2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘மஹிந்தவின் நாடகமே மின்கதிரை’

Gavitha   / 2017 ஜனவரி 30 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நதீக தயா பண்டார 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, போர்க்குற்றங்கள் தொடர்பில் மின்கதிரைக்குச் செல்லும் ஆபத்து இருந்ததில்லை எனத் தெரிவித்துள்ள பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவ்வாறு இருந்ததாக அவரே காட்டிக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார். 

மல்வத்தை, அஸ்கிரி மகாநாயக்கர்களை நேற்றுச் சந்தித்த பின்னர், மல்வத்தை மகா விகாரையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

“முன்னாள் ஜனாதிபதி மீது, மின்சாரக் கதிரை ஆபத்து இருந்ததில்லை. அவ்வாறான ஆபத்து இருப்பதாக அவர் எப்போதும் கதைத்து, மக்களிடத்தில் அந்தப் பயத்தை அவர் விதைத்தார். அந்தப் போரைக் கட்டளையிட்டு நடத்தியது நாம் தான். அவ்வாறான ஆபத்து இருந்திருந்தால், நாம் தான் மின்சாரக் கதிரைக்கு அனுப்பப்படக்கூடியவர்கள். 

“முன்னாள் ஜனாதிபதி, மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தால், மின்சாரக் கதிரைக்குக் கூட அவமானகரமானதாக அது அமைந்திருக்கும்” என்று, அமைச்சர் குறிப்பிட்டார். 

ஆனால், மின்சாரக் கதிரை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மாத்திரமன்றி, தற்போதைய அரசாங்க உறுப்பினர்களும், தொடர்ச்சியாகக் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட, கடந்தாண்டில் பல தடவைகள், முன்னாள் ஜனாதிபதியை மின்சாரக் கதிரை ஆபத்திலிருந்து மீட்டதாகத் தெரிவித்திருந்தார். எனவே, அமைச்சர் பொன்சேகாவின் கருத்து, அரசாங்கத் தரப்பின் கருத்துகளுக்கு முரணானதாக அமைந்துள்ளது. 

பேரணிகளுக்கு 30,000 அல்லது 50,000 பேரைக் கூட முன்னாள் ஜனாதிபதி கொண்டு வந்தாலும், 6.2 மில்லியன் பேரின் ஆணையைக் கொண்ட அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு, அவருக்கு 6.2 மில்லியன் மக்களின் ஆதரவை அவர் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அமைச்சர் குறிப்பிட்டார். 

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், யாராவது போர்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் பதவி, தராதரம் பார்க்காது, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார். 

பயங்கரவாதிகளுக்குத் தகவல்களைப் பரிமாறினார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இராணுவ மேயர் ஒருவர், மரண தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகியிருப்பதையும், அவர் சுட்டிக்காட்டினார். 

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரின் காலங்களுக்குப் பின்னரேயே, இராணுவத்தினர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சர் பொன்சேகா, முன்னாள் ஆட்சியாளர்களின் கைக்கூலிகளை அவர்கள் பாதுகாத்த சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில், குற்றங்கள் தொடர்பில் கணக்கெடுக்காமல் விடப்பட்டதில்லை எனவும் தெரிவித்தார். 

இராணுவத்தில் ஒழுக்கவிதிகளைப் பின்பற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தால், இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்காது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

அமைச்சரின் இந்தக் கருத்துகள், இராணுவத்தில் ஒழுக்க மீறல்கள் இடம்பெற்ற என்பதை ஏற்றுக் கொள்வதாகவும், “ஒழுக்கவிதிகளைப் பின்பற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தால்” குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது எனத் தெரிவிக்கின்றமை, தற்போது காணப்படும் போர்க்குற்றச்சாட்டுகள், அரசாங்கம் சொல்வது போன்று, அடிப்படையற்றன அன்று என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .