2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

145 பஸ்ஸில் காதை கொடுக்கச் செய்த ‘காக்கா’ சம்பாஷனை

Editorial   / 2022 ஜூன் 10 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முன்பிருந்தே, அதாவது கொரோனா காலத்திலேயே சில வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. தற்போதும் மிகவும் குறைவு.

இன்று (10) பெரும்பாலான வழித்தடங்களில் பஸ்கள் ஓடவே இல்லை. ஓரிரு பஸ்களில் சொற்ப பயணிகள் பயணிப்பதை அவதானிக்க முடிந்தது. இ.போ.ச பஸ்கள் பல அங்குமிங்கும் ஓடித்திரிந்தன.

சில பஸ்களில் ஏறியவுடனும் ஒவ்வொரு பஸ் தரிப்பிடங்களிலும், “பணப்பை கவனம், போன் கவனம்” என்றெல்லாம் பயணிகளுக்கு நடத்துனர் விழிப்புணர்வு ஊட்டுவார்.

பெரும்பாலும் 145 மற்றும் 155 வழித்தட பஸ்களில் சில பஸ்களின் சாரதிகள் அவ்வப்போது சொல்லிக்​கொண்டே இருப்பர். சனநெரிசல் மிக்க நேரங்களில் அவரால் வழங்கப்படும் முக்கியமான ஓர் அறிவுரையாகும். 155 வழித்தட பஸ்ஸை காணவே கிடைப்பதில்லை.

எனினும், இன்றையதினம் (10) காலைவேளையில் பயணித்த 145 வழித்தட பஸ்ஸொன்றில், சாரதிக்கும், இரண்டு பயணிகளுக்கும் இடையில் கடுமையான, நிகழ்காலத்துக்கு பொருத்தமான சம்பாஷனை இடம்பெற்றது. அவ்வப்போது கடும் வாக்குவாதமாகவும் மாறியது.

அந்த சம்பாஷனை சற்று இளமையான பெண் பயணியொருவ​ரே ஆரம்பித்துவைத்தார்.

ஆனால், இடையிடையே இறங்கிய பயணிக்கள் சாரதியை தட்டிக்கொடுத்ததும், சாரதியும் இறுதிவரையிலும் தன்னுடைய அனுபவத்தை சிங்களம், தமிழ் இரண்டுமொழிகளிலும் கூறிக்கொண்டு வந்ததையும் கேட்கமுடிந்தது.

மட்டக்குளியிலிருந்து கங்கா​ராமையை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, முகத்துவாரம் (மோதரை) சென்.ஜேம்ஸ் தரிப்பிடத்தை காலை 9 மணியளவில் வந்தடைந்தது. அவ்விடத்தில் இரண்டொரு பயணிகள் ஏறிக்கொண்டனர். சில நிமிடங்கள் தரித்துநின்ற பஸ், புறப்பட்டு செல்லும் வழியில் ஆங்காங்கே இரண்டொருவர் ஏறிக்கொண்டனர்.

இப்பகாங்வெல சந்தியில் வந்து தரித்து நின்ற பஸ்ஸில் பயணிகள் ஏறிக்கொண்ட போதிலும், பஸ் முன்னகரவே இல்லை. மட்டக்குளியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸூம் எதிரே இருக்கும் தரிப்பிடத்தில் அந்நேரத்தில் வந்துநின்றது.

இவ்விரு பஸ்களின் சாரதிகளும், சாரதி யன்னலுக்கு வெளியே போட்டுக்கொண்டு சில நிமிடங்கள் பேசி ​கொண்டிருந்தனர்.  “மச்சான் நான் பல தடவை போன் எடுத்தேன், நீ எடுக்கவே இல்லையென” கங்காராமவை ​நோக்கி பயணிக்க​வேண்டிய பஸ்ஸின் சாரதி கூறினார். அது மட்டக்குளியை நோக்கி செல்லவேண்டிய அந்த பஸ்ஸின் சாரதிக்கு விளங்கவில்லை.

திடீரென இயந்திரத்தை நிறுத்திய கங்காராமைவை நோக்கிச் செல்லவேண்டிய சாரதி, மீண்டும் அதனை கூறிவிட்டு, “சரி,சரி, போ அந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் இருக்கிறது என்றார். அதன்பின்னரும் இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர்.

சற்றும் கோபமடைந்த பெண் பயணியொருவர்:- நாங்கள் போவதில்லையா?, கைவாறு போதும், போங்கள், போங்கள். முன்வைவிட கூடுதலாக சல்லி கொடுக்கின்றோம் என்றார்.

சாரதி:- போவோம், போவோம், இப்பதானே ஒரு பஸ் முன்னுக்கு ​போனது, என்ன அவசரம்.

பெண் பயணி:- காலத்தை வீணடிக்கவேண்​டாம்.

பஸ்ஸின் முன் கதவின் படிகளில் நின்றுகொண்டிருந்த வயதான ஆணும் இந்த சம்பாஷானையில் இணைந்துகொண்டு, நாங்களும் வேலைக்கு போகவேண்டும், போங்கள், போங்கள் என்றார்.

சாரதி:- எல்லாருக்கும் பிரச்சினை இருக்கிறது. ஒருதடவைக்கு சொற்ப பணம்தான் கிடைக்கிறது, அங்கிருந்து திரும்பும் ​போது வெறுமையாகவே திரும்ப​வேண்டும். எங்களில் மூவருக்கு சம்பளம் கொடுக்கவேண்டும். உரிமையாளருக்கும் பணம் தேவை என்றார்.

பெண் பயணி:- காஸை கூட்டும் போது, நீங்களும் கூட்டிக்கொள்கின்றீர்கள் தானே, ஏன்? நின்றுகொண்டிருக்கின்றீர்கள் போங்கள், போங்கள் என்றார்.

சாரதி: ஆமாம், டீ​சல் அடிப்ப​தற்காக நான்கு ஐந்து நாட்கள், வரிசையில் நின்றோம். அப்போது யாரு எங்களுக்கு சம்பளம் கொடுத்தார்கள். 20 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் அடித்தால், 5 ஆயிரம் ரூபாய்தான் இலாபமாக கிடைக்கிறது. அதிலும் சம்பளம் கொடுக்கவேண்டும். கொஞ்சம் யோசித்து பாருங்கள்

ஆண் பயணி:- எல்லோரும் ஒன்றுமையாக இருந்தால்தான், இவ்வாறான பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். எனக்கூறும் போதே, அவருடைய அலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. ஹலோ, நான் ஹெட்டியாவத்தையில் நிற்கின்றேன் என்றார். (ஆனால், பஸ்ஸோ இப்பகாங்வெல சந்தியில் இருந்து அப்போதுதான், மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது)

இதற்கிடையே, பஸ்ஸில் நடு ஆசனங்களில் அமர்ந்திருந்த  பயணிகளில் சிலர், போங்கள், போங்கள் என்று சப்தமிட்டனர்.

ஆண் பயணி: எல்லோரும் ஓர் அணியில் திரளவேண்டும்.

 சாரதி: ஆமாம், ஆமாம், உங்கள் ஒன்றுமை எனக்குத் தெரியும், காக்கா, காக்கா என்றீர்கள் இப்போது என்ன நடக்கிறது. நானும் 1989களில் சிறைக்குச் சென்றவன், எங்களுடைய நண்பர்களில் பலரை கொன்றுவிட்டனர். என்னுடைய விரல்களில் நகங்கள் பிடுங்கப்பட்டுள்ளன எனக்கூறிக்கொண்டே வந்தார்.

பஸ்ஸில் மயான அமைதி நிலவியதால், சாரதியின் ஆதங்கம், அப்படியே காதுகளுக்குச் சென்று பதிவாகிவிட்டன.

பஸ், ஹெட்டியாவத்தை வந்தடைந்ததும் கதவுக்கு அருகிலிருந்த ஆண் பயணி இறங்கிச் சென்றுவிட்டார். இன்னும் சிலரும் இறங்கிக்கொண்டனர். அவ்விடத்திலிருந்து பலரும் ஏறிக்கொண்டனர்.

கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசுவரர் கோயில், அதற்கு அருகிலிருக்கும் ஆலயம் மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருதலம் ஆகியவற்றை பஸ் கடந்தபோது, தங்களுடைய மதங்களை நினைத்து பலரும் வழிபட்டுக்கொண்டனர்.

அதன்பின்னர், கொச்சிக்கடையிலும் பல நிமிடங்கள் பஸ் தரித்துநின்றது. ஏற்கெனவே சம்பாஷானை ஆரம்பித்து, சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பயணி, “ இப்போது இங்கு யாரும் ஏறவில்லைதானே, போகலாமே” என்றார்.

சற்று கடுப்பான சாரதி, உங்களுக்கு நேரகாலத்துடன் போகவேண்டுமாயின், முன்னால் சென்ற பஸ்ஸில் ஏறியிருக்கலாம். அதற்காக, நீங்கள் நேரகாலத்துடன் வரவேண்டும். எங்களுக்கு செல்வதற்கு என நேரம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்துக்கே நாங்கள் செல்வோமென கூறிவிட்டார்.

அதற்கிடையே பின்னால் வந்துகொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸொன்று, ஹோன் அடித்தது.

கியரை மாற்றிக்கொண்டு பஸ்ஸை வேகமாக எடுத்த தனியார் பஸ் சாரதி, பழைய மீன்கடை மற்றும் அதற்கிடை​யேயான பஸ் தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கிக்கொண்டார். பழைய மீன்கடைக்கு இடையில் அந்தப் பெண் பயணி இறங்கிக்கொண்டார். எந்த தரிப்பிடத்தில் இறங்கினார் என சரியாக அவதானிக்கவில்லை.  

பின்னர், முதலாம் குறுக்குத் தெருவுக்குச் செல்லவேண்டிய இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. பின் கதவில் இறங்கவேண்டிய பயணிகளில் சிலர், முன்கதவுக்கு அருகில் வந்து, சாரதியை தட்டிக்கொடுத்து, அப்படிதான், அதனை கணக்கில் எடுக்கவேண்டாமென கூறி, இறக்கிசென்றுவிட்டனர்.

எனினும், மற்றுமொருவரிடம் உரையாடிக்கொண்டு வந்த சாரதி, பார்த்தீர்கள் தானே, எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என கத்தினார். இப்போது இவர்கள் என்னமோ சொல்லிக்கொண்டு செல்கின்றனர்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதங்கள் இன்றி ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, எல்லாவற்றையும் வென்றெடுக்க முடியும். இவர்களை விட போராட்டம் செய்தவர்கள் நாங்கள், காக்கா, காக்கா என் கத்தினார்கள் இப்போது என்னநடந்தது என சாரதி மனம் நொந்துகொண்டார்.

பாருங்கள், அதனால்தான் 1948 ஆம் ஆண்டே வௌ்ளைக்காரன் விட்டுச்சென்றான். அவன்களுக்கு தெரியும் என சாரதி கூறிக்கொண்டே வர, பஸ் கங்காராமை​யை வந்தடைந்துவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X