற்று நோயின் மூன்றாவது அலை, நாட்டில் மிக மோசமானதொரு நிலைமையை தோற்றுவித்த போது, அரசாங்கம் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு, நாட்டை முடக்கத் தயங்கியது. அப்போது, சுகாதாரத் துறையினரும் எதிர்க்கட்சியினரும் நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, இச்சிறு கட்சிகளும் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அறிக்கையொன்றை விடுத்தனர். அவ்வேளையில், அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு, ஜனாதிபதி கடும் தொனியில் தம்மிடம் கூறியதாக, இப்போது விமல் கூறுகிறார்.
கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தை, அமெரிக்காவின் ‘நியூபோட்ரஸ்’ நிறுவனத்திடம் கையளிக்க, அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம், நிலைமையை உச்சக்கட்டத்துக்குக் கொண்டு வந்தது. அந்த ஒப்பந்தத்தை, எதிர்க்கட்சிகள் எதிர்த்தன; இச்சிறு கட்சிகளும் எதிர்த்தன.
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் அந்த முடிவுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்த போது, இக்கட்சிகளும் அவ்வழக்கில் இணைந்து கொண்டன. “முன்னைய எந்தவோர் அரசாங்கத்தின் காலத்திலும், இது போன்றதோர் ஊழல் இடம்பெற்றதில்லை” என, அப்போது கம்மன்பில கூறியிருந்தார்.
இவ்வனைத்து நடவடிக்கைகளும், பசிலின் கீழுள்ள பொருளாதாரத் துறையுடன் தொடர்புள்ளவையாகும். அதேவேளை, அவற்றின் போது ஜனாதிபதி கொட்டாபய ராஜபக்ஷ நல்லவர்; பசிலே ஜனாதிபதியை தவறான வழியில் இட்டுச் செல்கிறார் என்ற தொனியில் தான் விமலும் கம்மன்பிலவும் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
ஆனால், அது அவ்வாறில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதாக இருந்தால், அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்துவிட்டு, அவ்வாறு செய்யலாம் என இதற்கு முன்னர் ஜனாதிபதி பகிரங்கமாக கூறியிருந்தார். தமது அமைச்சர் பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே, இவர்கள் ‘ஜனாதிபதி நல்லவர்’ என்று கூறுகின்றனர் என்பதும் தெளிவாக இருந்தது.
ஆளும் கூட்டணியின் சிறு கட்சிகளின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும், உண்மையிலேயே தம்மைக் கணக்கிலெடுக்காத பசிலுக்குத் தெரிவிக்கும் எதிர்ப்புகளேயன்றி, ‘வழி தவறிச் செல்லும் அரசாங்கத்தை, நேர்வழிக்கு எடுக்க’ மேற்கொள்ளும் நடவடிக்கையல்ல. அரசாங்கத்தை நேர்வழிக்கு எடுக்க வேண்டும் என்றால், அச்சிறு கட்சிகள் எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சர்வாதிகாரியை தோற்றுவித்த 20ஆவது திருத்தத்தையே முதலில் எதிர்த்து இருக்க வேண்டும்.
அந்தத் திருத்தத்தின் மூலம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழேயே இப்போது ஜனாதிபதி விமலையும் கம்மன்பிலவையும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். முன்னைய அரசாங்கம் நிறைவேற்றிய 19ஆவது திருத்தத்தின்படி, பிரதமரின் ஆலோசனைப்படியே ஜனாதிபதி அமைச்சர்களை நீக்க முடியும்.
தாம் நீக்கப்பட்டதை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என விமல் கூறுகிறார். அதாவது, அவரது கருத்துப்படி 19 ஆவது திருத்தம் தற்போது இருந்தால், சிலவேளை இவர்கள் நீக்கப்பட்டு இருக்க மாட்டார்கள் என்றும் வாதிடலாம். இது ‘பிடி கொடுத்து, அடி வாங்கிய கதை’யாகும்.
இந்தச் சம்பவம், தாமும் ஓரங்கமாக இருக்கும் நாட்டின் அரசியல் கலாசாரத்தை, விமல் போன்றோர் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. அதேவேளை, தற்போது நாட்டில் இருப்பது குடும்ப ஆட்சி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை; அல்லது, மறந்து செயற்பட்டுள்ளார்கள் என்றும் அது காட்டுகிறது. அல்லது, அவர்கள் தம்மைப் பற்றி பெரிதாக மதிப்பீடு செய்து கொண்டு இருந்திருக்க வேண்டும்.
புதிதாக அரசியலமைப்பொன்று நிறைவேற்றப்படும் என்றும் அதன் மூலம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்குத் தேர்தல்களில் போட்டியிடும் உரிமை வழங்கப்படாது என்றும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மூலம், தற்காலிகமாக மட்டும் அது வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறியதாக அத்திருத்தம் நிறைவேற்றப்படும் போது, விமல் உள்ளிட்ட ஆளும் கூட்டணியின் சிறு கட்சித் தலைவர்கள் கூறினர்.
ஜனாதிபதி அவ்வாறு கூறிய போது, உணர்ச்சிவசப்பட்டதாகவும் எனவே தாம் அதனை ஏற்றுக் கொண்டதாகவும் அவர்கள் அப்போது கூறினர். யாரோ உணர்ச்சிவசப்பட்டதற்காக நாட்டின் அடிப்படை சட்டம் என்ற விடயத்தில் விட்டுக்கொடுக்க முடியுமா? அதுவும் தாமே நாட்டில் சிறந்த தேசபக்தர்கள் என்று கூறிக் கொள்வோர், வெளிநாட்டவர்கள் நாட்டை ஆள இடமளிக்கலாமா? இது என்ன தேசபக்தி?
விமலும் கம்மன்பிலவும் அரசாங்கத்திலிருந்து பிரிந்தே சென்றுவிட்டால், அவர்களுக்கு இனி பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் வாக்களிக்கப் போவதில்லை. அதேவேளை, எதிர்க்கட்சியினர் இவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பவும் முடியாது. இவர்களுக்குத் தனியாகப் போட்டியிட்டு, பெரிதாக எதுவும் சாதிக்கவும் முடியாது. எனவே அவர்கள், தமது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக, மேன்மேலும் இனவாதத்தின் துணையை நாடும் சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன.
5 minute ago
12 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
20 minute ago