2026 ஜனவரி 21, புதன்கிழமை

பசறை விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும் ஆயர் பொறுப்பேற்பு

Kogilavani   / 2021 மார்ச் 28 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

பசறை பதின்மூன்றாம் கட்டைப் பகுதியில், கடந்த சனிக்கிழமை(19) இடம்பெற்ற  கோர விபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் குடும்பத்தாரின் விருப்பத்தின்பேரில் பதுளை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய  வின்சன் பெர்னாண்டோ அடிகளார் பொறுப்பேற்றுள்ளார் என்று, குறித்த பிள்ளைகளின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

ஈயூனியா (09 வயது), ஆரோன் (08 வயது) இவாஞ்சலினா (04) ஆகிய மூன்று பிள்ளைகளையே, ஆயர் பொறுப்பேற்றுள்ளார்.

மேற்படி விபத்தில்,  அந்தனி நோவா - பெனடிக் மெடோனா தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்த நிலையில் அவர்களது மூன்று பிள்ளைகளும் நிர்க்கதிக்கு உள்ளாகினர்.

பாட்டனார், பாட்டி மற்றும் உறவினர்களின் அரவணைப்பில் மேற்படி சிறுவர்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்படி மூன்று பிள்ளைகளையும் வைத்தியர் ஒருவர் பொறுப்பேற்கவுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில், குறித்த வைத்தியரிடம் சிறுவர்களை ஒப்படைப்பதற்கு, சிறுவர்களின் உறவினர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, பதுளை மாவட்ட கத்தோலிக்க மறைமாவட்ட  ஆயர்,  சிறுவர்களை பொறுப்பேற்றுள்ளார். 

மேற்படி சிறுவர்கள் தமது பாட்டனாரான செபஸ்டியன் பெனடிக் (வயது 70),  பாட்டி ஐயாசாமி செல்வநாயகி (வயது 63) ஆகியோரின் அரவணைப்பில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர். 

இந்தக் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகள், அத்தியாவசியத் தேவைகளை, பதுளை மறைமாவட்ட ஆயரின் ஆதரவில், லுணுகலை புனித லூர்து அன்னை ஆலய பங்குதந்தையூடாக முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சிறுவர்கள், லுணுகலை இராமகிருஷ்ணா இந்து கல்லூரியில் கல்வி கற்று வருகின்றனர். 

இப்பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கும் குடும்ப வாழ்வாதாரத் தேவைகளுக்கும் உதவுவதற்கு முன்வருவோர் ஆயரினால் மேற்கொள்ளப்படவிருக்கும் அறக்கட்டளை நிதியத்தினூடாக உதவ முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X