Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 15 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
வெட்கம் இருந்தால், சட்டவிரோதமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்கம், ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டுமென, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “122 உறுப்பினர்கள் என்பது பெரும்பான்மை என்பதை யாரும் அறிவார்கள். இன்னும் பலர் எங்களுடன் இணைய இருக்கின்றனர். அதுதொடர்பில் எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது. அதனால், ஜனநாயகத்தைக் கொஞ்சமேனும் மதிப்பதென்றால், தயவுசெய்து சென்றுவிடுங்கள். கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கவேண்டாம்” என்றார்.
“மேலும், பெரும்பான்மை இருக்கும் நாங்கள், சபையில் மிகவும் ஒழுக்கமாகச் செயற்பட்டோம். மக்கள் ஆணை இருப்பதை, நாங்கள் ஒப்புவித்துள்ளோம். பொது பெரமுண என்ற குழு, இன்று அரசமைப்பை அசிங்கப்படுதியுள்ளது. ஜனநாயகம், தேசப்பற்று குறித்துக் கதைக்கின்ற இவர்களை, நாட்டின் பிரதான சட்டக்கோவையை மீறவேண்டாம் என்று கூறுகின்றோம். அதேபோன்று, சட்டவிரோத அரசாங்கத்தின் எந்த கட்டளையையும் அரச அதிகாரிகள் பின்பற்றினால், சிறைக்குச் செல்லவேண்டிவரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என, மனோ கணேசன் மேலும் கூறினார்.
இந்த ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், “எமது மனுக்களுக்கு, உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்புடன் இன்று (நேற்று 14) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற செயற்பாடுகளைப் பார்க்கும் போது, நாட்டில் குழப்பங்கள் எதனையும் ஏற்படுத்தாமல், அரசாங்கத்தை எங்களுக்கு வழங்கி, கௌரவமாகச் செல்லவேண்டும் என்ற நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிலையை, நாங்கள் சபையில் தெளிவாகக் கண்டுகொண்டோம். இதைத் தடுப்பதற்கு, போலி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சபையின் மத்திக்கு வந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை அனைவரும் கண்டார்கள்” என்றார்.
“அத்துடன், எமது உறுப்பினர்கள் எவரும், சபை மத்திக்குச் செல்லாது, மிகவும் அமைத்தியாக, கடமைகளை மேற்கொண்டனர். நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் அதேபோன்று, சட்டபூர்வமான அரசாங்கம் ஒன்று இருப்பதா இல்லையா என்று நாட்டுக்கு வெளிப்படுத்தும் செயற்பாட்டை நாங்கள் மேற்கொண்டோம். இதனை, கௌரவமான முறையில் அரசியல் செய்வதாகக் தெரிவிக்கக்கூடியவர்கள், இதற்குத் தலைசாய்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். இதனையும் விட, ஜனநாயகத் தன்மையை எங்களால் வெளிப்படுத்த முடியாது என்று நாங்கள் நம்புகின்றோம்.
“இதன் பிறகும், இந்த அராஜக நிலை வேறு பிரதேசங்களுக்கும் பரவாமல் தடுப்பதற்காக, உடனடியாக இந்த நிலையை உணர்ந்து, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, அனைத்து அரசியல் தலைவர்களும் செயற்பட வேண்டுமென, நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என, ஹக்கீம் கூறினார்.
இதேவேளை, ஆளுந்தரப்பிலிருந்து எதிர்கட்சியுடன் இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பேசுகையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், கறுப்பு வெள்ளிக்கிழமையொன்று உருவானதென்றும் ஜனநாயக விரோத முறையில், பிரதமர் மற்றும் அமைச்சரவையை நீக்கி, ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுத்து, மக்கள் ஆணை, பெரும்பான்மை தொடர்பில் எந்தவகையிலும் சிந்திக்காமல் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராகவே, தான் தீர்மானமொன்றை எடுத்ததாகவும் கூறினார்.
“அதன் பிரகாரம், இந்த அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியில் இருந்து விலகி, ஜனநாயகத்துக்காகவும் உண்மைக்காகவும் முன்னிற்க வேண்டுமென்று, இந்தத் தீர்மானத்தை நான் எடுத்தேன். அத்துடன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் போகும்போது, அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோடிக் கணக்கில் வாங்கும் வெட்கப்படும் செயலை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
“அவ்வாறு செயற்பட்டும் இவர்களால், 113 என்ற பெரும்பான்மையை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல்போனமையால் தான், நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தீர்மானம் எடுத்தனர். நாடாளுமன்றத்தைக் கலைக்க எடுத்த தன்னிச்சையான, அரசமைப்புக்கு முரணான செயற்பாட்டுக்கு, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், நாடாளுமன்றத்தைக் கூட்ட வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம், திருட்டுத்தனமாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தை விரட்டியடித்து, மக்கள் ஆணையால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் தொடர்ந்துச் செயற்பட, நாடாளுமன்றத்தால் தீர்மானிக்க முடிந்தது.
ஆளுந்தரப்பிலிருந்து எதிர்கட்சியுடன் இணைந்துகொண்ட பியசேன கமகே தெரிவிக்கையில், “கடந்த இரண்டு வாரங்களாக, நாட்டில் ஏற்பட்ட விடயங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் கவலையடைந்திருகின்றனர். நாட்டில் இருந்த ஜனநாயகம், சட்டம், நேர்மை என்பன, தொடர்ந்தும் செயற்படுமா என்ற சந்தேகம், மக்களிடம் இருந்து வந்தது. அத்துடன், அரசமைப்புக்கு முரணாக இடம்பெற்ற அனைத்துச் செயற்பாடுகள் காரணமாகவும், நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் செயலிழந்துக் காணப்பட்டன” என்றார்.
“அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க, நான் நீண்டகாலமாகச் செயற்பட்டவன். கட்சியின் உபதலைவராகவே தற்போது வரை இருந்தேன். என்றாலும், கட்சித் தலைவரான ஜனாதிபதியின் செயற்பாடுகள் காரணமாக, கட்சி சீரழிந்து மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார். இந்த நடவடிக்கையால் மிகவும் விரக்தியடைந்த நான், தொடர்ந்தும் அதில் இருப்பதில் பயனில்லை என்று தீர்மானித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் அணியில் இணைந்துகொண்டேன்” என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவிக்கையில், “நாட்டில் ஜனநாயகத்தை விரும்புகின்ற மக்கள் விரும்பக்கூடிய தீர்ப்பை, நீதிமன்றம் வழங்கியுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னர், கடந்த பல தசாப்த காலமாக, விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, அவ்வாறான நாட்டிலே சிறுபான்மை மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுக்கொண்டு, நாட்டு மக்கள், நிம்மதி, சந்தோசத்தை எதிர்ப்பார்த்து வெற்றிபெறச் செய்த ஜனாதிபதி, கடந்த 26ஆம் திகதி, மிகவும் மோசமானதொரு தவறை மேற்கொண்டார். அந்தத் தவறு, நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இவ்வாறான தவறை அவர் செய்யமாட்டார் என்று நாங்கள் நினைக்கின்றோம்.
அதேபோல், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லை என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் ஆதரவு வழங்கி, இந்த அரசாங்கத்தைத் தோற்கடித்திருக்கின்றனர். எனவே, நாட்டில் சமாதானம் நிலைபெற வேண்டுமென்றே, மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால், 122 உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, ஜனாதிபதி செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago