2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘பிழையான பாதைக்குப் பயணித்து சரியான வழியில் திரும்பியுள்ளார்’

Kogilavani   / 2017 ஜனவரி 18 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

“நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், அன்று தெரிவு செய்த பாதை பிழையானது என்று நாம் ஏற்கெனவே கூறிவிட்டோம். அந்தத் தவறான பாதையில் பயணித்த அவர், பாதை பிழையானது என்பதை தெரிந்துகொண்டு, சரியான பாதைக்கு திரும்பியுள்ளார்” என, பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தேரர், அரசாங்கத்திலிருந்து வெளியேறி, அறிவிப்பொன்றை விடுத்திருந்தால், இன்னுமின்னும் நாங்கள் சந்தோஷம் அடைந்திருப்போம் என்றும் அவர் கூறினார்.   

பிவிதுறு ஹெல உறுமய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் சக்திமிகுந்த வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி, அவரை வெற்றியடையச் செய்து இந்நாட்டின் பொறுப்பை அவருக்கு கொடுப்போம்” என்றார்.  

மேலும், இவ்வருடமும் இந்த தேசிய அரசாங்கம் ஆட்சியில் இருக்குமாயின் நாட்டில் இருக்கும் சொற்ப வளங்களும் பறிபோய்விடும். இதற்காகவே, 2017ஆம் ஆண்டில் இந்த ஆட்சியை இரண்டாகப் பிளவுபடுத்துமாறு கோருகிறோம் எனவும் குறிப்பிட்டார். 

“இன்று, ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச ரீதியில் பிரபலமாகி விட்டனர். காரணம் நாட்டின் வளங்களில் பாதியை அழித்துவிட்டனர். 2017ஆம் ஆண்டில் இந்த ஆட்சியை ஏன் இரண்டாக பிளவுபடுத்துமாறு கோருகிறோம் என்றால், இந்த தேசிய அரசாங்கம் இந்த ஆண்டிலும் செயற்பட்டால், இந்நாட்டில் இருக்கின்ற சொற்ப வளங்களையும் வெளிநாடுகளுக்கு விற்றுவிடும் என்ற அச்சத்திலே ஆகும்.   

எனவே, இவர்கள் இருவரையும் விரட்டியடித்துவிட்டு, பொறுப்புமிக்க ஜனாதிபதி ஒருவரையும் பிரதமர் ஒருவரையும் தேர்ந்தெடுக்க வேண்டியது பொதுமக்களின் கடமையாகும்.  

வாக்குகளை உடைப்பதற்காகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கப்போகிறது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இது தவறான கருத்தாகும். அப்படி என்றால், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளராக களமிறங்கப்போவது யார்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, அடுத்த ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூறுகிறது. தகுதியான ​ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இல்லாவிடின் பிரதமரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என ஜனாதிபதி கூறியுள்ளார்.   
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க ஆகியோர் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கலாம். ஆனால், அவர்களது கள்ளத்தனமான செயற்பாட்டை அறிந்து புரிந்துகொண்ட மக்கள் எவரும் இவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.   

எனவே, இவர்கள் இருவரையும் தவிர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேவை. இந்த ஜனாதிபதி வேட்பாளரை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் மட்டுமே களமிறக்க முடியும். தகுதியான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் நிச்சயமாக களமிறக்கப்படுவார். அவரது வெற்றிக்காக நாம் பாடுபட்டு, இந்நாட்டின் பொறுப்பை அவரது கைகளில் கொடுப்போம்.   

2020ஆம் ஆண்டில் ஜனாபதி தேர்தல் குறித்து அறிவிக்க முடியாது. மாறாக 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலேயே தேர்தல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்க வேண்டும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .