2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘ICUஇலிருந்து வெளியேறியது பொருளாதாரம்’

Gavitha   / 2017 ஜனவரி 29 , பி.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா, அதுல பண்டார

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நாட்டின் பொருளாதாரத்தை அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) கொண்டு சேர்த்ததாகக் குற்றஞ்சாட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து, அதை அங்கிருந்து வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.  

நுகேகொடையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில் கருத்துத் தெரிவித்திருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, அரசியலிலிருந்து தான் ஓய்வுபெற்றிருந்ததாகவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, தன்னை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.  

ஐக்கிய தேசியக் கட்சியால் அநுராதபுரத்தில் நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில், அதற்குப் பதிலளிக்கும்வகையில், தனது கருத்துகளை, பிரதமர் ரணில் வெளிப்படுத்தினார்.  

“தனது ஓய்விலிருந்து, ஜனாதிபதி சிறிசேன தான் தன்னை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவந்ததாக, முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்ரீ.ல.சு.க பற்றிக் கதைப்பதற்கு நான் விரும்பவில்லை. ஆனால், மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, தனது அரசியலமைப்பில், ஜனாதிபதிகளின் பதவிக் காலத்தை இரண்டு தடவைகள் என வரையறுத்திருந்தார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  

“அதன்படி அவர் (ஜே.ஆர்), இரண்டு தடவைகள் பதவி வகித்த பின்னர் ஓய்வுபெற்றார். ஜனாதிபதி விஜேதுங்க, ஒரு தடவை பதவி வகித்த பின்னரும் ஜனாதிபதி சந்திரிகா, இரண்டு தடவைகள் பதவி வகித்த பின்னரும் ஓய்வுபெற்றனர்.

ஆனால் ஜனாதிபதி ராஜபக்‌ஷ, அரசியலமைப்பை மாற்றியமைத்து, மூன்றாவது தடவையாகவும் செல்ல முடிவுசெய்தார். மூன்றாவது தடவையாகப் போட்டியிட அவர் முடிவெடுத்திருக்காவிடில், மரியாதையுடன் அவர் தோல்வியடையாமல் ஓய்வுபெற்றிருக்கலாம்” என்று, பிரதமர் ரணில் குறிப்பிட்டார்.  

இதன் பின்னர் பிரதமர், பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தபோது, தப்பியோடியதாகவும், பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

“உண்மையில், வீழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்துக்குப் பயந்து, ராஜபக்‌ஷ தப்பியோடினார். ஜனாதிபதி சிறிசேனவும் நானும், பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுத்தோம். அவரது காலத்தில் பொருளாதாரம், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி போல ஆகியது. ஜனாதிபதி சிறிசேனவும் நானும், இந்த நோயாளிக்குச் சிகிச்சையளித்து, தற்போது அந்த நோயாளி, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்” என்று, பிரதமர் ரணில் குறிப்பிட்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .