R.Maheshwary / 2021 மார்ச் 31 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
இலங்கையின் சிறந்த முதலீட்டுத் திட்டமான கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படை நோக்கம், இலங்கையை ஆசியாவின் வர்த்தக மத்திய நிலையமாக மாற்றுவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதே அன்றி, இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அழித்துப் பணம் சம்பாதிப்பது அல்லவென, அரசாங்கம் நேற்று (30) அறிவித்தது.
இந்தத் துறைமுக நகரத்தை, கெசினோ மத்திய நிலையமாக மாற்றும் நோக்கம் கடந்த அரசாங்கத்திடமே காணப்பட்டதென்று, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பின்போது உரையாற்றிய அமைச்சரும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “ஆசியாவின் மையமாக இலங்கை இருப்பதால், ஆசியாவின் பொருளாதார மத்திய நிலையமாக முன்னேறியிருக்க வேண்டும். எனினும், அவ்வாறான வாய்ப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டமையால், சிங்கப்பூர் மற்றும் டுபாய் ஆகிய நாடுகள், மாற்று வணிக மத்திய நிலையங்களாக உருவாகின” என்றார்.
இலங்கையின் பிரதான முக்கிய வளமாக உள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது, 2010ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கமைய, இலங்கையில் விமானம், கடற்படை, வணிக, எரிசக்தி, அறிவு மையங்களுக்கான மத்திய நிலையமாக அங்கிகரிக்கப்பட்டது என்றும் இத்திட்டம் ஊடாக, உலகத்தின் பிரபல வங்கிகள், தமது வங்கி மற்றும் தொடர்பு மத்திய நிலையமாக இதனைப் பயன்படுத்தும் என்றும், இது இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்குத் தேவையான முக்கிய தீர்மானம்மிக்க அடிப்படை வசதிகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
மேலும், இத்திட்டத்துக்காக 2008ஆம் ஆண்டு மூலோபாய வணிக மேம்பாட்டுச் சட்டத்தின் கீழான சிறப்பு வரிவிலக்குகளை வழங்க உரிமையுள்ளதெனத் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் சிறந்த தொழில் நிபுணர்கள், வர்த்தகர்களைக் கொண்ட தனி ஆணைக்குழு சபையால் கொழும்புத் துறைமுக நகரம் நிர்வகிக்கப்பட உள்ளதாகவும் இதன்மூலம் இலங்கையின் இறையாண்மை, சுயாதீனத் தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .