2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்கம் ’எண்ணெயில் குளிக்கின்றது’

R.Maheshwary   / 2021 மார்ச் 30 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

    இந்த அரசாங்கம், தேர்தல் காலத்தில் மக்களுக்கு நன்றாக எண்ணெய் பூசியதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம், இப்போது இந்த அரசாங்கம், நன்றாக எண்ணெயில் குளிக்கின்றது; இது தான் இன்றைய நிலை என்றும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, மசகு எண்ணெயின் விலை அதிகரிக்கப்படும் என 2, 3 தினங்களுக்கு முன்னர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்ததாகச் சுட்டிக்காட்டிய கபீர் ஹாசீம், எண்ணெய் விலையை அதிகரிக்க அரசாங்கத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை. கொரோனா தொற்று ஏற்பட்டவுடன், சில நிறுவனங்கள் மற்றும் சில பிரிவினருக்கு இலாபமும் நட்டமும் ஏற்பட்டது. இதனால், எரிபொருள் கூட்டுதாபனம் இலாபம் பெற்றதுடன் அரசாங்கத்துக்கும் இலாபம் கிடைத்தது. இறக்குமதி செய்யும் மசகு எண்ணெயில் 70 சதவீதம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட எரிபொருளையே இலங்கை இறக்குமதி செய்கின்றது.

2019 நவம்பரில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யபட்டதும், பெற்றோல் பெரல் 77.41 டொலராகக் காணப்பட்டதுடன் 1 லீற்றர் பெற்றோல், 138 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அத்துடன், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று, மசகு எண்ணெய் பெரல் ஒன்றின் விலை,  18 டொலராகக் குறைவடைந்ததுடன், பெற்றோர் ஒரு லீற்றரின் விலை 17.50 சதமாக இருந்தது. ஆனால்,  இலங்கையில் 138 ரூபாய்க்கே  பெற்றோலை விற்கின்றனர்.

இதன் மூலம், ஒவ்வொரு லீற்றருக்கும் அரசாங்கத்துக்கும் 120 ரூபாய் இலாபம் கிடைத்தது. இப்படி இருக்கும் போது, எந்த அடிப்படையில் எண்ணெய் விலையை அதிகரிக்க முற்படுகின்றனர்? எனக் கேள்வி எழுப்பினார்.

எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு, அரசாங்கத்துக்கு பொறுப்பொன்று உள்ளது. நாம் அரசாங்கத்தை ஒப்படைக்கும் போது, பெற்றோல் பெரல் ஒன்று, 74 டொலராக இருந்தது. இப்போது அதை விடக் குறைந்த விலைக்கு எடுக்கலாம். எனவே, என்ன காரணத்துக்காக  எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும்.

2019ஆம் ஆண்டு அரசாங்கத்தை ஒப்படைக்கும் போது, காணப்பட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைக்கும் இன்றைய விலைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது.  இதுவரை இந்த அரசாங்கம், ஒரு பொருளின் விலையையாவது குறைக்கவில்லை. இதன் இலாபங்கள் அனைத்தும்  ஒரு தரப்புக்கு மாத்திரமே செல்கின்றன என்றும் குற்றஞ்சாட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .