2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

MCC ஒப்பந்தம் இடைநிறுத்தம்

Editorial   / 2020 பெப்ரவரி 28 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் மி​ல்லேனியம் ஷெலன்ஜர் கோப்பரேஷன் நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவிருந்த ஒப்பந்தத்தில், இனி கையொப்பமிடப் போவதில்லை என்று, அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நேற்று (27) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைப் பிரகாரமே, இந்தத் தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு வருத்துத் தெரிவித்த அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன,  குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக, மீளப் பெறப்படாத வகையில், 480 மில்லியன் அ​மெரிக்க டொலர்கள் (85 பில்லியன் ரூபாய்) நிதி உதவி கிடைக்கப்பெற இருந்ததாகவும் இது, 447.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியாகவும் 32.5 மில்லியன் டொலர்கள் சேவையாகவும் வழங்கப்படவிருந்தன.

“இந்த நிதியுதவியானது, பிரதான இரு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே வழங்கப்படவிருந்தன என்றும் அவற்றில் ஒன்று போக்குவரத்து வேலைத்திட்டமென்றும் இது, மத்திய சுற்றுவட்ட வலையமைப்பாக (Central Ring Road Network), உள்ளகப் பிரதேச வீதிகளை நவீனமயமாக்கல், போக்குவரத்து நெரிசலை முகாமைத்துவம் செய்தல், பொதுப் போக்குவரத்து பஸ் சேவையை நவீனமயமாக்கல், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, முகாமைத்துவ அலுவலகமொன்றை நிறுவுதல் போன்றன மேற்கொள்ளப்படவிருந்தன.

“இரண்டாவது வேலைத்திட்டமாக, காணி விவகாரம் அமைந்துள்ளதோடு, இதன் கீழ், தெரிவு செய்யப்படும் 12 மாவட்டங்களில், அரச மற்றும் தனியாருக்குச் சொந்தமான காணிகளை அளவிட்டு, அக்காணிகளுக்கு உரிய உறுதிப் பத்திரங்கள் இல்லாவிடின், அவற்றுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்குதல், அந்த உறுதிப் பத்திரங்களை, டிஜிட்டல் முறைமைக்குள் கொண்டுவருதலே, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

“இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிதியுத​வியைப் பெற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. பொருளாதாரச் சுதந்திரம், நியாயமான நிர்வாகம், பொதுமக்களுக்கான முதலீடுகள் என்பனவையே அவையாகும். எவ்வாறாயினும், இது பற்றி ஆராய்ந்த குழு, தனது இடைக்கால அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதால், இலங்கையின் இறையாண்மைக்குப் பிரச்சினைகள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என்று, அரசாங்கம் முடிவெடுத்துள்ளது” என்று, அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .