Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 13 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் என்று மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டார்.
எம்.பிக்களுக்கான சரியான விலை ஜனாதிபதிக்கே தெரியும் என்கிறார்
எம்.பி படுகொலை பற்றித் தெரிந்திருந்தால் சொல்லியிருக்கலாம்
நாட்டை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை
ஜனநாயகத்தை பலப்படுத்தும் அரசமைப்பொன்று தேவை
இன்று இந்த நாடு, சிக்கலானதும் கொந்தளிப்பானதும், துரதிர்ஷ்டமானதுமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதென்றும் இதனைக் காப்பாற்றி, நாட்டுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் நல்லதோர் எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாக, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில், அவர் நேற்று (12) விடுத்துள்ள, விசேட அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“ஒரு நாட்டின் அடிப்படைச் சட்டம் மாத்திரமன்றி, ஜனநாயகம் மற்றும் ஒழுக்கப் பண்பும் சரிவடைந்து வரும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இவற்றால், எமது நாட்டின் எதிர்காலமும் எதிர்காலச் சந்ததியின் எதிர்காலமும், சிரேஷ்ட இனத்தின் எதிர்காலமுமே, இவ்வாறு அழிவடைந்து வருகின்றது.
“இப்போது இந்த நாட்டின் பிரதான பிரச்சினை, யார் பிரதமர் பதவியை வகிப்பதென்பதோ யார், ஜனாதிபதிப் பதவியை வகிப்பதென்பதோ, அல்லது யார் அமைச்சுப் பதவிகளை வகிப்பதென்பதோ அல்ல. மாறாக, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதா, இல்லையா என்பதும் நாட்டின் சட்டத்தைப் பாதுகாப்பதா இல்லையா என்பதும், நாட்டின் மதிப்பைப் பாதுகாப்பதா, இல்லையா என்பதும், நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதா இல்லையா என்பதே இங்குள்ள பிரச்சினைகளாகும்.
“மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டுக்குள் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும், இறைமையுள்ள சமூகத்தையும் ஏற்படுத்தவே, கடந்த 2015 ஜனவரியிலும் 2015 ஓகஸ்டிலும், மக்கள் ஆணை வழங்கப்பட்டது. அந்த ஆணையின் பிரகாரம் நாமும் செயற்பட்டோம். நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டும், கட்சி பேதங்களை மறந்துச் செயற்படத் தொடங்கின. இதன் மூலம், மக்களைப் பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். இதனால், அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்கினோம். இன்று, அந்த நிலைமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.
“கடந்த காலங்களில், நான் பல சவால்களையும் மன வேதனைகளையும் அனுபவித்தேன். என்னை அவமதித்தனர். திட்டினர். இருப்பினும், நான் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், பொறுமையாகவும் ஒழுக்கம் சார்ந்தும் முகங்கொடுத்தேன். காரணம், நான் எப்போதும், மக்கள் ஆணையை மதித்தேன். ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளும் கூட, அப்படித்தான் நடந்துகொண்டன.
“இந்தப் பொறுமையும் அடக்கமும் தான், இந்த நாட்டை வெற்றிகரமாகக் கொண்டுசெல்ல வழிவகுத்தது. அது, இலகுவான காரியமல்ல. இருப்பினும், கடந்த இரண்டு வாரக் காலப்பகுதியில், இந்த நாடு முகங்கொடுத்த விடயங்களைப் பற்றிப் பாருங்கள். நாடொன்றை, மிகவும் பொறுமையாகவும் அடக்கமாகவும், பொறுப்புணர்வுடனும் தான் கொண்டுநடத்த வேண்டும்.
“எனது அரசியல் வாழ்க்கையை, எப்போதுமே ஜனநாயகத்தோடு தான் மேற்கொண்டு வருகின்றேன். தனிப்பட்ட விடயங்களில், எப்போதுமே நான் அரசியலைக் கலந்துகொள்ளவில்லை. இரண்டு சந்தர்ப்பங்களில், என்னுடைய தனிப்பட்ட விடயங்களை மறந்து, ஜனாதிபதி வேட்பாளர் பதவியைத் துறந்தேன். ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய சந்தர்ப்பங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளுமாறு, எனக்கு அழைப்புகள் கிடைத்தன. இருப்பினும், என்னுடைய தனிப்பட்ட வெற்றிக்காக, நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை. அதனால், அந்த அழைப்புகளை நிராகரித்தேன். அனைத்து விடயங்களுக்கு மத்தியிலும், ஜனநாயகத்தைப் பாதுகாத்தேன். இன்றுப் பாதுகாத்துக்கொண்டு இருக்கிறேன். அதேபோன்று, ஜனநாயகத்துக்காக முன்னிற்கும் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு வருகிறேன்.
“கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில், நாட்டுக்காக பொறுமை காத்தேன். எந்தவொரு நிலைமையிலும், மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தேன். இருப்பினும், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியன்று, ஜனநாயக விரோத முடிவொன்றை, ஜனாதிபதி எடுத்தார். மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்பட்டார். மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவுக்கு, மீண்டும் அதிகாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்தார். அதற்காக, நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார். அவ்வாறான சந்தர்ப்பத்திலும், அரசமைப்பைப் பாதுகாக்க, நாம் முனைந்தோம். அரசமைப்புப் பிரகாரம் செயற்படுங்கள் என்று, அப்போது நாம் கூறினோம். அரசமைப்பின் 42ஆவது உறுப்புரையின் 4ஆவது பிரிவிலும், இவ்வாறு தான் கூறப்பட்டுள்ளது.
“ஜனாதிபதியின் கருத்துப்படி, நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை அதிகம் வென்ற நாடாளுமன்ற உறுப்பினரையே, பிரதமராக நியமிக்க வேண்டும்."
“அந்த வகையில், நாடாளுமன்றத்தில், 116 உறுப்பினர்கள், சபாநாயகரைச் சந்தித்து, ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானதெனச் சுட்டிக்காட்டினர். மேலும் 8 பேர், தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி, சபாநாயகருக்கு இந்த விடயம் குறித்துத் தெரிவித்தனர். அதன்போது, நாடாளுமன்றம் கூடுமிடத்து, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று, சபாநாயகர் தெரிவித்திருந்தார். அது தவறில்லை. உலகில், நாடாளுமன்றக் கலாசாரத்தை சரியாக அறிந்தவர்கள், இதுவே சிறந்த வழியென்றுக் கூறுவர். கடந்த ஏப்ரல் மாதத்தில், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும், எனக்கே பெரும்பான்மை இருக்கின்றதென்பது உறுதி செய்யப்பட்டது.
“இவ்வாறானதொரு நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான நாள் அறிவிக்கப்பட்டு, அதற்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் போது, அரசமைப்புக்கு முரணான வகையில், ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது.
“நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சம்பவம் பற்றி, ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த விலைகள் தொடர்பான உண்மைத் தன்மையை நன்றாக அறிந்தவரும் அவரே தான். காரணம், எங்களுடைய பக்கத்தில் இருந்த சிலரை தன்பக்கம் எடுத்து, அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளையும் வழங்கி அழங்கரித்தவர் அவரே. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு இருந்த நம்பிக்கை, தகர்த்தெறியப்பட்டு விட்டது. தம்மால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் தொடர்பான மக்களின் நம்பிக்கை சீர்குழைவதென்பது, மிகவும் துரதிர்ஷ்டமான நிலைமையாகும்.
“நாடாளுமன்றம் கூடினால், மனிதப் படுகொலைகளும் இடம்பெறக்கூடுமென, ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எமது நாட்டைப் போன்று, ஏனைய பல நாடுகளிலும், நாடாளுமன்றம் சூடுபிடித்திருந்த சந்தர்ப்பங்கள் உண்டு. இருப்பினும், உலகின் எந்தவொரு நாட்டினது நாடாளுமன்றத்துக்குள்ளும், மனிதப் படுகொலைகள் இடம்பெற்றதான வரலாறு இல்லை.
“நாடாளுமன்றத்தின் முழு நிர்வாகமும், சபாநாயகரிடமே உள்ளது. நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிகளை, அவரே பாதுகாக்கிறார்.
“கடந்த வாரத்தில், கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன்போது, இவ்வாறான படுகொலைகள் தொடர்பான எந்தவொரு கருத்தும் முன்வைக்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்வதற்கான முயற்சி தொடர்பில் ஜனாதிபதியிடம் தகவல்கள் இருந்திருப்பின், அது தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்திருக்கலாம். அப்போது, இது குறித்துக் கட்சித் தலைவர்களுடன் பேசி, உரிய நடவடிக்கைகளை, சபாநாயகர் எடுத்திருப்பார். அதுவே அவரது கடமையுமாகும். இருப்பினும், அவ்வாறான நடவடிக்கைளை எடுக்காது, தான்தோன்றித்தனமான முடிவையே ஜனாதிபதி எடுத்திருந்தார்.
“நாட்டின் அரசமைப்பு, ஜனநாயகம் மற்றும் நன்னடத்தைகளைப் புறந்தள்ளிவிட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தால், இந்த நாடு, சிக்கலுக்கு மேல் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது. எமது நாடு தொடர்பான விம்பம், முழுமையாகத் தகர்த்தெறியப்பட்டுள்ளது. ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற மரபுகளை மதித்த மக்கள் குழம்பியுள்ளனர். சர்வதேசத்தின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
“இருப்பினும், இந்த நிலைமைகளிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, ஒரு பரந்த கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதேபோன்று, ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சிகள், ஒரு புதிய அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ள எதிர்ப்பார்க்கின்றன. அதனால், ஒரு புதிய தோற்றத்துடன், மக்களுக்கு முன்னால் நாம் வருவோம்.
“கடந்த இரண்டு வார காலமாக, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிக்கலான நிலைமையால், நாட்டின் இளைஞர் சமுதாயமானது, அரசியல் குறித்து விரக்தி மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டை விட்டுச் செல்லக்கூடிய பலம் இருப்பவர்கள், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், அப்படி செய்ய முடியாத நிலைமையில், பல இளைஞர், யுவதிகள் இருக்கின்றனர். அவர்கள், தங்களுடைய எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டுள்ளனர். இது, மிகவும் வருந்தத்தக்க நிலைமையாகும்.
“இவ்வாறானதொரு துரதிர்ஷ்டமான நிலைமையிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாயின், தகர்த்தெறியப்பட்டுள்ள நம்பிக்கையை, மீளப் புதுப்பிக்க வேண்டும். ஜனநாயகத்தை பலப்படுத்தும் அரசமைப்பொன்று, இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்துவது அவசியமாகும். மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்குப் பதிலாக, அவர்களை ஒற்றுமைப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அதற்காக, அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். ஜனநாயகம், அடிப்படைச் சட்டம், நவநாகரிகம் மற்றும் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக, எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்க, நாங்கள் தயார்.
“நீங்களும் வாருங்கள், எம்மோடு இணைந்து கொள்ளுங்கள். சர்வாதிகாரத்துக்கு மீண்டும் இந்த நாட்டை ஒப்படைப்பதற்கு எதராகப் போராடத் தயாராகுங்கள்.
“ஜனநாயகவிரோத, சீர்குலைக்கும் செயற்பாடுகளால், இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. எமது வாழ்நாளில், உயிர்த் தியாகங்களுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்ட இந்த நாட்டை, அழிய இடமளிக்க முடியாது. பரந்துபட்ட கூட்டணியாக இணைந்து, சாபத்திலிருந்து இந்த நாட்டைக் காப்பதாக, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அதற்காக, அனைவரும் கைகோர்ப்போம். நன்றி” என, முன்னாள் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago