2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலிய ஜோடிக்கு அழைப்பாணை

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, போலி அற்றோனிப் பத்திரத்தைப் பயன்படுத்தி 110 மில்லியன் ரூபாய் மோசடி செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கின் சாட்சியாளர்களான அவுஸ்திரேலிய வர்த்தகர் பிரயன் சாதிக் மற்றும் அவரது மனைவி ஆகியோரை, எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதியன்று மன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (16) அழைப்பாணை பிறப்பித்தது.  

இந்த வழக்கின் 2,3ஆம் சாட்சியாளர்களான அவுஸ்திரேலிய ஜோடிகள் இருவரையும் மார்ச் 9ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சினூடாக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட போதும் அவர்களுக்கு அது கிடைக்கப்பெறவில்லை என, அரச சட்டத்தரணி, நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யதுடுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டத்து.  

இந்தக் கோரிக்கையைக் கவனத்தில் எடுத்த நீதிபதி, அவுஸ்திரேலிய வர்த்தகர் பிரயன் சாதிக் மற்றும் அவரது மனைவி ஆகியோரை, எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதியன்று மன்றில் ஆஜராகுமாறு, அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.  

அவர்கள் இருவரும் அவுஸ்திரேலியப் பிரஜைகள் என்பதால், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரும் மன்றில் ஆஜராக வேண்டும் என, அரச சட்டத்தரணி கோரினார். சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, நலிந்த இந்ததிஸ்ஸ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.  

1995ஆம் ஆண்டு போலி அற்றோனிப் பத்திரத்தைப் பயன்படுத்தி,110 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை மோசடி செய்த குற்றச்சாட்டு கம்மன்பில எம்.பிக்கு எதிராக, சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தது.  

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில், கடந்த வருடம் ஜூன் மாதம் 18ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட கம்மன்பில எம்.பி, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .