2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘அடிமைப்படுவது அல்ல தேசிய ஐக்கியம்’

Gavitha   / 2017 ஜனவரி 30 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

“பெரும்பான்மை இனத்துக்கும் பெரும்பான்மை மதத்துக்கும் பெரும்பான்மை மொழிக்கும் அடிமைப்பட்டு சேவகம் செய்வதுதான் தேசிய ஐக்கியம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் தேசிய ஐக்கியம் என்ற போர்வையில், சிறுபான்மையினரின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை” என்று, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

அம்பாறை, சாய்ந்தமருது லீமெரிடியன் வரேவேற்பு மண்டபத்தில் நேற்று (29) நடைபெற்ற தேசிய சகவாழ்வுக்கான இளைஞர் தலைமைத்துவ மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் மனோ கணேசன் தனதுரையில் மேலும் கூறியதாவது: 

 “சிறுபான்மையினராகிய நாம், பெரும்பான்மையினருக்குக் கைகட்டி நிற்பதானது, சரணடைவது போன்றதாகும். ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையில் ஒருபோதும் சமத்துவம் வராது. தேசிய ஐக்கியம் என்ற பெயரில் எங்களது மொழியை, மதத்தை, இனத்தை, கலாசாரத்தை, பண்பாட்டு விழுமியங்களை விலைபேசி விற்க முடியாது. 

“கட்சிகளுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இனம், மாதம், மொழி என்று வரும்போது நாங்கள் ஒன்றுபட்டே ஆக வேண்டும். சிறுபான்மையினர் ஒன்று சேர்வது என்பது, சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. பெரும்பான்மை சமூகத்தில் நேர்மையானவர்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களுக்குள் இருக்கின்ற ஒரு சிறுகுழுவினர்தான், சிங்கள மக்களைத் தவறாக வழிநடத்த முற்படுகின்றனர்.  

“இலங்கையில் மூன்று மொழிகளும் நான்கு மதங்களும் பத்தொன்பது இனக்குழுக்களும் இருக்கின்றன. இவைகள் எல்லாம் சேர்ந்ததே இலங்கை எனும் எமது நாடு. இந்த நாட்டில் ஒரு மொழி, ஒரு மதம், ஓர் இனம் என்ற கதை செல்லுபடியாகாது. இந்த கோட்பாட்டுக்கு மத்தியிலேயே தேசிய ஐக்கியம், சகவாழ்வு, நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இப்போது ஆட்சி செய்யும் நல்லாட்சி அரசாங்கம் நீடிக்க வேண்டும். இந்த ஆட்சியின் ஊடாகவே, உண்மையான சகவாழ்வை உருவாக்க முடியும். 

“மக்களின் எதிர்பார்ப்புகளை கஷ்டம் என்று பாராது நிறைவேற்றிக் கொடுப்பவனே, உண்மையான அரசியல்வாதி. நாங்கள் நாடாளுமன்றம் சென்றிருப்பதும் அமைச்சரவை அமைச்சராக இருப்பதும், தேங்காய் துருவுவதற்கு அல்ல; மக்களுக்கு பணியாற்றுவதற்காகவே. 

“தொலைபேசி அழைப்பு வந்தால் அதற்குப் பதிலளிக்க மாட்டேன்; சமூக ஊடகங்களிலேயே மக்களுடன் கலந்துரையாட மாட்டேன்; மக்களைச் சந்திக்க மாட்டேன்; அவர்களது கோரிக்கைகளைச் செவிமடுக்க மாட்டேன் என்று நினைப்பவர்கள், நாடாளுமன்றத்தில் இருக்க இலாயக்கற்றவர்கள். எப்போது நான் செய்யும் மக்கள் பணி, எனக்கு தொல்லையாக தெரிகிறதோ அன்றே தான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வேன். 

“எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு, ஏனைய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போன்று பாலம் கட்டுவதற்கோ அல்லது கட்டடங்கள் அமைப்பதற்கோ உரியதல்ல. அது மனித மனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான பணியை செய்து வருகின்ற அமைச்சாகும். இன்றைய காலகட்டத்துக்கு, இதுவே மிகப்பிரதானமான தேவையாக இருக்கிறது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .