2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

இனக்கலவரத்தில் இந்துத் தமிழர்களுக்கே அதிக பாதிப்பு: உயர் நீதிமன்றம்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கை இனக்கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்துத் தமிழர்களே' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவர் இந்திய குடியுரிமை கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்த போதே இதனைத் தெரிவித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் அபிராமி,  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்

குறித்த மனுவில் ”எனது  பெற்றோர் இலங்கை குடிமக்கள். இனக்கலவரம் காரணமாக இந்தியாவுக்கு வருகை தந்தனர். நான் 1993ஆம் ஆண்டு  திருச்சியிலுள்ள  மருத்துவமனையில் பிறந்தேன். இந்தியாவில் 29 ஆண்டுகளாக வசிக்கிறேன். பாடசாலைப் படிப்பை இங்கு தான் முடித்தேன். எனக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது.

இதனையடுத்து இந்திய குடியுரிமை வழங்கக்கோரி திருச்சி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். அதை தமிழக அரசின் பொதுத்துறை, வெளிநாட்டினர் விவகார பிரிவு செயலருக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அம் மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியதாவது:” மனுதாரர் புலம்பெயர்ந்த பெற்றோரின் வழித்தோன்றல் என்றாலும், அவர் இந்தியாவில் பிறந்தவர். அவர் ஒருபோதும் இலங்கை குடிமகளாக இருந்ததில்லை. மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படாவிடில், அவர் நாடற்றவர் என்ற நிலைக்கு வழிவகுக்கும். அச்சூழ்நிலையை தவிர்க்க வேண்டும்.

இந்தியாவில் மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் குடியேறிய சிறுபான்மையினர் தற்போது இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்குள் இலங்கை வரவில்லை என்றாலும், அதே கொள்கை அவர்களுக்கும் சமமாகப்  பொருந்தும். இலங்கை இனக்கலவரத்தில் பெரிதும் இந்துத் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை நீதித்துறை கவனத்தில் கொள்கிறது. மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிப்பதில் எந்த தடையும் இருக்க முடியாது.

மனுதாரரின் விண்ணப்பத்தை மத்திய அரசின் இறுதிப் பரிசீலனைக்கு அனுப்ப மாநில அரசுத் தரப்பில் மறுத்திருக்கக்கூடாது. மனுதாரரின் கோரிக்கைக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது. மனுதாரரின் விண்ணப்பத்தை திருச்சி கலெக்டர் மாநில பொதுத்துறை செயலருக்கு அனுப்ப வேண்டும். அவர் மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அவர் 16 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X