2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கச்சத்தீவு வழக்கு : செப்.15 விசாரணை

Janu   / 2025 மார்ச் 25 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வெ்வாய்க்கிழமை (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

இந்தியா, இலங்கை இடையான 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி, கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அ.தி.மு.க) பொதுச்செயலாளர் ஜெ.ஜெயல்லிதாவும், அதேபோல ஏ.கே.செல்வராஜ் என்பவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் கடந்த 2009 ஜனவரி 5ம் திகதியன்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் வழக்கு விசாரணை விரைந்து நடைபெறாததால்,வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி கடந்த 2012 செப்டம்பர் 18ம் திகதி ஜெயலலிதா சார்பில் மீண்டும் ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த மனுவை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை பொறுத்தவரை ஜெயலலிதா 3வது முறையாக கடந்த 2011ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பதவியேற்றதும், சட்டப்பேரவையில் அறிவித்தபடி கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்த அனைத்து தகவல்களையும் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையும் இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அதேபோல, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் தொடர்கதையாகி வரும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதங்களும் மனுவோடு இணைக்கப்பட்டன.

இதனிடையே கடந்த 21/09/ 2013ல் கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தமிழக அரசின் வருவாய்த்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதனையடுத்து இந்த வழக்கு கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில், இந்த வழக்கு விசாரணைக்கு செவ்வாய்க்கிழ​மை (25) பட்டியலிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X