2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பிளவுக்கு இடமில்லை: ஹக்கீம் சூளுரை

Niroshini   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை வளர்த்தெடுத்த பல்லாயிரக்கணக்கானோர் இந்த அரங்குக்கு வெளியே இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான போராளிகள் கவலையோடு இருக்கின்றனர். இந்த இயக்கத்துக்குப் பங்களித்த தாய்மார்கள், சகோதரிகள் யாருமே இங்கு கலந்துகொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றார்கள். இவ்வாறானதொரு நிலையில், இந்த இயக்கத்தைப் பிளவு -படுத்துவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” என்று, காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“காங்கிரஸின் உயர்பீடத்துக்கான தெரிவு நடைபெற்ற போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்த விவகாரம், பக்கத்தில் இருந்த எங்களுடைய முன்னாள் செயலாளர் நாயகம் சகோதரர் ஹசன் அலி,  என்னுடைய பெயரைப் பிரேரித்தார். அதற்காக நான் ஆனந்தம் அடைந்தேன். இன்று அவர் மேடையில் இல்லை. அதற்கான காரணங்கள் குறித்து இங்கு நான் பேச வரவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 27ஆவது மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், பென்குவேட் ஹோலில், நேற்று (12) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“பேராளர் மாநாட்டில், பெரிய பூகம்பம் வெடிக்கின்ற மாதிரி கதைகள் கட்டப்பட்டிருந்தன. இந்தப் பேரியக்கத்தைப் பலவீனப்படுத்த நினைக்கின்ற பல சக்திகள் வரிந்துகட்டிக்கொண்டு இருக்கிற ஒரு கட்டத்தில்தான் நாங்கள் உறுதியோடும் மிகுந்த நேயத்தோடும் பலவிதமான புல்லுருவிகளிடமிருந்து பாதுகாக்கின்ற ஒரு கட்டம் வந்துள்ளோம்.

கடந்த கால, பேராளர் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிகளே,  குறைந்தது 2 அல்லது 3 மணித்தியாலங்கள் கடந்துதான் ஆரம்பமாகும். ஆனால், இன்றைய (நேற்றைய) மாநாட்டு மண்டபம், காலை 9 மணிக்கே நிரம்பி வழிந்திருந்தது.

சபை நிரம்பி வழிகின்ற நிலவரத்தை இன்று நாங்கள் பார்த்தோம். இதற்குக் காரணம் வேறு எதுவும் அல்ல. இந்தக் கட்சி குறித்த கவலை. இந்த இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு. இந்த இயக்கத்துக்கு எதிராகக் கிளம்பியிருக்கின்ற புல்லுருவிகளுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்கின்ற அந்த நோக்கமாகும்.

மத்தியிலே அரசாங்கத்தில் பலமான நிலை. மாகாண அரசாங்கத்தில், கிழக்கிலே ஆட்சியின் அத்தனை சுக்காணமும்  எங்களுடைய கைகளில். இந்தத் தருணத்தில் இந்தக் கட்சியைப் பலவீனப்படுத்தலாம் என்று கூறப்பட்டிருக்கின்ற இந்தக் கூட்டம், எந்தக் கனவோடு இதைச் செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள் என்று பார்க்கின்ற போது, இந்த இயக்கத்துக்கு உள்ளே இருந்து இதைப் பலவீனப்படுத்துவதற்கு முயற்சித்தவர்கள் சம்பந்தமாக நான் இங்கு எதையும் பேச விரும்பவில்லை.

மிகுந்த அடக்கத்தோடும் திறந்த மனதோடும் எங்களின் உள் விவகாரங்களை முழுமையாக அலசுகின்ற,  எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பேசுகின்ற எதிர்நோக்குகின்ற சவால்களைக் கூட்டாகத் தீர்ப்பதற்கானதொரு முயற்சியில் இறங்குவதற்கு இந்தக் கட்சி தயாராகிவருகின்றது.

இந்த இயக்கம் பற்றி, திறந்த மனதோடு, நிறைய விடயங்களை நேற்று பேசியது. இன்றும் பேச வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால், எல்லாவிடயங்களையும் நாங்கள் சந்தியில் போட்டு, சந்தி சிரிக்கின்ற மாதிரி பேசுகின்ற இடமாக இந்தப் பேராளர் மாநாட்டை நான் மாற்ற விரும்பவில்லை.

இந்த இயக்கம் வாழ வேண்டும் என்பதில் அவர்களுக்கு இருக்கின்ற பேர் ஆர்வம், நாங்கள் அவர்களது காலடிக்குப் போகின்ற போது ஒவ்வொரு தடவையும் உணர்கின்ற விடயம் இதுவாகும்.

இந்நிலையில்தான், இன்று நாங்கள் சில முக்கியமான தீர்மானங்களை எடுத்திருக்கிறோம். அந்தத் தீர்மானங்கள் வேறு எதற்கும் அல்ல. இந்த இயக்கத்தைப் பாதுகாப்பதற்கென்று  ஒருசில அதிகாரங்களில் மாற்றத்தைச் செய்தே ஆக வேண்டும்.

கட்டாயத்தின் பால் அந்தத் தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம். அதற்கு ஏற்றபடியாக யாப்புத் திருத்தங்களை முன்மொழிந்து, இன்று நாங்கள் அதை நிறைவேற்றியிருக்கின்றோம்.

என்னுடைய பக்க நியாயங்களை நான் திறந்த மனதோடு, என்னுடைய கட்டாய உயர்பீடக் கூட்டத்தின்போது நான் பகிர்ந்துகொண்டு இருக்கின்றேன்.  

இவ்வளவு தூரம் அதிகாரம் இருக்கின்றதொரு சந்தர்ப்பத்தில் இந்த இயக்கத்தை மாத்திரமல்ல, இன்று ஆட்சியிலே இருக்கின்ற எல்லாக் கட்சிகளையும் நிறைய சவால்கள் சூழ்ந்திருக்கின்றதொரு காலகட்டம்.  

கட்சிகளுக்குள்ளே நிறையக் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடக்கின் ஒரு நிலவரம். நாளும் பொழுதும் அதை நாங்கள் பார்க்கின்றோம். எங்களுடைய கட்சிக்கு மட்டும் விதிவிலக்கான பிரச்சினைகள் அல்ல.

ஆனால், எங்களுடைய கட்சிக்குள்ளே பூதாகரமாகப் பிரச்சினைகள் இருப்பதைப் போன்று,வெளியிலே காட்ட முயற்சிக்கின்ற சக்திகளுக்கு நாங்கள் தீனி போட வேண்டிய அவசியம் கிடையாது. எனவே,  மிகத் திறந்த மனதோடு விடயங்களைப் பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது.

கட்சிக்குள்ளே பேச வேண்டிய விடயங்களை வெளியிலே பேசித் தாங்கள் தோண்டிய குழியில், தாங்களே விழுந்திருக்கின்ற நிலவரங்கள் ஒரு சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அதற்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். வேதனையோடு பேசுகின்றேன். யாரையும் ஒதுக்கி வைக்க வேண்டும், தூர வைக்க வேண்டும், கட்சியிலிருந்து துரத்த வேண்டும் என்ற உணர்வோடு இந்தத் தலைமை எதையும் செய்யவில்லை.

ஆனால், சற்றுப் பொறுமை தேவை, இன்றிருக்கின்ற இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு, இன்று எங்களைச் சூழ்ந்திருக்கின்ற எதிரிகளை, எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்கு எங்களைத் தயார்படுத்துவதற்கு சட்ட ரீதியிலான சில அதிகாரங்களை ஆக்கிக்கொள்ள வேண்டும். அதற்குத் தலைமையை நீங்கள் பலப்படுத்த வேண்டும். இந்த வேண்டுகோளைத்தான் இன்றும் முன்வைக்கின்றேன்.

என்னுடைய கடைமை இந்த இயக்கத்தை இதுவரை காலமும் நடத்தி வந்தவன் என்ற அடிப்படையில், அதிகாரத்தில் இருக்கின்ற போதுதான் இந்தக் கட்சியைக் கூறு போடுவதற்கு என்று நாளாபுறமும் இருக்கின்ற பலவிதமான சக்திகள் வெவ்வேறு விதமான விமர்சனங்களோடு வருகிறார்கள்.

இன்று கூலிக்கு எழுதுகின்ற கூட்டங்கள் அதிகரித்துவிட்டன. இன்று தாராளமாக மு.காவின் உள் விவகாரங்கள் நாளும்பொழுதும் அலசப்படுகின்ற விடயமாக மாறியுள்ளது. இவற்றுக்கெல்லம் கூலிப் படைகள் என்று நிறையப் பேர் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ நாங்களும் ஆத்திரப்பட்டு, ஆவேசப்பட்டு பல விடயங்களை அள்ளிக்கொட்டுவதன் மூலம் இந்த விடயங்கள், பூதாகரமாகப் போவதைக் காணலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இந்த இயக்கம்,மக்கள் மத்தியிலே பலமாக இருக்கின்றது என்பதற்கான பல ஆதாரங்கள் இருக்கின்றன.

வாரிசு உரிமைச் சொத்தாக இந்த இயக்கம் இருந்தது கிடையாது. ஆனால், அதற்காக வாரிசுகள், புதுப்புது தலைப்புகளிலே, இந்த இயக்கத்துக்குச் சவால் விடுகின்ற புதுவிதமான கூத்துக் கும்மாளங்கள் நடக்கின்ற நிலவரங்களையும் நாங்கள் பார்க்கின்றோம். அதைப் பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. இதிலே தாராளமாக எல்லோருக்கும் இடமிருக்கின்றது. யாருக்கும் நாங்கள் இடம் மறுக்கவில்லை.

எப்போது இந்தக் கட்சிக்கு ஆபத்து வருகின்றதோ அப்போது கட்சியைப் பாதுகாப்பது தலைவர்கள் அல்ல, மக்கள் போராளிகள்.

என்னைப் பொறுத்தமட்டில் தலைமைகள் வரலாம் போகலாம். நாங்கள் யாரும் நித்தியமாக இங்கு இருக்கப் போகின்றவர்கள் அல்ல. ஆனால், இந்த இயக்கம் நேர்மையான தலைமைகளின் கைகளுக்கு மாற வேண்டும். நேர்மையாக அதற்கான தேவைகள் வருகின்ற போது, தாராளமாக அதைத் தட்டில் வைத்து தாரைவார்க்க நான் தயாராக இருக்கின்றேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X