2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘ஐ.தே.கவின் அழுக்குகளைக் கழுவுகிறது ஸ்ரீ.ல.சு.க’

Niroshini   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் அழுக்குகளைக் கழுவும் ஒன்றாக தற்போது மாறிவிட்டது” என, தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.  

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணிக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“இந்த அரசாங்கமானது, இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவேண்டும் என்று மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இதன் பணிகளை மேற்கொள்ளும் ஆறு உபகுழுக்களின் அறிக்கையும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை.   

“அவ்வாறான சர்ச்சைக்குரிய சரத்துகள் உள்ளடக்கப்படவில்லை என்று ஒரு தரப்பும், சர்வஜன வாக்கெடுப்பு என்பது அரசாங்கத்துக்கு சவாலான ஒன்றாகும், எனினும், சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பியின் ஆதரவுடன் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்று இன்னொரு தரப்பும், தற்போது கருத்துகளைக் கூறிக்கொண்டிருக்கின்றன.  

“சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதாயின், சமஷ்டித் தீர்வு குறித்த சரத்துகள், புதிய அரசியலமைப்புக்குள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியாயின் இந்த அரசாங்கம், சமஷ்டித் தீர்வினை வழங்கி, நாட்டைப் பிரிக்கப் போகின்றதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.   

“தேர்தல் காலத்தின்போது புதிய அரசியலமைப்பு ஒன்று அமைக்கப்படுமானால், ஒருபோதும் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல மாட்டோம் என்று ஜனாதிபதி சிறிசேன தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது இந்த அரசாங்கமானது, அந்த வாக்குறுதியை மீறி, நாட்டு மக்களை முட்டாளாக்கியுள்ளது.  

“அப்போது இதே நிலைப்பாட்டிலிருந்த சுதந்திரக் கட்சியினரும் ஜாதிக ஹெல உறுமயக் கட்சியினரும் என, எவரும் தற்போது இதற்கு எதிர்ப்பையும் வெளியிடாமல் இருப்பதும், அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சோரம்போய்விட்டார்கள் என்பதையே வெளிக்காட்டுகின்றது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X