2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பிணைமுறி விவகாரம்: கோப் அறிக்கை மீது இன்று விவாதம்

Gavitha   / 2017 ஜனவரி 24 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில், அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் இன்று(24) இடம்பெறவிருக்கின்றது. 

நாடாளுமன்றம், இன்று காலை 9:30க்கு கூடும், சபையின் பிரதான நடவடிக்கைகள் மற்றும் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் நிறைவடைந்ததன் பின்னர் இந்த விவாதம் இடம்பெறவிருப்பதாக அறியமுடிகிறது.

   சபை ஒத்திவைப்பு வேளை, விவாதமாகவே இந்த அறிக்கை மீதான விவாதம் காலை 10:30 மணிமுதல் இரவு 7:30 மணிவரையிலும் இடம்பெறவிருக்கின்றது.  

இந்த அறிக்கை, கோப் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியினால், கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.   54 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், சுமார் 2,000 பக்கங்களைக் கொண்ட இணைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

26 பேர் கொண்ட இந்தக் கோப் குழுவின் இறுதி அறிக்கையில், அடிக்குறிப்புகளுடன் கூடிய அறிக்கைக்கு, 16பேர் கையொப்பமிட்டிருந்தனர். அடிக்குறிப்பு இல்லாத அறிக்கைக்கு 9 பேர் கைச்சாத்திட்டிருந்தனர். இக்குழுவின் உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, இரண்டிலும் கைச்சாத்திட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மத்திய வங்கியில், 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் வரை, பிணை முறிகள் விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 1.6 பில்லியன் ரூபாய் மோசடிகள் தொடர்பிலேயே, கோப் குழு விசாரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

ஜனாதிபதி ஆணைக்குழு 

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி புலனாய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக, ‘ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவை’ நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.    உயர்நீதிமன்ற நீதியரசர், மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் கணக்காய்வு நிபுணர் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்கப்படவுள்ளன. 

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளியிடப்படவுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் விதந்துரைகளுடனான அறிக்கை மூன்று மாதத்தினுள் நிறைவுசெய்யப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெற்றிபெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு தொடர்புடைய தரப்புக்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .