2026 மே 20, புதன்கிழமை

51 லட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசிகளுடன் சீன பிரஜைகள் கைது

Freelancer   / 2026 மே 20 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சைபர் குற்றங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும், 51 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசிகள் மற்றும் அவற்றின் மின்கலங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற மூன்று சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், எதையும் பிரகடனப்படுத்த வேண்டியதில்லை என்ற 'பசுமை வழி'  ஊடாக இவற்றை வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே, நேற்று இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய சீன நாட்டுப் பெண் ஒருவரும், 35 வயது மதிக்கத்தக்க இரண்டு சீன நாட்டு ஆண்களும் அடங்குவர்.

இவர்கள் நேற்று  இரவு 06.43 மணிக்கு சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து 'சைனா ஈஸ்டர்ன்' விமான சேவைக்குச் சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, இந்த மூவரில் முதலாவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் 'பசுமை வழி'  ஊடாக நுழைய முயன்ற சீன நாட்டு ஆண் பயணி, விமான நிலைய தீர்வையற்ற வர்த்தக வளாகத்தில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்த கருப்பு நிற "டியூலிப் ரக பொலித்தீன் பை மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனைச் சோதனையிட்டபோது, ரொபிகள் மற்றும் சொக்லேட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசிகளின் முதற்கட்டத் தொகுதி கண்டெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது உடலைச் சோதனையிட்டபோது, அவர் அணிந்திருந்த ஆடைக்கு அடியில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் ஒன்றிற்குள்ளும், அவருக்குப் பின்னால் வந்த சீன நாட்டுப் பெண் அணிந்திருந்த காலணியின் காலுறைகளுக்குள்ளும், மற்றைய சீனப் பயணியின் பயணப் பையினுள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 87 கைத்தொலைபேசிகளும், அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 140 மின்கலங்களும்  கண்டெடுக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த மூவரையும் கைது செய்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X