2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘தண்ணீர் சிக்கனம் வேண்டும்’

Princiya Dixci   / 2017 ஜனவரி 19 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான குடிநீரை, தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.அல்ஹுதீன் அன்சார், தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ நிலையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“களுத்துறை பிரதேசத்திலேயே குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக களுகங்கையின நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் கடல் நீரானது கங்கையில் கலந்துள்ளது. அதற்கு மாற்று வழிகள் ஒன்றும் எம்மிடம் இல்லை. எனினும், மக்களுக்கு குடிநீர் மாத்திரமல்ல ஏனைய தேவைகளுக்கான நீரினையும் வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். பண்டாவரளை, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் பாதிப்புகள் இன்னமும் அவ்வளவு தீவிரமடையவில்லை.

மாத்தறை மாவட்டத்தில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குளங்களின் நீர் மட்டம் குறைவடைந்திருந்தாலும், ஏனைய பிரதேசங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை. மார்ச் மாத இறுதிவரை மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதுவரை தொடர்ச்சியாக குடிநீரைத் தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு மாற்று யோசனையாக நாடு முழுவதிலும் உள்ள 1,000 குழாய் கிணறுகளை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். 150 கிணறுகள் இதுவரை சுத்தம் செய்யப்பட்டுவிட்டன. அத்தோடு, மிகவும் ஆழமான குழாய் கிணறுகள் 400 அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நாட்டில் 60 சதவீதம் குளத்து நீரும், 40 சதவீதம் நிலத்துக்கு அடியில் உள்ள நீரும் பயன்படுத்தப்படுகின்றன. வரட்சியினால் நிலத்துக்கு மேல் உள்ள நீரின் அளவு குறைந்திருந்தாலும் நிலத்துக்கு அடியிலுள்ள நீரின் அளவு குறையவில்லை. ஆகவே, குடிநீரைத் தடையின்றி வழங்க முடியும் என நான் நம்புகின்றேன்.

தனியாருக்குச் சொந்தமான 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழாய் கிணறுகளை அபிவிருத்தி செய்யவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் குழாய் நீரைப் பயன்படுத்துமாறு நாம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .