2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

‘கிழக்கில் கால்நடைகளுக்குத் தொற்று இல்லை’

Editorial   / 2019 மார்ச் 02 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமாா்

கால்நடைகளுக்குத் தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளமை காரணமாக விலங்கறுமனைகள் மற்றும்  இறைச்சிக்கடைகள் ஆகியவற்றை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடும் அதிகாரம் சுகாதார வைத்திய அதிகாரிக்கோ, பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கோ எந்தவித சட்டத்தின் கீழும் வழங்கப்படவில்லையென, கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர்  டாக்டர் எம். ஏ. எம். பாஸி தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் எந்தப் பிரதேசத்திலும் விலங்குகள் கொல்களத்தையோ அல்லது இறைச்சிக் கடைகளையோ மூடுவதற்கான கட்டளையைப் பிறப்பிக்கவேண்டிய அளவுக்கு  மாடுகளுக்கு எதுவித தொற்றுநோய்களும் ஏற்பட்டதாக இதுவரை பிரகடனப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கிழக்கு மாகாணத்தில், மாடுகளுக்குத் தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும்  அதன் காரணமாக மாடுகள் அதிகளவில் இறப்பதாகவும் அதன் காரணமாக விலங்கறுமனைகள் மற்றும்  இறைச்சிக்கடைகள்  ஆகியவற்றை மூடி விடுமாறு, கிழக்கு மாகாணத்தின், பல பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகள் உத்தரவுளை பிறப்பித்து வருவதாக, தமது திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கால்நடைகளுக்குத் தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளமை காரணமாக விலங்கறுமனைகள் மற்றும்  இறைச்சிக்கடைகள் ஆகியவற்றை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடும் அதிகாரம் சுகாதார வைத்திய அதிகாரிக்கோ, பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கோ எந்தவித சட்டத்தின் கீழும் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்த அவர், அவர்களால் வழங்கப்பட்டுள்ள விலங்கறுமனைகள் மற்றும்  இறைச்சிக்கடைகள் ஆகியவற்றை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடுவதற்கான உத்தரவானது சட்ட விரோதமானதும் தனது அதிகாரத்தை மீறும் மற்றும் பொது மக்களைத் தவறாக வழிநடாத்தும் செயலுமாகுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

கால்நடைகளுக்கு  ஏற்படும் தொற்று நோய்கள் காரணமாக,  விலங்குகள் கொல்களத்தையோ அல்லது இறைச்சிக் கடைகளையோ மூடவேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் 1992 ஆம் ஆண்டின் 59 ஆம்  இலக்க விலங்குநோய்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் ஆக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளின் பிரகாரம் கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்துக்கும் அவரால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப்பணிப்பாளருக்கும் மாத்திரமே உரித்தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 “1992ஆம் ஆண்டின் 59ஆம்  இலக்க விலங்குநோய்கள் சட்டத்தினதும் அதன் கீழ் ஆக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளினதும், 1956ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க மிருகவைத்தியர்கள் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் மாடுகளுக்கு தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசாங்க மிருகவைத்திய அதிகாரிகளுக்கு மாத்திரமே உரித்தாக்கப்பட்டுள்ளது” எனவும் குறிப்பிட்பட்டுள்ளது.

கால்நடைகளுக்குப் போதியளவு உணவின்மை மற்றும் உணவுப்பற்றாக்குறை காரணமாகவும் மேய்ச்சல் தரையின்மை காரணமாகவும் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாகவுமே சில பிரதேசங்களில் கால்நடைகள் இறந்துள்ளன. எனினும், கிழக்கு மாகாணத்தில் எந்தப் பிரதேசத்திலும் விலங்குகள் கொல்களத்தையோ அல்லது இறைச்சிக் கடைகளையோ மூடுவதற்கான கட்டளையைப் பிறப்பிக்கவேண்டிய அளவுக்கு  மாடுகளுக்கு எதுவித தொற்றுநோய்களும் ஏற்பட்டதாக இதுவரை பிரகடனப்படுத்தப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .