2026 மார்ச் 28, சனிக்கிழமை

இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வை தடுக்க கலால் வரி குறைப்பு

Freelancer   / 2026 மார்ச் 28 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கும் விதமாக அவற்றின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி 13  ரூபாவிலிருந்து 3 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 10 ரூபாவாக  இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் - ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயமும் எழுந்தது. இந்நிலையில், விலை உயர்வை தடுக்கும் விதமாக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி 13 ரூபாவிலிருந்து 3  ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

10 ரூபாவாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர், கலால் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவிக்கையில்,

 நாடு முழுவதும் எரிபொருள் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், விலை கட்டுபடியாகக் கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை. மத்திய அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தும் என்ற வதந்தியிலும் உண்மை இல்லை. எரிபொருள் விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது. இதுதொடர்பாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை. மக்கள் அச்சப்பட வேண்டாம்.

பெட்ரோல், டீசல், விமான எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்வதை உறுதி செய்ய எண்ணெய் வர்த்தக நிறுவனங்களுக்கு அரசு ஆதரவு அளித்து வருகிறது. உலகளாவிய நிலையற்ற தன்மை இருந்த போதிலும், சில்லறை விலைகளில் எந்த உயர்வும் ஏற்படாமல் தடுப்பதே இதன் நோக்கம்.

உள்நாட்டில் கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், விமான எரிபொருள் உள்ளிட்ட சில பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதி மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .