2026 மே 13, புதன்கிழமை

பஸ்கள் விபத்து: மாணவர்கள் உட்பட பலர் காயம்

Mayu   / 2026 மே 13 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற கோர விபத்தில் மாணவர்கள் உட்படப் பல பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை திக்வெல்ல பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டுள்ளன. இதன்போது, பொல்கஹமுல்ல "மியாமி" ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் பயணிகள் அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு, திக்வெல்ல மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் நிலைமை குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விபத்து காரணமாக கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் நீண்ட நேரமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த திக்வெல்ல பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வீதிகள் வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதால், வாகனங்களைச் செலுத்தும் போது சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு போக்குவரத்துப் பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .