2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தனியார் அனல்மின் நிலையங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முஸ்தீபு

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சாரத்தின் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில், தனியார் அனல் மின்நிலையங்கள் சிலவற்றைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்தார்.  

'முதற்கட்டமாக, மூன்று அனல் மின்நிலையங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.  100 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புத்தளம் ஹெலதனவி அனல் மின்நிலையம், எம்பிலிப்பிட்டிய அனல்மின் நிலையம் மற்றும் 60 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாத்தறை எஸ் அனல்மின் நிலையம் ஆகியவற்றையே, அவசரத் தேவையின் பிரகாரம் கொள்வனவு செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளது' என அவர் மேலும் கூறினார்.

இந்த மின் உற்பத்தி நிலையங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை, இவ்வாரத்தில் அமைச்சரவையின் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதான அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதேவேளை, 'மேற்படி மின் நிலையங்கள் மூன்றினையும் இற்றைக்கு சில காலங்களுக்கு முன்னர், குறைந்த விலையில் கொள்வனவு செய்திருக்கும் வாய்ப்பு இருந்தது' என்று  குறிப்பிட்ட இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாரச்சி, 'பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலையீடு இன்மையால், அவற்றைக் கொள்வனவு செய்ய முடியாமல் போனது' என்றும் சுட்டிக்காட்டினார்.

'எவ்வாறாயினும், தொழில்நுட்பக் காரணங்களால், எம்பிலிபிட்டிய அனல் மின்நிலையத்தைக் கொள்வனவு செய்வது தொடர்பில் எமது சங்கம் பரிந்துரை செய்யாது. எதிர்வரும் நாட்களில், இலங்கை எதிர்நோக்கக்கூடிய வரட்சியான காலநிலை காரணமாக, நீர் மின் உற்பத்தி ஸ்தம்பிதமடையும். இதன்போது, மேற்படி மின்நிலையங்களின் சேவை, தேசிய மின் கட்டமைப்புக்கு அவசியம் தேவை' என அதுல வன்னியாரச்சி மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .