2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பட்டதாரியான கைதி முதுகலைக்கு விண்ணப்பம்

Gavitha   / 2017 ஜனவரி 10 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளங்கலைப் பட்டப்படிப்பை (பீ.ஏ) நிறைவு செய்துள்ள மரண தண்டனைக் கைதியான முன்னாள் உப-பொலிஸ் பரிசோதகர் பீ.ஏ. லக்மினி இந்திக பமுனுசிங்ஹ, முதுகலைப் பட்டப்படிப்புக்காக விண்ணப்பித்துள்ளார் என்று, வெலிக்கடை சிறைச்சாலைத் தகவல் தெரிவிக்கின்றது.  

பம்பலப்பிட்டி, கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் படுகொலை வழக்கில், இவருக்கும் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக பயன்றுகொண்டிருந்த போதே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

இலங்கை சிறைச்சாலைகள் வரலாற்றில். கைதியொருவர் பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளமை ஓர் அருஞ்செயலாகும் என்றும் திணைக்களம் அன்று அறிவித்திருந்தது.  

வெலிக்கடை சிறைச்சாலையின் செப்பல் வார்ட் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர், ஒரு மேன்முறையீட்டு கைதியாவார் பட்டமளிப்பு விழா, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 5ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.  

2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ஆம் திகதிக்கும் அதேயாண்டு மே மாதம் 22ஆம் திகதிக்கு இடையில் பம்பலப்பிட்டிய பகுதியில் வைத்து மொஹமட் சியாம் கடத்திச்செல்லப்பட்டார். பின்னர் அவர், தொம்பே பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். 

இந்தப் படுகொலை வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய (தலைவர்), குசலா சரோஜினி வீரவர்தன மற்றும் அமேந்தர செனவிரத்ன ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டது. 

இந்தப் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அறுவருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதில், முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகனான ரவிந்து குணவர்தன மற்றும் முன்னாள் உப-பொலிஸ் பரிசோதகரான பீ.ஏ. லக்மினி இந்திக பமுனுசிங்ஹ (நேற்று பட்டம் பெற்றவர்) உள்ளிட்டோரும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இதேவேளை, குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, ரோயல்பார்க் படுகொலை தொடர்பில், வாழ்நாள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜூட் ஜயமஹா, வெளிவாரி பட்டப்படிப்புக்கான பரீட்சையில் தோற்றுவதற்காக கல்விபயிலுகிறார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .