2025 ஜூலை 09, புதன்கிழமை

’நாடாளுமன்றின் அதிகாரங்கள் ஜனாதிபதியால் பிடுங்கப்பட்டுள்ளன’

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டாமென கரு வேண்டுகோள் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை, நிறைவேற்று அதிகாரப் பிரிவு (ஜனாதிபதி) பிடுங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்வுறுப்பினர்களின் அதிகாரங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக, அறிக்கையொன்றை நேற்று (11) வெளியிட்டே, இவ்விமர்சனத்தை அவர் வெளியிட்டார்.

இலங்கையின் அரசியல் நெருக்கடி தொடர்பில், ஆரம்பத்தில் மென்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய முன்னாள் சபாநாயகர் கரு, அதன் பின்னர், நாடாளுமன்றம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இணக்கமான நிலைப்பாடு வராததைத் தொடர்ந்து, கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில், நாடாளுமன்றம் நிலைப்பாட்டை வெளிப்படுத்த, ஜனாதிபதி மறுத்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டிய சபாநாயகர், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பை உயர்நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியதோடு, உயர்நீதிமன்றமே இவற்றின் சட்டபூர்வத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமெனக் கோரினார்.

இவற்றின் பின்னணியில், அரசமைப்பைப் பாதுகாப்பதாகச் சத்தியப்பிரமாணம் எடுத்துள்ள அரச அதிகாரிகள், அந்தச் சத்தியப்பிரமாணத்தை மீள ஞாபகப்படுத்த வேண்டுமெனக் கோரிய அவர், "எந்த ஒரு தனிநபருக்கும் அல்லது அதிகாரமிக்க ஒரு பதவிக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தாமல், இந்த ஆவணத்துக்கு (அரசமைப்புக்கு) ஏன் விசுவாசமாக இருக்க வேண்டுமெனக் கோருங்கள்" எனத் தெரிவித்தார்.

இலங்கையின் அரச கட்டமைப்புகள் அனைத்தும், ஜனாதிபதிக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பின்னணியில், ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிடாமல், ஜனாதிபதி குறித்த எச்சரிக்கையாகவே, இக்கருத்து அமைந்துள்ளது. "சட்டவிரோதமான உத்தரவுகள் எவரிடமிருந்து வந்தாலும், அவற்றை நிறைவேற்ற மறுக்குமாறு, அரச ஊழியர்களை நான் கோருகிறேன்" என, அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம், எதிர்வரும் 14ஆம் திகதி கூடவிருந்த போது, ஜனாதிபதி உரையாற்றுவதற்குச் சபாநாயகர் மறுப்பை வெளியிடுவார் என, புதிய வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சரத் அமுனுக குற்றஞ்சாட்டியமை பற்றியும் இதன்போது பதிலளித்த முன்னாள் சபாநாயகர் கரு, அதை "கற்பனை" என வர்ணித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .