2026 மே 04, திங்கட்கிழமை

ஜெனீவா அழுத்தங்களுக்கு ’இலங்கை அடிபணியாது’

R.Maheshwary   / 2021 மார்ச் 29 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திர நாடான இலங்கையால் ஜெனீவா அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தனியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜெனீவா அழுத்தங்களுக்குப் பயமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. அத்துடன், இறைமையுள்ள நாடு என்றவகையில் ஒருபோதும் அடிபணியாது என்றார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் வழங்கிய முக்கியத்துவத்தைக் கடந்த அரசாங்கம் குறைத்ததாலேயே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதெனத் தெரிவித்த அவர், இதுவே ஆணைக்குழுவின் ஒவ்வொரு பக்கங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்றார்.

மாத்தறை- பிட்டபத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற கிராமத்துடன் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியுற்றது மாத்திரமின்றி, சர்வதேசத்துக்குச் சென்று ஜெனீவாவின் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி, நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத்தை முற்றாகச் சீரழித்தனர்.

ஆனால், இணை அனுசரணை வழங்குவதிலிருந்து நாம் விலகியமையை அடுத்தே, எமக்கெதிராக இன்று செயற்படுகின்றனர். ஆனால், ஜெனீவாவின் அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகம் கொடுப்போம்.

  
வேறு நாடுகளின் புதிய லிபரல் கொள்கையைப் பரப்புவதற்கு அல்லது இந்து சமுத்திரத்தின் பலம் பொருந்திய நாடுகளின் போராட்டங்களுக்குள் அகப்படுவதற்கான தேவை எமக்கில்லை. எனது ஆட்சி காலத்தில் எதிர்கொள்ள நேரிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் திருத்துவதற்கு முயன்றதால் ஏற்பட்டவை என்றார். 

கடந்த அரசாங்கத்தில் கிராமங்கள் அமைக்கும் வேலைத்திட்டத்தில் காடுகளின் மத்தியில் கிராமங்களை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக கேகாலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்போது அழிக்கப்பட்ட மரங்கள் தொடர்பில் எவ்வித கதையும் இல்லை என்றார்.
'உலகில் உணவு பாதுகாப்பு இன்று மிகவும் முக்கியமானது. அது எமக்கும் மிகவும் முக்கியமானது. அதற்கு நாம் தயாராகவில்லை என்றால் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும்' என்றார்.

அத்துடன், அதிகாரப் பிரிவினை என்று கூறி, மீண்டும் பிரிவினைவாதத்தைக் கொண்டு வந்து, நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க தயாரில்லை.  இன்று எமது செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பாரிய போலி பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், அன்று மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கச் செய்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .