2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

“ஹரக் கட்டாவை விட தேசபந்து ஆபத்தானவர்’’

Editorial   / 2025 மார்ச் 20 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘மகந்துரே மதுஷை’ விட ஆபத்தான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் புதன்கிழமை (19) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோன்  பொலிஸில் பணியாற்றும் போது, தனிப்பட்ட இலாபத்திற்காகத் தனது அதிகாரத்தைப் பரவலாகத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக வழக்குத் தொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

"அவர் ஒரு பேயைப் போல சமூகத்தில் வாழ்ந்து வருகிறார். அவர் 'ஹரக் கட்டா' மற்றும் 'மகந்துரே மதுஷ்' போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை விட மோசமானவர். அவர் தனது அதிகாரத்தை பரவலாக துஷ்பிரயோகம் செய்துள்ளார். எனவே, விசாரணைகள் முடியும் வரை அவரை பிணை இல்லாமல் சிறையில் அடைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்றும் பீரிஸ் கூறினார்.

நீதிமன்றத்தில் மேலும், உரையாற்றிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பீரிஸ் கூறியதாவது:

"கடந்த 20 நாட்களாக அதிகாரிகள் இந்த நபரைத் தேடி வருகின்றனர். இருப்பினும், அவர் பிடிபடுவதைத் தவிர்த்து, திடீரென இந்த நீதிமன்றத்தில் யாரும் கவனிக்காமல் ஆஜரானார். இது விசாரிக்கப்பட வேண்டும். அவர் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு கூட தகுதியற்றவர், ஐஜிபி பதவிக்கு ஒருபுறம் இருக்கட்டும். இது பொலிஸ் அதிகாரிகளுக்கு அவமானம்" என்று பீரிஸ் கூறினார்.

தேசபந்து தென்னகோனுக்கு எட்டு வீடுகள் சொந்தமாக உள்ளன என்றும், 2020 முதல் அவரது பெயர் வாக்காளர் பதிவேட்டில் இடம்பெறவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பீரிஸ் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தென்னகோன் சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் ஷனக ரணசிங்க, தனது கட்சிக்காரரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.

சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், பிணை தொடர்பான முடிவு மார்ச் 20ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அருண் இந்திரஜித் புத்ததாச தெரிவித்தார்.

அதன்படி, முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) தேசபந்து தென்னகோன் மார்ச் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்து, இன்று வியாழக்கிழமை (20) வரை சிறையில் அடைப்பதற்கு மாத்தறை தலைமை நீதவான் உத்தரவிட்டார்.

கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகச் சட்ட அமுலாக்கத்தை தவிர்த்து வந்த தென்னகோன், புதன்கிழமை (19)  மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X