2025 ஜூலை 09, புதன்கிழமை

‘ஜனாதிபதிக்கு கலைப்பதைத் தவிர மாற்றுவழி இருக்கவில்லை’

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பா.நிரோஸ் 

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ​வகையிலான செயற்பாடுக​ளை நாடாளுமன்றில் அரங்கேற்றுவதற்கு ஐ.தே.கவினர் நன்கு திட்டமிட்டிருந்தனர் என்று தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இதனால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர, ஜனாதிபதிக்கு மாற்றுவழி எதுவும் இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 

​ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அக்கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க​ மேற்கண்டவாறு தெரிவித்தார். நடுநிலைமையாகச் செயற்பட்டிருக்க வேண்டிய முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் கட்சிசார் அரசியல் செயற்பாடுகளே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு பிரதான காரணமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் (12) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெளிவுப்படுத்தியிருந்தார் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.  

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தான் ஒரு சபாநாயகர் என்பதற்கு அப்பால், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரைப்போல செயற்பட்டதாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்று தெரிவித்த அவர், நாடாளுமன்றம் ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்து இருந்ததார். சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கு கரு ஜயசூரிய கையெழுத்திட்டு கடிதங்களையும் அனுப்பி வைத்திருந்தார் என்றார். 

இதேவேளை, சபாநாயகர் என்பவர் நாடாளுமன்ற அலுவல்களுக்குப் பொறுப்பானவர் என்று தெரிவித்த அவர், எனினும், சபாநாயகர் கரு ஜயசூரிய, நீதியரசரை போல செயற்பட்டிருந்தார் என்றும் அவர் கூறினார்.  

இராஜதந்திரிகளை சந்தித்த கருஜயசூரிய, இலங்கை அரசமைப்பின் ஆங்கில மொழி பதிப்பை மட்டுமே காண்பித்து தெளிவுப்படுத்தியிருந்தார். அதிலும், நாடாளுமன்ற அமர்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளாத நாட்களில் அக்கிராசனத்தில் சபாநாயகரே அமர்ந்து நாடாளுமன்றக் கடமைகளை மேற்கொள்வார். ஆகையால், நாடாளுமன்றத்தின் முழு அதிகாரமும், சபாநாயகருக்கே உண்டு என, கரு ஜயசூரிய தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.  

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் ஒருவேளை கூட்டப்பட்டிருந்தால், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை உள்ளது. அதற்கான ​நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்து, நாடாளுமன்றில் மாபெரும் குழுப்ப நிலைமையை உருவாக்கியிருந்த கருஜயசூரியவினால் முடிந்திருக்கும் ​என்று தெரிவித்த அவர், கருஜயசூரியவின் அடுத்த கட்ட நடவடிக்கையை தாங்கள் அறிந்திருந்தோம் என்றார்.  

14ஆம் திகதி நாடாளுமன்றில் என்ன? என்ன செய்ய வேண்டும் என்பது நன்கு திட்டமிடப்பட்டிருந்தது. நாடாளுமன்ற அமர்வை நேரடியாகக் கண்காணிக்க சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததோடு, குறித்த தினத்தில் சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளர்களையும் இலங்கைக்கு அழைத்துவரத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறினார். 

நாடாளுமன்றம் கூடும்போது இரத்த ஆறு ஓடுமென ஐ.தே.கவினர் அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது. ஆகவே, அன்றையதினம் நாடாளுமன்றத்தைக் கூட்டியிருந்தால், நாடாளுமன்றில் அசாதாரண நிலைமைகளை ஏற்படுத்தி, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டிருக்கும். இதனால், நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர, ஜனாதிபதிக்கு மாற்றுவழி இருக்கவில்லை எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .