2025 ஜூலை 09, புதன்கிழமை

ஜனாதிபதியின் வர்த்தமானிக்கும் தேர்தல்கள் ஆனைக்குழுவுக்கும் 2 இடைக்கால தடை

Editorial   / 2018 நவம்பர் 14 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல், பா.நிரோஸ்

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ள உயர்நீதிமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம்,  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, டிசெம்பர் மாதம் 07ஆம் திகதி வரையிலும் தற்காலிகமாக இடைநிறுத்தி, நேற்று (13) உத்தரவிட்டது. வழக்கு விசாரணை நிறைவடையும் வரையிலும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு எதிராக, தடையுத்தரவு பிறப்பித்துள்ள உயர்நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பு, டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி வழங்கப்படும் என்றும் அறிவித்தது.   

இதேவேளை, ஜனாதிபதியின் வர்த்தமானியின்படி, பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இடைக்காலத் தடையுத்தரவு பற்றிய மேற்படி வழக்கின் விசாரணைகள், டிசெம்பர் மாதம் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும், உயர்நீதிமன்றம் அறிவித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளைக்கமைய, நாடாளுமன்றம் கடந்த 9ஆம் திகதி இரவு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்தக் கட்டளைகள் அடங்கிய விசேட வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி, 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.   

அந்த மனுக்கள், பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, கடந்த இரண்டு நாள்களாக விவாதிக்கப்பட்டது.   
அதனடிப்படையிலேயே மேற்படி தீர்ப்பு, நேற்று (13) மாலை 5:55க்கு வழங்கப்பட்டது. அதனையடுத்து, ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள், கொழும்பில் பட்டாசு கொளுத்தி ஆரவாரஞ் செய்தனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலைச் சவாலுக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், பல சிவில் அமைப்புகள் உள்ளடங்கலாக, 13 ​அடிப்படை உரிமை மனுக்கள், நேற்று முன்தினம் (12) தாக்கல் செய்யப்பட்டிருந்தன.   

வர்த்தமானிக்கு ஆதரவாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி. எல். பீரிஸ், சட்டத்தரணி பிரேமநாத் சீ. ​தொலவத்த, பேராசிரியர் சன்ன ஜயசுமன,அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஆறு இடையீட்டு மனுக்களை, நேற்று (13) தாக்கல் செய்திருந்தனர்.   

சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாய்மூலமான முன்வைப்புகளை அடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பொன்றை வழங்குவதற்காக, வழக்கின் அமர்வு நேற்று மாலை 5 மணிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.   

மனுதாரர்கள் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்தரணிகள், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசமைப்புக்கு முரணானது எனத் தங்களுடைய வாதங்களை முன்வைத்தனர். எனினும், அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி விடுத்தார் என, சட்டமா அதிபர், நீதிமன்றத்தில் வாதிட்டார்.   

வாதப்பிரதிவாதங்களை அவதானித்த பின்னரே, மூன்று நீதியரசர்கள் குழாம். இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துத் தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் கூடி ஆராய்ந்தனர்.
(படப்பிடிப்பு: நிமலசிறி எதிரிசிங்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .