2025 ஜூலை 09, புதன்கிழமை

முக்கியமான வாதங்கள்

Editorial   / 2018 நவம்பர் 14 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பான ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு எதிரான உயர்நீதிமன்ற விசாரணைகளில், நேற்றும் (13), சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, குறித்த மனுக்களில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் நீதிமன்றில் ஆஜராகி, ஜனாதிபதிக்குச் சார்பான வாதங்களை முன்னெடுத்தார்.

இதன்போது சட்டமா அதிபர், 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசமைப்பின் 19ஆவது திருத்தம், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவில்லையென வாதிட்டார். நிறைவேற்று அதிகாரம், மக்களால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், அந்த அதிகாரத்தைக் குறைப்பது, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமே நடத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

அத்தோடு, ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவை விதிப்பது, “அரசமைப்பை இடைநிறுத்துவதற்கு ஒப்பானதாக அமையும்” எனவும் அவர் வாதிட்டார்.

அதேபோல், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்கும் அதிகாரம், நீதிமன்றத்துக்குக் கிடையாதென வாதிட்ட அவர், நிறைவேற்று அதிகாரத்தின் பலத்தைப் பற்றிய தீர்மானத்தை எடுக்க வேண்டியது, சட்டவாக்கப் பிரிவே தவிர, நீதிமன்றம் இல்லையெனத் தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் வாதத்தில் பிரதான கருப்பொருளாக, நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான மேலோட்டமான விளக்கத்தை வழங்கும், உறுப்புரை 33 (2), 62 (2) ஆகியன, தனியாகப் பார்க்கப்பட வேண்டுமென்றும், கலைப்பதற்குரிய நிபந்தனைகளை விதிக்கும் உறுப்புரை 70 (1)உடன் இணைத்துப் பார்க்கப்பட முடியாதெனவும் அவர் வாதிட்டார்.

சட்டமா அதிபரின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து கேள்வியெழுப்பிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டமா அதிபரின் சமர்ப்பணங்கள், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரின் முன்வைக்கப்பட்டனவா அல்லது சட்டமா அதிபர் என்ற தனது பதவியின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டனவா என்று கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சட்டமா அதிபர், ஜனாதிபதியிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்ட போதிலும், சட்ட வாதங்கள் அனைத்தும், சட்டமா அதிபர் என்ற பதவியிலிருந்து முன்வைக்கப்படுவன எனத் தெரிவித்தார்.

இடையீட்டு மனுக்களில் ஒன்றான, உதய கம்மன்பில சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா, நாட்டுக்கு எதிராக நாடாளுமன்றம் செயற்படுகிறது என ஜனாதிபதி நினைத்தால், அதற்கெதிராகச் செயற்படுவதற்கான இயலுமை, ஜனாதிபதிக்கு உண்டெனவும், ஜனாதிபதி, மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர் என்றும் தெரிவித்தார்.

இடையூட்டு மனுக்களுக்கான பதிலை வழங்கிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக-ஈஸ்வரன், 2015ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் வைத்து, அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜி.எல். பீரிஸ் ஆற்றிய உரையை ஞாபகப்படுத்தினார். அப்போது அவர், நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். ஜி.எல். பீரிஸும், இம்மனுக்களுக்கான இடையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .